×

வேலூர் விமான நிலையத்தில் விமான ஓடுதளம் அமைக்கும் பணி தீவிரம்

வேலூர்: வேலூர் விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஓடுதளப்பாதையில் முரம்பு மண் கொட்டும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஓடுதள பணியை முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நாடு முழுவதும் கைவிடப்பட்ட நிலையில் உள்ள சிறிய விமான நிலையங்களை சீரமைத்து பயன்பாட்டிறற்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பயணிகள் விமான சேவையில் 18 இருக்கைகள் கொண்ட சிறிய டார்னியர் ரக விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கென பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் 100 டார்னியர் ரக விமானங்கள் தயாரித்து வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்தை நவீன தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையரகம் முடிவு செய்துள்ளது. இதற்கென தமிழக அரசின் ஒப்புதலுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் 50 ஏக்கர் அரசு நிலம் வழங்கப்பட உள்ளது. விமான நிலைய மாதிரி வரைபடம் இறுதி செய்யப்பட்ட நிலையில், மண்ணின் உறுதி தன்மை, சிக்னல் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு குறித்து ஆய்வுகளை பொறியியல் குழுவினர் மேற்கொண்டு தகுதிச்சான்று வழங்கினர்.இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் ஜூலை மாதம் 28ம்தேதி விமான நிலையம் சீரமைக்கும் பணி தொடங்கியது.

ஜேசிபி, டோசர் வாகனங்கள் மூலம் புதர்கள், செடி, கொடிகள் ஓடுதள பாதையில் வளர்ந்து கிடந்த கோரைப்புற்களை முழுவதுமாக அகற்றினர். 750 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம் 1300 மீட்டராக நீட்டிக்கப்பட உள்ளது. பள்ளம், மேடாக காட்சியளிக்கும் விமான ஓடுதளப்பாதையை முரம்பு மண் கொட்டி சமன் செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘ஓடுதள பாதைக்கு தேவையான முரம்பு மண் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இதுவரை சுமார் 500 யூனிட் முரம்பு மண் கொட்டப்பட்டுள்ளது. 4 முதல் 6 அடுக்குகள் முரம்பு மண் கொட்டி வைத்து ஜேசிபி, ரோடுரோலர் ஆகியவற்றின் உதவியுடன் புதிய ஓடுதளம் உறுதியாக்கப்படும். பின்னர், நவீன தொழில்நுட்பத்தில் ஓடுதளப்பாதை அமைக்கும் பணி வரும் டிசம்பர் மாதத்திற்குள்  முடிக்கப்படும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vellore, Airport,Shoud
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...