×

கல்வித்துறைக்கு 5 ஆண்டுகளில் ஒதுக்கிய ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 716 கோடி எங்கே? கல்வித்துறையை காசு பார்க்கும் துறையாக மாற்றிய அவலம்

* சத்தமின்றி கோடிகளில் கல்லா கட்டினர்* குழப்பங்களின் மறு உருவமாக மாறிய அமைச்சர்* துக்ளக் தர்பார் நிர்வாகத்தால் மனஉளைச்சலில் சிக்கிய மாணவர்கள்* தமிழக கல்வித் துறை எத்தனையோ அமைச்சர்களை பார்த்து இருக்கிறது. ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் போல ஒரு மவுனமான மந்திரியை பார்த்ததே இல்லை என்கின்றனர் கல்வியாளர்கள். தன் துறையில் என்ன நடக்கிறது என்பதே  தெரியாமல் அவர் கொடுக்கும் பேட்டிகள் மாணவர்கள் வயிற்றில் ஆசிட் ஊற்றும் வகையிலேயே இருந்தது. அமைச்சர் பேட்டி கொடுத்த அன்றோ அல்லது மறு நாளோ செங்கோட்டையன் நிலைப்பாட்டை தகர்க்கும் வகையில் அரசின் அறிவிப்பு  ஆணை வெளியாகும். இது துக்ளக் தர்பார் நிர்வாகத்துக்கு ஒரு சிறு சாம்பிள்.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சராக நுழைந்தார் ெசங்கோட்டையன். அதுவரை கல்வித்துறையில் ஏற்படாத மெகா குழப்பங்கள், நிர்வாக சீர்கேடுகளால் ஆசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்களும்  அச்சத்திலேயே காணப்பட்டனர். மாநில அரசு எதிர்க்கும் திட்டத்தை கல்வித்துறையில் உள்ள அதிகாரிகள் சந்தடிசாக்கில் கொண்டு வந்தனர். மவுன மந்திரியாக இருந்தாலும் அதன் பின்னால் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது.  குழப்பவாதியாக மட்டுமில்லாமல், ஊழல்வாதியாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்கிறது அவரது  துறையில் பணிபுரியும் கல்வித்துறை அதிகாரிகள்.தமிழக பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வித்துறைக்கு பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியில் பெரும் ஊழல் நடந்துள்ளது. ஆனால் அதை சத்தமில்லாமல் அதிகாரிகள் துணையுடன் சாதித்துள்ளதாக கல்வித்  துறையில் உள்ள அதிகாரிகளே கூறுகின்றனர்.உதாரணமாக கடந்த 2020-2021ம் ஆண்டுக்கு ரூ.34 ஆயிரத்து 181 கோடியே, 73 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை முறையாக பயன்படுத்தியதே இல்லை. பள்ளிக் கல்வித்துறையில் தொட்டத்துக்கெல்லாம் கமிஷன்தான் என்று இந்த துறையை மாற்றி சாதனை படைக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பர், பள்ளி தளவாட கொள்முதல், அப்பாயின்மென்ட் என்று ஊழல் பட்டியல் நீளும். நொந்து நூலாகி போன நூலகத் துறை: தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரின் பொறுப்பில் தான், பொது நூலகத்துறை உள்ளது. இத்துறைக்கு ஆண்டுதோறும் ரூ.30 கோடிக்கு புத்தகங்கள் வாங்கப்படும். செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு  பதிப்பகத்தில் இருந்து புத்தகங்கள் வாங்கும் அனுமதியை அமைச்சர் வழங்க வேண்டும். ஆனால்  அதற்கு 25 சதவீத கமிஷன் தரவேண்டும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களுக்குத்தான் புத்தக சப்ளை ஆர்டர் கிடைக்கும். இதனால்  கமிஷன் கொடுக்க முடியாத சிறு பதிப்பகத்தார், புத்தக ஆர்டர் வாங்க பல மாதமாக இழுத்தடிக்கப்படுகிறார்கள். இது பதிப்பகத்தார் இடையே பெரும் கொந்தளிப்பையு–்ம் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இதனால் நூலகங்களில் தரமான  புத்தகங்கள் இல்லாமல் வாசகர்கள் திண்டாடினர். வாசகர்களுக்கு தேவையான புத்தகம் கிடைக்கவில்லை. அதற்கு பதில் நூலகத்துறை வாங்கும் தேவையில்லாத புத்தகத்தையே வாசகர்கள் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கோடிகளை குவித்த புரோக்கர்கள்: சென்னையில் ‘மயில்’ பெயரில் உள்ள ஊரைச் சேர்ந்த பதிப்பகத்தார் ஒருவரும், அதே ‘மயில்’ பெயரை தனது பெயரில் வைத்துக் கொண்டுள்ள பதிப்பகத்தார் ஆகிய 2 பேர் தான் நூலகத் துறைக்கு அதிக  கமிஷன் கொடுத்தனர். நூலகத்தில் பெரும்பாலும் அவர்களின் புத்தகம் தான் காணப்படுகிறது. அவர்கள் தான் துறையின் அமைச்சருக்கு புரோக்கராக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அவர்களை மீறி யாரும் புத்தகங்களை விற்க  முடியாது. போலியான பல முகவரிகளில் பதிப்பகங்களை நடத்துவதாக கணக்குகாட்டி கோடிக்கணக்கில் புத்தம் விற்று லாபம் அடைந்தனர். 2018-2019ம் ஆண்டு நூலகத்துக்கு புத்தகம் விற்க, பல பதிப்பகத்தார்  விண்ணப்பித்தனர். ஆனால் 2  புரோக்கர்களுக்கு மட்டுமே பல கோடி ரூபாய் ஆர்டர் வழங்கப்பட்டது.  கமிஷன் தராதவர்களுக்கு ஆர்டர் கொடுக்கவில்லை. ஆனால், ஒரு கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்  தான் எழுதிய புத்தகத்தை 1000 பிரதிகள் விற்க விண்ணப்பித்திருந்தார்.  அவருக்கு 300 பிரதிகளுக்கு மட்டுமே பொது நூலகத்துறை ஆர்டர் கொடுத்தது. இந்த ஆண்டும் பல பதிப்பகத்தார் ஆர்டர் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். புரோக்கர்கள் ஒரு எண்ணிக்கை நிர்ணயித்தால், அதைவிட கூடுதலாக பள்ளி  கல்வி துறை விஐபியின் மகன் தான் இதற்கான எண்ணிக்கை மற்றும் விலையை நிர்ணயம் செய்வதாக  பதிப்பகத்தார்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவரது மகன் கை வைக்காத இடமே இல்லையாம். அந்த வகையில் பல கோடிகளை  குவித்துள்ளார்களாம். பாடாவதியான பாடநூல் கழகம்: தமிழ்நாடு பாடநூல் கழகத்திலும் பாடநூல்கள் பதிப்பிக்க வேண்டிய ஆர்டரை வாங்க முன்னாள் அமைச்சர் வளர்மதியும், அமைச்சர் செங்கோட்டையனும் சேர்ந்தே கமிஷன் பெறுவதாக கடுமையான குற்றச்சாட்டு  எழுந்துள்ளது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் கீழ் வகுப்புகளுக்கு 3 பருவத்துக்கான பாடப்புத்தகம் அச்சடிப்பது, மேல் நிலை வகுப்புகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை புத்தகம் அச்சிடுவது என பலகோடி புத்தகங்கள் அச்சிட பதிப்பகங்களுக்கு ஆர்டர்  வழங்க கமிஷன் கொடுத்தே ஆக வேண்டும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் துறையை கையில் வைத்துள்ளவருக்கு பலகோடி கமிஷன் தொகை சென்றுள்ளது. தொடக்க கல்வித்துறை: தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 27,895 ஆரம்பப்பள்ளிகள், 9,134 நடுநிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் 28 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளின் வளர்ச்சிப் பணிக்கு மத்திய அரசின்  ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியில்,  முறைகேடு இல்லாமல், தாமதமின்றி கிடைக்க நேரடியாக பள்ளியின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. அந்த நிதியை கல்வி மேலாண்மை குழுக்கள் மூலம், அந்தந்த பள்ளி  தலைமை ஆசிரியர்கள் செலவிட வேண்டும். கடந்த 3 வருடங்களாக உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. விளையாட்டு பொருளில் லஞ்ச விளையாட்டு: அங்கன்வாடிகளில் தொடங்கி  எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு  தேவையான எல்இடி டிவி, மற்றும் பிளாஸ்டிக் பந்து, சேர், டேபிள் ஆகியவை ஒரு பள்ளிக்கு வாங்குவதற்கு ₹70 ஆயிரம் நிதி  ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட நிதிக்கு தனியார் நிறுவனங்களில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு கொடுத்து விட்டு, அதை கல்வி மேலாண்மை குழுக்கள் மூலம் தீர்மானம் போட்டு காசோலையை ஆள்பவர், அதிகாரிகள்  பெற்று செல்கின்றனர். இந்த பொருட்களின் அதிகபட்ச மதிப்பு ₹20 ஆயிரம்கூட இருக்காது. மாணவர்கள் விளையாடுவதற்கான பொருட்கள் வாங்க ஆரம்பப்பள்ளிக்கு 4 ஆயிரம், நடுநிலைப்பள்ளிக்கு ₹8 ஆயிரம் என நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியையும் கல்வி அதிகாரிகள், ஆளும் கட்சியினர் விட்டு வைக்கவில்லை. சில தனியார்  நிறுவனங்கள் மூலம் கிரிக்கெட் பேட், கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை விநியோகம் செய்து விட்டு, காசோலையை வாங்கிச் சென்றனர்.அதன் மதிப்பு ரூ.2 ஆயிரத்தைத் தாண்டாது. ஆனால் அந்த பொருட்களின்  மதிப்பை ரூ.8 ஆயிரத்திற்கு கொள்முதல் செய்ததாக கணக்கு காட்டுகின்றனர். இதிலும் தமிழகம் முழுவதும் பல கோடி ஊழல் நடந்துள்ளது.  இந்த பொருட்கள் தரமற்றதாக உள்ளதால் இதை பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு பயன்படுத்த  முடியாத நிலை உள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு ஆங்கில உபகரணப் பெட்டி வாங்க தலா ரூ.6 ஆயிரம் தரப்பட்டது. அதிலும் சில தனியார் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்து, முழுத்தொகையும் காசோலையாக பெறப்பட்டது. ஆனால் உபகரணப்  பெட்டியின் மதிப்பு ரூ.1000த்தை தாண்டாது.   இவ்வாறு நூலக புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், விளையாட்டு பொருட்கள் கொள் முதலில் அமைச்சரே நேரடியாக தொடர்–்பு கொண்டு  மத்திய அரசு நிதியில் 70 சதவீதம் அளவுக்கு  முறைகேடுகள் செய்து  பல கோடியை சுருட்டியுள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு கூறப்படுகிறது. பணி மாறுதலில் பணம்: அரசு பள்ளி  ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கவுன்சலிங் மூலம் தான் பணியிட மாறுதல்  வழங்கப்படும் ஆனால் கோவை மாவட்டத்தில்  சமீபகாலமாக கவுன்சிலிங் நடத்தாமலேயே வெளிமாவட்டங்களுக்கு  இடமாறுதல்  வழங்கப்படுகிறது. அதாவது நிர்வாக வசதிக்காக இடமாறுதல் அல்லது உபரி பணியிடம்  என ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு இடமாறுதல்கள் வழங்கப்பட்டு வருவதாக  ஆசிரியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.  இடமாறுதல் வழங்க குறைந்தபட்சம் ரூ.5  லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை  கொடுக்க வேண்டும்.   தென்மாவட்டங்களில் இருந்து மேற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு  இடமாறுதல் பெற வேண்டுமெனில் ரூ.10 லட்சம் வரை  கொடுக்க வேண்டும். இதேபோல,  கிராஸ் மேஜர் பட்டங்களை பெற்றுள்ள, பணி மாறுதலுக்கு நிராகரிக்கப்பட்ட   ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து பல லட்சங்களை துறையின் விஐபியிடம் கொடுத்தபிறகு தான்  அவர்களுக்கு பணியிட மாறுதல்  வழங்கப்பட்டது. சீருடையில் கொள்ளை: தமிழகத்தில்  கல்வியில் பின்தங்கிய, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும்  மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். இவர்களுக்கு  ஆண்டுதோறும் 4 செட் சீருடைகள்  இலவசமாக வழங்கப்படும். இதனிடையே,  சீருடை வழங்குவதில் விழுப்புரம்  மாவட்டத்தில் பல கோடிக்கு ஊழல் நடந்துள்ளது.  450 பள்ளிகளில் படிக்கும்  சுமார் 50 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு 4 சீருடை வழங்குவதற்கு  பதிலாக இரண்டு செட் சீருடை மட்டுமே  வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.  சீருடை வழங்குவதற்கான சுமார் ரூ. 5 கோடியை சுருட்டியுள்ளனர்.  இந்த  விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மீது  மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த  ஊழலில் சிக்கிய அதிகாரிகள்,  துறையின் முதல்வரை கவனித்து, வழக்கில் இருந்து மீண்டுவிட்டனர்.   கல்வித் துறையில் தொடர்ந்து சீருடையில் மட்டுமல்ல உதவித்தொகை வழங்குவதிலும்  இம்மாவட்டத்தில்ஊழல் நடந்துள்ளது.துப்புரவிலும் துடைத்தெடுத்தனர்:  புதுக்கோட்டை   மாவட்ட  பள்ளிகளில்  துப்புரவு பணியாளர்கள்  அமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு மாதம்  ரூ.1000 ஊதியம். இதிலும் ஊழல் நடந்துள்ளது. மேலும் விளையாட்டு உபகரணங்கள்   வாங்காமலேயே அந்நிறுவனத்திடம் இருந்து ரூ.5 ஆயிரம் ‘செக்’காக வாங்கினர். நாகை  மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சிக்கு தினசரி ரூ.200க்கு பதில் அனைத்து நாட்களுக்கும் சேர்த்து வெறும் ரூ.200 மட்டுமே  வழங்கினர். இது மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் புத்தகங்கள்,  தோட்டங்கள் பராமரிக்க தளவாடப் பொருட்கள், சானிடைசர், மாஸ்க்,  தெர்மல் ஸ்கேனர், கையுறைகள் உள்ளிட்டவை  மிகவும் குறைந்த அளவில் வாங்கிவிட்டு அதிகமாக  பில் பாஸ் செய்துள்ளனர். கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தருவதாக அமைச்சர் அறிவித்தார். இதுவரை ஒரு பள்ளிக்குக்கூட ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுக்கவில்லை. அந்த நிதியும் மாயமாகி விட்டது. நீட்டிலும் ‘நீட்’டாக சுருட்டல்: நீட் பயிற்சி அளித்ததற்காக பணம் வராமல் 2 தனியார் நிறுவனங்கள் விலகிக் கொண்டது. இதனால், கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி துறை விஐபியின் மகனே சொந்தமாக ஒரு கணினி நிறுவனத்தை  தொடங்கி அதன் மூலம் ஆன்லைன் பயிற்சி, நீட் பயிற்சி அளித்துள்ளதாக பகீர் தகவல்கள் வெளியானது. இதற்கான தொகை  442 கோடி மகன் நடத்திய நிறுவனத்துக்கு சென்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  காணாமல் போன கலர் பென்சில்: பள்ளி மாணவர்களுக்கு கலர் பென்சில்கள், காலணிகள் என்று 12 வகையான பொருட்கள் வழங்க 2020-2021ம் ஆண்டில் 3 ஆயிரத்து 703 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த பொருட்களை  வாங்குதில் தான் பள்ளிக் கல்வித்துறையில் பெரும் ஊழல் நடந்து பலகோடிகள் சுருட்டப்பட்டுள்ளது. அதேபோல, மடிக் கணினி, இலவச சைக்கிள் வழங்குவதிலும் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இவற்றில் மட்டும் ஆயிரம் கோடி அளவில்  சுருட்டியுள்ளனர். நிறுவனங்களிடம் இருந்து தனியாக இந்த பணம் கமிஷனாக வந்து சேர்ந்துள்ளது. கம்ப்யூட்ரில் கொள்ளை: 6029 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப்  பள்ளிகளில் கணினி வகுப்புகள் நடத்த கொள்முதல் செய்ய ரூ.500 கோடி அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டதிலும் ஊழல் நடந்துள்ளது.  இதற்கான டெண்டரில் தான் பலகோடி அளவில் ஊழல் நடந்துள்ளது. அதற்கான ஆசிரியர்களை நியமிப்பதிலும் ஊழல் தான். மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டுகள் வழங்கியதிலும் ஊழல்தான். அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்  பேரவையில்  ஏதாவது ஒரு புதிய திட்டத்தை அறிவித்து பேசும் போதெல்லாம், ‘‘இந்த  நாடே திரும்பிப் பார்க்கப் போகிறது’’, ‘‘ உலகமே திரும்பிப் பார்க்கப் போகிறது’’ என்று ‘‘பில்டு-அப்’ கொடுப்பார்.  கடைசியில் இப்போது இந்த துறை ஊழலில் சாதனை  படைத்துள்ளதை நாடே திரும்பிப்  பார்க்கும் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்.  மாணவர்களுக்கு கல்வியை கற்பிக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை காசு பார்க்கும் துறையாகவும் மாற்றிவிட்டார். பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா, சட்டப் பேரவையில் அறிவித்தார். அதன்படி, 2016-17ம் ஆண்டில் 24,820.00 கோடி, 2017-18ல் 26,932.00 கோடி, 2018-19ல் 27,205  கோடியே 88 லட்சம், 2019-20ல் 28,577 கோடி, 2020-20ல் ரூ.34,181 கோடியே 73 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதாவது கடந்த 5 ஆண்டில் கல்வித்துறைக்கு மட்டும் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 716 கோடியே 61 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  இவ்வளவு பணம் எங்கே போனது. இந்தப் பணத்தை முழுமையாக கல்வித்துறைக்கு ஒதுக்கியிருந்தால், கல்வித்துறை முழுமையாக நவீனமயமாக்கப்பட்டு, பள்ளிகளையே குளிரூட்டப்பட்ட அறையாகவும் மாற்றி தனியார் பள்ளிகளுக்கு  இணையாக உருவாக்கியிருக்க முடியும். அந்தப் பணம் எல்லாம் எங்கே போனது என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வி என்கின்றனர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்.இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயிலு கூறியதாவது: நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதற்காக பள்ளிக்கு தலா ₹13,000 தரப்பட்டது.  சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து  சானிடைசர், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட கோவிட்-19 உபகரணப் பொருட்களை கொடுத்து விட்டு, அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியை காசோலையாக பெற்று செல்கின்றனர்.இந்த பொருட்களின் மதிப்பு ரூ.1500 தான் இருக்கும். ஆனால் இதற்காக  ரூ.5,000க்கான காசோலையை பெற்று சென்று விடுகின்றனர். இதில் கல்வித்துறை அதிகாரிகள் தப்பித்துக் கொள்கின்றனர். மத்திய அரசின் கல்வி திட்ட நிதியில் ஒட்டுமொத்த முறைகேட்டையும் எந்த ஒரு ஆதாரம் இல்லாமல் கல்வித்துறை  அதிகாரிகள் செய்துவிட்டு, அதற்கு பள்ளி தலைமை ஆசிரியர்களை பலிகடாவாக ஆக்குகின்றனர். இதுகுறித்து  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மாநில திட்ட  இயக்குநரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.  கல்வித்துறை அதிகாரிகள் வாய்மொழி  உத்தரவின்பேரில், தலைமை ஆசிரியர்களை மிரட்டி இதனை நடைமுறைப்படுத்தி  வருகின்றனர் என்றார்.நம்பிக்கை மோசடி செய்த அமைச்சர்தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன்: கடந்த  2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும் என்றும், 94  ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படும் என்றும் கடந்த 2018ம் ஆண்டு அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் காத்திருந்தோம். ஆனால்,   மீண்டும் ஒரு முறை தகுதி தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 80 ஆயிரம் பேரை நம்பிக்கை மோசடி செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் சங்கத்தின் சார்பில் புகார் அளித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.பள்ளிக்கல்வியை தாண்டாதவர் பள்ளிக்கல்வி அமைச்சர்கல்வித்துறைக்கு அமைச்சராக இருப்பவர் செங்கோட்டையன். இவர், 8ம் வகுப்புதான் தேர்ச்சி பெற்றுள்ளார். அதற்கு பின்னர் படிப்பு வராததால் அரசியலுக்கு வந்து விட்டார். இவர் தான் பள்ளி கல்வி துறை அமைச்சராக இருக்கிறார். கல்வியைப்  பற்றியே தெரியாத, மழைக்கு கூட பள்ளிகூடம் இருக்கும் பகுதியில் ஒதுங்காதவர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால்தான் கல்வித்துறை சீரழிவுக்கு காரணமாகவிட்டது. இவர் எப்படி கல்வித்துறையில் புதுமையையோ, நவீனத்தையோ புகுத்த  முடியும். கல்விக் கொள்கையை உருவாக்க முடியும் என்றும் ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி எழுப்புகின்றனர். பள்ளி கல்விதுறைக்கான நிதி ஒதுக்கீடுதமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கடந்த 2016ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பேரவையில் அறிவித்தார். அதன்படி… 2016-2017    24,820.00 கோடி2017-2018    26,932.00 கோடி2018-2019    27,205 கோடியே 88 லட்சம்2019-2020    28,577 கோடி2020-2021    34,181 கோடியே 73 லட்சம்…

The post கல்வித்துறைக்கு 5 ஆண்டுகளில் ஒதுக்கிய ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 716 கோடி எங்கே? கல்வித்துறையை காசு பார்க்கும் துறையாக மாற்றிய அவலம் appeared first on Dinakaran.

Tags : Tughlaq Darbar ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...