சென்னை: சித்தூரில் இருந்து தச்சூர் வரை 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி மறுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், மாற்று இடத்தில் சாலை அமைக்க பரிசீலிக்குமாறும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அறிவுரை வழங்கியுள்ளது. சென்னை அருகே எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் வேகமாகவும், நெரிசலின்றியும் வருவதற்கு ஏதுவாக பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்திலிருந்து தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் வரை 126 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த சாலை ஆந்திராவில் 82 கிலோ மீட்டரும், தமிழ்நாட்டில் 44 கிலோ மீட்டர் தூரமும் பயணிக்க உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் தொடங்கும் சாலை ரங்கராஜபுரம், நகரி, விஜயாபுரம் வழியே தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தின் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வழியாக தச்சூரில் ஏற்கனவே சென்னை சுற்றுவட்டச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் இணைகிறது. இந்த சாலை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் விண்ணப்பம் செய்துள்ளது. ரூ.3179 கோடி செலவில் அமைய உள்ள இந்த சாலையில் 2186 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அதில், 889 ஏக்கர் நிலம் தமிழகத்தில் கையகப்படுத்தப்பட உள்ளது. அதில், 64 சதவீதம் விவசாய நிலம், 10 சதவீதம் வன பகுதி ஆகும். இந்த சாலையால் 27 நீர் நிலைகள் பாதிக்கப்படுகிறது. 25,200 மரங்கள் வெட்டப்படுகிறது. காப்புக்காட்டின் 86 ஏக்கர் நிலம் அழிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை நிபுணர் குழு பரிசீலித்தது. அப்போது, இந்த சாலை அமைக்க திட்டமிட்டுள்ள வழியில் பெரிய நீர் நிலைகள் இருப்பதால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புலிக்குன்றம் காப்புக்காட்டை பாதியாக துண்டிக்கும்படி உள்ளது. மேலும், இந்த சாலை தொடங்கும் இடம் மற்றும் முடியும் இடம் குறித்து தெளிவான தகவல் இல்லை. இந்த சாலை தேர்ந்தெடுக்கும் போது வேறு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை முறையாக ஆய்வு செய்யவில்லை என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது. எனவே, இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல்துறை நிபுணர் குழு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து அந்த சாலைகளை மாற்று இடத்தில் அமைப்பதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
