×

அழகியமணவாளம் பெருமாள் கோயில் சிலைகள் கிராம மக்களிடம் ஒப்படைப்பு

மண்ணச்சநல்லூர்: அழகியமணவாளம் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாயமானதாக கூறப்பட்ட 4 சிலைகளும் கிராம மக்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அழகியமணவாளம் கிராமத்தில் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பெருமாள் மற்றும் சீதேவி, பூதேவி சிலைகள் மற்றும் மிகவும் பழமையான பிள்ளையாளம்மன் சிலைகள் உள்ளன. இந்த கோயில் கிராமத்தின் எல்லையில் உள்ளதால் 4 சிலைகளும் கிராமத்தின் மையப்பகுதியில்  ஒரு பாதுகாப்பான ரகசிய அறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதிஅறநிலையத்துறையினர் அந்த 4 சிலைகளையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. சிலைகள் எங்கே கொண்டு செல்லப்படுகிறது என்று கிராம மக்கள் கேட்டதற்கு சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என்று அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல்  திருப்பைஞ்சீலி கோயிலுக்குச் சென்று ஆய்வு செய்தபோது அவர் அழகியமணவாளம் கோயில் சிலைகள் குறித்து கேள்வி எழுப்பியதால் அழகியமணவாளம் கிராம பொதுமக்களுக்கு 4 சிலைகளும் பாதுகாப்பாக இருக்கிறதா என்று அச்சம் ஏற்பட்டது.  அதை தொடர்ந்து தங்கள் கோயில் சிலைகளை தங்கள் ஊருக்கே திரும்பித்தர வேண்டும் என்று அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், ஐ.ஜி பொன்மாணிக்கவேலுக்கும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சுந்தரராஜபெருமாள் கோயில் சிலைகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் எழுத்து பூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து திருப்பைஞ்சீலி கோயில் நிர்வாக அலுவலர் ஹேமலதா  தலைமையில் சுந்தரராஜபெருமாள் கோயில் சிலைகள் நான்கும் நேற்று கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சிலைகளை பெற்றுக்கொண்ட கிராம மக்கள் ஊருக்கு மத்தியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சிலைகளுக்கு கிராம மக்கள், ஊர்க்காவல் படை மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.  இதனால் இன்று ஆடி 18 விழாவிற்கு உற்சவர் சிலைகள் வைத்து கிராம மக்கள் விழா கொண்டாட உள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Alakiyamanavalam, Perumal Temple, statues, villagers
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...