×

பல்லாவரம் அருகே காரில் எடுத்து செல்லப்பட்ட ரு.4 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி

சென்னை: பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டையில் நேற்று காரில் எடுத்துச் செல்லப்பட்ட ₹4 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குரோம்பேட்டை, ஜிஎஸ்டி சாலை சிக்னல் அருகே நேற்று தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவையில் இருந்து சென்னை நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. அதனை அதிகாரிகள் மடக்கினர். சோதனையில் காரின் பின் இருக்கை மற்றும் லக்கேஜ் வைக்கும் பகுதிகளில் ஏராளமான அட்டை பெட்டிகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் திறந்து பார்த்த போது, அதில் அதிக அளவில் தங்கம், வைரம், வெள்ளி நகைகள் மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை இருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அதன் உரிமையாளரிடம் அதிகாரிகள், இவையெல்லாம் எங்கு கொண்டு செல்லப்படுகிறது. எதற்காக கொண்டு செல்லப்படுகிறது என்று விசாரணை செய்தனர். அதற்கு அதன் உரிமையாளர், தான் சென்னை, நுங்கம்பாக்கம், ருட்லண்ட் கேட், 6வது தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் (59) என்பதும், ரெட்கில்ஸ் பகுதியில் பிரிண்டிங் பிரஸ்க்கு தேவையான மூலப் பொருள்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருவதாக கூறினார். மேலும் காரில் உள்ள நகைகள் அனைத்தும், சென்னையில் நடைபெற உள்ள, தனது பேத்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சி வருகிற 24ம் தேதி வருவதால், அதற்கு பரிசுப் பொருட்களாக விநியோகம் செய்ய கொண்டு செல்வதாக தெரிவித்தார். அதற்கான ஆவணங்களை கேட்ட போது, ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பணம், தங்க, வைர நகைகள் அனைத்தையும் பறிமுதல் செய்த தேர்தல் சிறப்பு அதிகாரி லலிதா தலைமலையிலான அதிகாரிகள், அவற்றை சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் உண்மையாகவே திருமண விழாவில் பரிசுப் பொருட்களாக கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டதா? அல்லது தேர்தல் நேரம் என்பதால் மக்களுக்கு இலவசமாக கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்களை காட்டி பொருள்களை பெற்றுச் செல்லுமாறு அதன் உரிமையாளரை அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் நேற்று மாலை அதற்கான ஆவணங்களை கமலக்கண்ணன் வருமான வரித்துறை அலுவலகத்தில் தாக்கல் செய்தார். அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ₹4 கோடி மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பல்லாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post பல்லாவரம் அருகே காரில் எடுத்து செல்லப்பட்ட ரு.4 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Chennai ,Chromepet ,
× RELATED ஏரியில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி