×

சூளகிரியில் அவலம் வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில் தேங்கும் கழிவுநீர்-பணியாளர்கள் கடும் அவதி

சூளகிரி : சூளகிரி காவல் நிலையம் அருகே, உத்தனப்பள்ளி சாலையில் அரசு சார்பில் ₹1 கோடியே 75 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டுள்ளது. மலைகரடு அடிவாரத்தில் பள்ளத்தாக்கு பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை சரியாக சீரமைக்காமல், சமன்படுத்தாமல் அவசரகதியில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கடந்த மாதம் காணொலி காட்சி மூலம், இந்த கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தற்போது, இந்த கட்டிடத்தில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அருகில் செல்லும் சாக்கடை கால்வாயில் இருந்து கசிந்து வழிந்தோடி வரும் கழிவுநீர் முழுவதும், வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட வளாகத்தில் தேங்குகிறது. இதனால், ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘ஒப்பந்த பணி எடுத்தவர், அவசர கதியில் இந்த கட்டிடத்தை கட்டியதால், அரசு பணத்தை வீணடித்துள்ளனர். அஸ்திவாரம் சரியாக தோண்டாமல் சுற்றுச்சுவர் எழுப்பியதால், வெளியில் செல்லும் சாக்கடை கால்வாயில் இருந்து கசியும் கழிவு நீர், வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட வளாகத்தில் குளம்போல் தேங்கி கிடக்கிறது. காலையில் வேலைக்கு வந்தால், கழிவுநீரை கடந்து சென்று தான் பணியாற்ற வேண்டியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்….

The post சூளகிரியில் அவலம் வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில் தேங்கும் கழிவுநீர்-பணியாளர்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Soulagiri ,Zulagiri ,Sulagiri Police Station ,Uthanapalli Road ,Agricultural Expansion Center ,
× RELATED சூளகிரி அருகே எருது விடும் விழா:...