×

உணர்வுப்பூர்வமாக செய்யும் வேலைக்கு நிச்சயம் பலன் உண்டு!

நன்றி குங்குமம் தோழி Vlogger ஜெனி‘‘ஹாய் ஃப்ரெண்ட்ஸ்… இன்னைக்கு லஞ்ச் பாக்சில் என்னென்னு பார்க்கலாம்…’’ என்று சொல்லிவிட்டு அன்று சமைத்த உணவினை லஞ்ச் பாக்சில் பேக் செய்யும் அந்த வீடியோவிற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர். பொதுவாகவே தோழிகளையோ அல்லது பக்கத்து வீட்டில் உள்ளவர்களைப் பார்க்கும் போதுநாம் முதலில் இன்று உங்க வீட்டில் என்ன சமையல்னு தான் கேட்போம். சாப்பாடு என்று கேட்டாலே நம் மனதில் ஒரு புது புத்துணர்ச்சி ஏற்படும்.அந்த புத்துணர்ச்சிக்கு மேலும் எனர்ஜியினை தன் லஞ்ச் பாக்ஸ் விலாக் மூலம் அளித்து வருகிறார் சென்னை, போரூரை சேர்ந்த ஜெனி. தினமும் தன் குடும்பத்தினருக்கு சமைப்பதை மிகவும் யதார்த்தமாக வீடியோ எடுப்பது மட்டுமில்லாமல். சமைத்த உணவு குறித்த செய்முறையும் ‘ஜெனி லஞ்ச் பாக்ஸ்’ என்ற ெபயரில் யுடியூப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் ஜெனி. ‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை தாம்பரத்தில்தான். எங்களுடையது வியாபாரக் குடும்பம். அம்மா வழியை சேர்ந்தவங்க எல்லாரும் தாம்பரம் மார்க்கெட்டில் வளையல் கடை வச்சிருந்தாங்க. அப்பாவின் சொந்த ஊர் கோவில்பட்டி என்றாலும், பிழைப்பிற்காக அவர் சென்னைக்கு வந்தவர். அப்பா என் அம்மாவின் வீட்டுத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். நல்ல பையன் என்பதால் அம்மா வீட்டில் அம்மாவை அப்பாவிற்கு திருமணம் செய்து வச்சிட்டாங்க. என்னுடன் சேர்த்து என் கூட பிறந்தவங்க ஆறு பேர். நான் படிப்பு முடிச்சிட்டு கார்மென்ட்ஸ் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். அங்கதான் என் கணவரைச் சந்தித்தேன். இவர் என் நிறுவனத்தில் ஒரு வேலை காரணமாக வந்திருந்த போது பழக்கம் ஏற்பட்டது. பிறகு அது காதலாக மாறியது. வீட்டில் எங்களின் விருப்பத்தை சொன்னோம். அவர்கள் சரி சொல்ல, இருவீட்டார் சம்மதத்துடன் எங்களுக்கு திருமணமாச்சு. எங்களுக்கு திருமணமாகி 19 வருஷமாகுது. எனக்கு இரண்டு பசங்க. பையன் கல்லூரியில் படிக்கறான். பொண்ணு பள்ளியில் படிக்கிறாள்.எனக்கு கல்யாணம் ஆன போது எந்த விவரமும் தெரியாது. ஒரு களிமண்ணை தான் கல்யாணம் செய்து இவர் அழைச்சிட்டு வந்தார்னு சொல்லலாம். அதை தூக்கி வீதியிலும் எறியலாம். அதை பயன்படுத்த தெரியாமல் சுவற்றில் அறையவும் செய்யலாம். ஆனால், அதில் இருந்தும் அழகான சிலையை வடிவமைக்க முடியும் என்பதற்கு என் கணவர்தான் காரணம். எனக்குள் இருந்த டேலன்டை வெளியே கொண்டு வந்தவர் இவர் தான். எல்லாமே எனக்கு அவர் தான். கல்யாணத்திற்கு முன்பு வரை அடுப்படிப் பக்கம் நான் போனதே இல்லை. கல்யாணத்திற்கு பிறகு தான் நான் சமைக்கவே கத்துக்கிட்டேன். என் கணவருக்கு சமையலில் ஆர்வம் அதிகம். நல்ல ருசியான சாப்பாடு சாப்பிட்டு பழகியவர். அவருக்கு கொஞ்சம் கொஞ்சம் சமைக்க தெரியும். அவர் தான் எனக்கு எப்படி சமைக்கணும்னு சொல்லிக் கொடுத்தார். நான் முதன் முதலில் தக்காளி தொக்கு மற்றும் சாதம் தான் செய்தேன். மாமியாரும் சொல்லிக் கொடுத்தாங்க. அப்படித்தான் படிப்படியாக சமைக்க கத்துக்கிட்டேன். நிறைய முறை சொதப்பி இருக்கேன். பிரியாணியை பொங்கல் போல செய்தது நானாக மட்டும் தான் இருக்கும். அதன் பிறகு ஒவ்வொரு உணவையும் சரியான பதம் வரும் வரை திரும்ப திரும்ப செய்து கத்துக்கிட்டேன்’’ என்றவர் யுடியூப் சானல் ஆரம்பித்த பயணம் பற்றி விவரித்தார்.‘‘எங்க வீட்டில் சுவையான உணவினை நல்லா விரும்பி சாப்பிடுவாங்க. அதனால் அவங்களுக்காகவே நான் நல்லா சமைக்கணும்ன்னு முடிவு செய்தேன். அவருக்கு வீட்டு சாப்பாடு தான் பிடிக்கும். அவருக்கு அலுவலகத்திற்கு லஞ்ச் பேக் செய்யும் போது, இரண்டு காய், அப்பளம், சாம்பார், ரசம்ன்னு எல்லாம் தனித்தனியா  கட்டித் தருவேன். மேலும் எனக்கு சமையல் பொறுத்தவரை சீக்கிரமா செய்து முடிச்சிடணும். காலை ஒன்பதரை மணிக்குள் காலை மற்றும் மதிய உணவினை செய்து முடிச்சிடுவேன். சமையல் தெரியாமல் இருந்த எனக்கு ஒரு கட்டத்தில் அதன் மேல் ஆர்வம் ஏற்பட்டிருப்பதை என் கணவர் தான் கண்டறிந்தார். நான் சமைப்பதை வீடியோவாக பதிவு செய்யலாம்ன்னு சொன்னார். சரி செய்து பார்க்கலாம்னு தான் ஆரம்பிச்சேன். நான் சமையல் செய்வேன். இவர் அதை வீடியோ எடுப்பார். அதை ஜெனிஸ் கிச்சன் என்ற பெயரில் யுடியூப்பில் பதிவு செய்து வந்தோம். ஆரம்பத்தில் எனக்கு பேசவே ரொம்ப தயக்கமா இருந்தது. ஒரு வருஷம் தொடர்ந்து செய்தோம். ஆனால் என்னால் பசங்க, வீட்டு வேலைகள் மற்றும் நான் டெய்லரிங் யூனிட் வச்சிருக்கேன். அனைத்தையும் கவனிக்க முடியல. அதனால் பதிவு போடுவதை நிறுத்திட்டேன். அதன் பிறகு லாக்டவுன் பிறகு தான் மீண்டும் ஆரம்பித்தேன். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ஜெனிஸ் லஞ்ச் பாக்ஸ்’. ‘‘கொரோனா லாக்டவுன் போது பசங்களுக்கும் ஸ்கூல் கிடையாது. இவரும் வீட்டில் இருந்து தான் வேலை பார்த்தார். கிட்டத்தட்ட இரண்டு வருஷம் எல்லாரும் வீட்டில் இருந்ததால், வீடியோ பற்றிய சிந்தனை ஏற்படவே இல்லை. லாக்டவுன் முடிஞ்சு இவர் முதல் நாள் வேலைக்கு போன போது தான் மீண்டும் வீடியோ போடலாமான்னு என் கணவரிடம் சொன்ேனன். சமையல் குறிப்பு மாதிரி இல்லாமல் உங்களுக்கு லஞ்ச் பாக்சில் என்ன கொடுக்கிறேன் என்பதை மட்டும் போடலாம்னு சொன்னேன். அன்று மீன் குழம்பு, மீன் வறுவல் செய்திருந்தேன். என் கணவர் லாக்டவுன் முடிந்து வேலைக்கு ேபாக ஆரம்பிச்சிட்டார். அவருக்கு இது தான் லஞ்ச்ன்னு வீடியோவை பதிவு செய்தேன். அதைப் பார்த்து நிறைய பேர் லைக் போட்டு இருந்தாங்க. அதன் பிறகு தொடர்ந்து லஞ்ச் பாக்சில் பேக் செய்வதை போட ஆரம்பிச்சேன். காலை எழுந்ததும் குளிச்சிட்டு ரெடியாயிடுவேன். அதன் பிறகு வீட்டில் என்ன காய் இருக்கிறதோ அதைப் பார்த்துதான் என்ன சமைக்கலாம்ன்னு முடிவு செய்வேன். மேலும் அவங்க வேலைக்கு செல்லும் இடத்தில் அனைவரும் பகிர்ந்து சாப்பிடும் அளவிற்கு வெரைட்டியாகவும் செய்து தர ஆரம்பித்தேன்’’ என்றவர் தையல் யூனிட் ஒன்றையும் நடத்தி வருகிறார்.‘‘நான் கார்மென்ட்சில் வேலை பார்த்ததால், எனக்கு பிளவுஸ் எல்லாம் தைக்க தெரியும். அதனால் வீட்டில் நேரம் கிடைக்கும் போது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், தோழிகளுக்கு எல்லாம் தைத்து கொடுத்து வந்தேன். இதையே ஒரு கடையாக வச்சா என்னென்னு தோணுச்சு. இவரிடம் சொல்ல அவரும் சரின்னு சொன்னார். இரண்டு லட்சம் கடன் வாங்கி தான் கடையை ஆரம்பிச்சேன். ஆனால் முதலில் பயந்தேன். என்னால் கடைக்கான வாடகை கொடுக்க முடியுமான்னு. என் கணவரிடம் சொன்ன போது, அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றது. அவர், ‘நீ வீட்டுக்கு சம்பாதித்து கொடுக்கணும்னு அவசியம் இல்லை. அந்த செலவை நான் பார்த்துக்கிறேன். நீ கடை வைக்க போற. அதற்கான வாடகை மற்றும் கரன்ட் செலவுக்கான லாபம் மட்டும் அதில் இருந்து எடுத்தா போதும்னு சொன்னார். அது எனக்கு ஒரு பெரிய தைரியத்தை ெகாடுத்தது. என்னுடைய கடையில் வரும் வருமானத்தைக் கொண்டு நான் வாங்கிய கடனை அடைக்கணும்னு முடிவு செய்தேன். கடை ஆரம்பித்தவுடன் முதலில் என் கணவர் மூலமாகத்தான் ஒரு பல்க் ஆர்டர் வந்தது. அதில் 25 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதன் பிறகு மாசம் ஒரு தொகை கொடுத்து எடுத்த கடனை அடைச்சேன். இப்ப வீட்டு செலவிற்கும் அவருடன் சேர்ந்து ஷேர் செய்யும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு. காரணம் நான் செய்யும் டெய்லரிங் வேலை எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை. யுடியூப் நடத்தினாலும் இது மனசுக்கு நெருக்கமான வேலை. நான் தனியா கடை வச்ச பிறகு தான் நிறைய விஷயம் கத்துக்கிட்டேன். அங்க நிறைய வாடிக்கையாளர்களை சந்தித்த பிறகு தான் பேசவே தைரியம் வந்தது. அதன் பிறகுதான் நான் யுடியூப் சேனலில் பேசவே ஆரம்பித்தேன். நான் இப்ப இவ்வளவு தூரம் வளர காரணம் என் கணவர்தான். அவர் இல்லைன்னா நான் இல்லை. மேலும் ஒரு வேலையை நேசிச்சு உணர்வுப்பூர்வமா செய்தா கண்டிப்பா அதற்கான பலன் கிடைக்கும். அதை நான் என் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கேன்’’ என்றவரின் யுடியூப் சானலிற்கு  5 லட்சம் மேல் பார்வையாளர்கள் இருப்பதால் அவர் அதற்கான சில்வர் பட்டனை பெற்றுள்ளார்.‘‘என்னுடைய வீடியோ வெற்றி பெற காரணம் யதார்த்தமாக நான் கிச்சனில் சமைப்பதை அப்படியே எடுத்து பதிவு செய்ததுதான். காலை நான்கரை மணிக்கு எழுந்து முதலில் குளிச்சிடுவேன். அதன் பிறகு தான் நான் சமைக்கவே ஆரம்பிப்பேன். அப்படி நான் செய்யும் போது இவர் வந்து ஷுட் செய்திடுவார். மேலும் இவர் திருநெல்வேலி என்பதால் பேச்சில் எப்போதும் நையாண்டி இருக்கும். அதற்கு நானும் சேர்ந்து பேசும் போது… வீடியோவும் அப்படியே யதார்த்தமா அமைந்திடுது. இப்ப லஞ்ச் பாக்ஸ் மட்டுமில்லாமல், காலை டிஃபன் இரவு டின்னர் எல்லாம் வீடியோவா பதிவு செய்றேன்’’ என்றவருக்கு பெண்களின் மேம்பாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளதாம்.‘‘பெண்கள் இப்போது வேலைக்கும் போகிறார்கள், வீட்டு வேலையும் செய்கிறார்கள். எல்லா பெண்களும் மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுபவர்கள் இல்லை. அதில் பெரும்பாலானவர்களின் மாத சம்பளம் ரூ.10 ஆயிரத்திற்குள் தான் இருக்கும். அதற்காக 30 நாட்களும் மழை வெயில் என்று பாராமல் வேலைக்கு செல்கிறார்கள். நானும் அந்த நிலையை கடந்துதான் வந்திருக்கேன். அவர்களின் மேம்பாட்டிற்காக உதவி செய்யணும்னு எண்ணமிருக்கு. கூடிய விரைவில் அதனை செயல்படுத்துவேன்’’ என்றார் ஜெனி.செய்தி: ப்ரியாபடங்கள்: ஆ.வின்சென்ட்பால்

The post உணர்வுப்பூர்வமாக செய்யும் வேலைக்கு நிச்சயம் பலன் உண்டு! appeared first on Dinakaran.

Tags : Vlogger Genie ,
× RELATED உணவுப் பொருட்களில் கலப்படத்தை எப்படி கண்டுபிடிப்பது?