×

எதிர்க்கட்சி வேட்பாளர்களின் புகார்களை மீறி அமைச்சர்களின் குளறுபடி மனுக்கள் ஏற்பு

* தமிழகம் முழுவதும் 7243 பேர் மனு தாக்கல்* பல இடங்களில் தகராறு, தர்ணா போராட்டம்* இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடுசென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 234 தொகுதியிலும் 7,243 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்று வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், கமலஹாசன், டி.டி.வி.தினகரன், சீமான், பிரேமலதா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. அதில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதால் பல இடங்களில் பிரச்னை ஏற்பட்டது. நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 2029 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இன்றும், நாளையும் வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். நாளை மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் கடந்த 12ம் தேதியில் இருந்து 19ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான 19ம் தேதி (நேற்று முன்தினம்) மாலை 3 மணி வரை 7,243 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். இதில் சில வேட்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களும், அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு மாற்று வேட்பாளர்களும் மனு செய்திருந்தனர். அதேபோன்று, கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உள்ளிட்ட 23 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.சட்டமன்றம் மற்றும் மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்கள் மீது நேற்று தொகுதி பொது பார்வையாளர் மேற்பார்வையில் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் பரிசீலனை நடைபெற்றது. அதன்படி சென்னை மாவட்டம், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு ஏற்கப்பட்டது. எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கோவை தெற்கு தொகுதியில் மநீம கட்சி தலைவர் கமலஹாசன், கோவில்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விருத்தாசலத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்களின் அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டது.அதில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் வேலுமணியின் மனைவி, குடும்பத் தலைவி என்று வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவருக்கு பல கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தலைவிக்கு எப்படி வருமானம் வந்தது. அவருக்கு பல கோடி ரூபாய் வருமானம் வந்ததாக சேர்த்துள்ளனர். அது எப்படி வந்தது என்பதை சொல்லவில்லை என்று கூறி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தேர்தல் அதிகாரியிடம் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி பாமக வேட்பாளர் ராஜமன்னார் முன்னாள் எம்எல்ஏ என்றும் அவர் பென்ஷன் பெறுவது குறித்தும் மனுவில் கூறவில்லை. மேலும் அவரது வாக்கு தூத்துக்குடியில் உள்ளது. அதனை பூந்தமல்லியில் இருப்பதுபோல் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த வேட்புமனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் மனு அளித்தனர். எனினும் அவரது மனு ஏற்கப்பட்டது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜ வேட்பாளராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் தனது அபிடவிட்டில், தன் மீது 10 குற்றவழக்குகள் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் பகுதி பி 5வது காலத்தில் அவர் மீது குற்றவழக்குகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையறிந்த திமுகவினர், அபிடவிட்டில் 10 குற்ற வழக்குகள் உள்ளன என்று இருக்கிறது. மற்றொன்றில் குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்று இருக்கிறது. அதனால் அண்ணாமலையின் வேட்பு மனுவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆட்சேபித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை திருமங்கலம் தொகுதியில் 31 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனையின்போது தேர்தல் நடத்தும் அதிகாரி சவுந்தர்யாவிடம் அமமுகவினர், ‘‘அமைச்சர் உதயகுமாரின் வேட்புமனுவை முன்மொழிந்த, அரசு வழக்கறிஞரின் நோட்டரி காலாவதியாகி விட்டது. எனவே அமைச்சரின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது’’ என கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதேபோல் அதிமுகவினர், ‘‘அமமுக கூட்டணி வேட்பாளர் ஆதிநாராயணன் மீது வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரது மனுவை ரத்து செய்யவேண்டும்’’ என்றனர். இரு தரப்பினரும் மாறி, மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தேர்தல் பார்வையாளர் ராம்கேவன், தேர்தல் நடத்தும் அதிகாரி சவுந்தர்யாவுடன் ஆலோசனை நடத்தினார். அமைச்சர் உதயகுமார், ஆதிநாராயணன் மனுவை நிறுத்தி வைத்துள்ளதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். தகவலறிந்து அதிமுக, அமமுக கட்சியினர் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். ஒருவழியாக மதியம் 3.30 மணிக்கு அதிமுக வேட்பாளர் உதயகுமார், திமுக வேட்பாளர் மணிமாறன், அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் உள்ளிட்ட 28 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அரசு வழக்கறிஞர் முன்மொழிந்தது தவறு. அவரது நோட்டரி பப்ளிக் 2021 வரை நீட்டித்திருப்பதற்கான விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தலைகீழாக சீல் என்றும் புகார் கூறப்பட்டது. சீல் இருந்தால் போதும் என்பது விதி உள்ளிட்ட காரணங்களால் மனு ஏற்கப்பட்டது. இதேபோல், அமமுக வேட்பாளர் மீதான வழக்குகள் மீது தீர்ப்பு அறிவிக்கப்படாததால் அவரது மனுவும் ஏற்கப்பட்டது’’ என்றார். நெல்லை சட்டமன்ற தொகுதியில் திமுக, பாஜ, அமமுக வேட்பாளர்களது மனுக்கள் உள்பட 40 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை, நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. பரிசீலனைக்கு பிறகு திமுக, பாஜ உட்பட 16 மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன. மற்ற 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அமமுக வேட்பாளர் பால்கண்ணன் விண்ணப்பத்தில் முன்மொழிந்தவர்களின் பாகம் எண் தவறாக குறிப்பிடப்பட்டு இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டது. மநீம கூட்டணியில் போட்டியிடும் சமக வேட்பாளர் அழகேசன் மனுவும் பாகம், வரிசை எண் மாற்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.நாங்குநேரி தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 41 வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதில் காங்கிரஸ், அதிமுக, அமமுக உள்பட 25 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மநீம, புதிய தமிழகம் வேட்பாளர்கள் உள்பட 14 பேர் அளித்த 16 மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டது. நெல்லை தொகுதியில் சுயேச்சையாக மாவீரன் சுந்தரலிங்கனார் எழுச்சி இயக்க நிறுவனர் மாரியப்ப பாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இவரது மனு நிராகரிக்கப்பட்டது. மனுக்கள் பரிசீலனைக்கு தாமதமாக வந்த மாரியப்பன் பாண்டியன், ‘‘நான் இல்லாமல் எப்படி எனது மனுவை பரிசீலனை செய்யலாம்?’’ எனக் கேட்டு தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரை அலேக்காக தூக்கி வெளியேற்றினர். நெல்லையில் சமக வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.திருப்பத்தூர் தொகுதியில் மொத்தம் 27 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையின்போது திமுக, அதிமுக உட்பட 17 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 10 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் மநீம வேட்பாளரின் வேட்புமனு விவரங்களை சரியாக பதிவு செய்யாத காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் மநீம வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை துறைமுகம் தொகுதி பாஜ வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தின் பெயர் வாக்காளர் அட்டையில் வேறு விதமாகவும், விண்ணப்பத்தில் வேறுவிதமாகவும் இருப்பதாக சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவரது மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று ஆவணங்களை காட்டிய பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் வேட்பு மனு மீது குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டு, மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அதேபோன்று, கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் செய்தவர்களில் 20 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதியில் 2029க்கும் மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இறுதியாக நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 3,385 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாதவர்கள் தங்களது வேட்புமனுக்களை இன்றும் (21ம் தேதி), நாளை (22ம் தேதி) மாலை 3 மணிக்குள் வாபஸ் பெறலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து நாளை மாலை 3 மணிக்கு 234 தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே அந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் வழங்கப்படும். சுயேட்சை வேட்பாளர்களுக்கும் நாளை மாலை 3 மணிக்கு தனி சின்னம் ஒதுக்கப்படும். இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மாலைக்கு பிறகு மேலும் சூடுபிடிக்க தொடங்கும்.தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தான் பெரிய அளவிலான போட்டி உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும், அமமுக-தேமுதிக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, மநீம கட்சி மற்றும் அதன் கூட்டணி உள்ளிட்ட 5 முனை போட்டி உள்ளதாகவும் அக்கட்சி பிரமுகர்கள் தெரிவிக்கிறார்கள். அதேநேரம், பொதுமக்கள் குறிப்பாக புதிய வாக்காளர்கள் தங்கள் மனநிலையை தேர்தல் நாளான ஏப்ரல் 6ம் தேதி அன்று வாக்குப்பதிவு எந்திரம் மூலம் தெரிவிக்க திட்டமிட்டுள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படுகிறது….

The post எதிர்க்கட்சி வேட்பாளர்களின் புகார்களை மீறி அமைச்சர்களின் குளறுபடி மனுக்கள் ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dirna Struggling ,Dirna Battle ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...