×

ரூ.100 அபராதம் செலுத்தி தப்பிக்க முடியாது ரயிலில் தம் அடித்தால் இனி சிறை தண்டனை: சேதத்துக்கும் நஷ்டஈடு வசூலிக்க திட்டம்

புதுடெல்லி: ரயில்களின் புகை பிடிக்கும் பயணிகளை இனிமேல் சிறையில் அடைக்கவும், தீ விபத்து ஏற்பட்டால் அதற்கான சேத தொகையை வசூலிக்கவும்  கடுமையான சட்டப் பிரிவுகளை சேர்க்க ரயில்வே முடிவு செய்துள்ளது. ஓடும் ரயில்களில் சமீப காலமாக தீ விபத்து ஏற்படுவது அதிகரித்துள்ளது. கழிவறையில் புகை பிடித்து விட்டு பயணிகள ்வீசும் மீதி சிகரெட், பீடி துண்டுகள்தான் இதற்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து  உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயிலின் பெட்டியில் கடந்த 13ம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரயில் ஓடிக் கொண்டிருக்கும் எஸ்-5 பெட்டியில் இருந்து தீ பற்றி எரிந்தது. அதில் இருந்த பயணிகள்  உடனடியாக வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டு, எரிந்து கொண்டிருந்த பெட்டி கழற்றி விடப்பட்டது. இதனால், பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.  இந்த தீ விபத்து குறித்து பாதுகாப்பு படையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கழிவறையில் புகை பிடித்து விட்டு பயணி ஒருவர் அங்குள்ள குப்பைத் தொட்டியில் அணைக்கப்படாத மீதி துண்டை வீசி விட்டு சென்றதுதான் காரணம்  என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் அந்த ரயில் பெட்டி முழுமையாக சேதமானது. இதனால், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கடும் கோபம் அடைந்துள்ளார். இதனால், ரயிலில் புகை பிடிக்கும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப் பிரிவுகளை ரயில்வே பாதுகாப்பு சட்டத்தில் சேர்க்கும்படி, ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ரயில்வே  அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன்படி, புதிதாக சேர்க்கப்பட உள்ள சட்டங்களின் விவரம் வருமாறு:* ரயில்வே சட்டம் 167வது பிரிவின்படி, ரயில் பெட்டிகளில் பீடி, சிகரெட் பிடிக்கும் பயணிகளுக்கு தற்போது ரூ.100 மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது.*இந்த சட்டப் பிரிவுகள் கடுமையாக மாற்றப்பட உள்ளது.* அதன்படி,  ரயில் பெட்டிகளில் பீடி, சிகரெட் பிடிக்கும் பயணிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.* அவர்கள் புகைத்து விட்டு வீசும் பீடி, சிகரெட் துண்டுகளால் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டாலோ, சேதம் ஏற்பட்டாலோ கைது நடவடிக்கை மட்டுமின்றி, சேதத்துக்கான முழுத் தொகையும் அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். * ரயில்களில் புகை பிடிக்கும் பயணிகளை பிடிப்பதற்காக, சாதாரண உடைகளில் பாதுகாப்பு அதிகாரிகள் ரோந்து வருவார்கள்.சதாப்தி ரயிலில் தீஉத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் இருந்து காஜியாபாத்துக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்றது. அப்போது, அதன் சரக்கு பெட்டியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. ரயிலின் கார்டு இதை பார்த்ததும் தீயணைப்பு வீரர்கள்  அழைக்கப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. பின்னர், அந்த பெட்டி கழற்றி விடப்பட்டு, ரயில் புறப்பட்டு சென்றது. சரியான நேரத்தில் தீ கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை  நடத்தப்படுகிறது….

The post ரூ.100 அபராதம் செலுத்தி தப்பிக்க முடியாது ரயிலில் தம் அடித்தால் இனி சிறை தண்டனை: சேதத்துக்கும் நஷ்டஈடு வசூலிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Henceforth ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...