×

இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுக்க வேண்டாம்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, மார்ச்: இலங்கைத் தமிழர்களை அவமதித்து அநீதி இழைத்து, இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்திட வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சார்பில், கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும்” என அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அளித்துள்ள பேட்டியும் அந்தப் பேட்டியின் மீது இதுவரை எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதி காக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் மவுனமும், உலகத் தமிழர்கள் இடையேயும், தமிழகத்திலும், பேரதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் எல்லாம் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று மிகுந்த பதற்றத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது  இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளரை இந்தியாவின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்க மத்திய பாஜக அரசு அனுமதித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. மேலும், முக்கியமான இந்தப் பிரச்னையில் மத்திய பாஜ அரசு ஏனோ தானோ என்று அக்கறை காட்டாமல் இருப்பது, தமிழர்களை அலட்சியப்படுத்தும் அணுகுமுறையின் பாற்பட்டதாகும். இந்தியாவின் தொப்புள்கொடி உறவுகளாம் ஈழத் தமிழர்களை வஞ்சிப்பதை உலகெங்கும் வாழும் 9 கோடி தமிழர்கள் எந்நாளும் மன்னிக்க மாட்டார்கள்.தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்தினைக் கூட பிரதமர் மோடி கேட்காமல் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கத் திட்டமிடுவது, தமிழ் இனத்திற்கு முற்றிலும் எதிரானது. மிகுந்த கண்டனத்திற்குரியது. இலங்கையின் நிர்ப்பந்தத்திற்கு இந்தியா அடிபணிவது ஏன் என்ற ஆதங்கமும் ஆத்திரமும் ஒவ்வொரு தமிழரின்  உள்ளத்திலும்  எரிமலையாய்க் குமுறுகிறது. ஆகவே, ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. மன்றத்தில் 22ம் எடுத்துக் கொள்ளப்படுகின்ற தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது மட்டுமின்றி, இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் சென்றிடும் வகையில் உறுப்பு நாடுகளின் ஆதரவினையும் திரட்டி உரிய திருத்தங்களுடன் அந்தத் தீர்மானம் நிறைவேறிட பிரதமர்மோடி நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும். இலங்கைத் தமிழர்களை அவமதித்து அவர்களுக்கு அநீதி இழைத்து இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எடுத்திட வேண்டாம். தமிழ் நெஞ்சங்களின் நிரந்தரமான பழிச்சொல்லுக்கு ஆளாகிட வேண்டாம் என்றும் பிரதமர் மோடியை பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுக்க வேண்டாம்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : UN ,Sri Lankan Government ,India ,Human Rights Forum ,PM ,B.C. ,G.K. Stalin ,Chennai, ,Ceylon Government ,B.C. G.K. Stalin ,
× RELATED அனைத்திலும் சந்தேகத்துக்குரிய...