×

சொன்னாரே செஞ்சாரா? மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத எம்எல்ஏ: அந்தியூர் தொகுதி எம்எல்ஏ இ.எம்.ஆர். ராஜாகிருஷ்ணன்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் தொகுதியானது 1962ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் சட்டமன்ற தொகுதியாக உருவாக்கப்பட்டது. தனித்தொகுதி உருவாக்கப்பட்டு பின்னர் பொது தொகுதியாக மாற்றப்பட்டது.‌ 2016ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் அதிமுக, திமுக நேரடியாக களம் கண்டது. இதில் அதிமுகவை சேர்ந்த ராஜாகிருஷ்ணன் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். அந்தியூரில் வரட்டுப்பள்ளம் அணை, பெரியஏரி, கெட்டிசமுத்திரம், எண்ணமங்கலம் ஏரி உள்ளிட்ட 7 ஏரிகள் உள்ளன. ஆனாலும் நீர்மேலாண்மையில் கோட்டை விட்டதன் விளைவு தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. தொகுதியையொட்டி ஒருபுறம் பவானி ஆறும், மற்றொருபுறம் காவிரி ஆறும் ஓடுகிறது. ஆனாலும் மழையை நம்பியே விவசாயிகள் உள்ளனர். மேட்டூர் வலதுகரை உபரி நீர் பாசனத்திட்டம், மணியாச்சிப்பள்ளம் திட்டம், தோணிமடுவு திட்டம் உள்ளிட்ட நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வந்த போதிலும் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் இதுவரை இத்திட்டங்களை நிறைவேற்றவில்லை என்பது விவசாயிகளின் புகாராக உள்ளது. இதேபோல கோடைகாலத்தில் குடிநீருக்காக அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் குடங்களை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று தண்ணீர் எடுத்து வரும் பரிதாப நிலை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. தொகுதியின் முக்கிய பிரச்னையாக குடிநீர் பிரச்னை உள்ளது. 5 ஆண்டுகாலம் எம்எல்ஏவாக இருந்த போதிலும் ராஜாகிருஷ்ணன் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை. அந்தியூர் வாரச்சந்தையானது ஈரோடு மாவட்டத்திலேயே பெரிய சந்தை. ஆனால் வாரச்சந்தை பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் சுட்டெரிக்கும் வெயிலில் வியாபாரம் செய்யும் அவலநிலை தொடர்ந்து கொண்டுள்ளது. அந்தியூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் சாலை, சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. இதே போல மலைக்கிராமங்களில் வனவிலங்குகள் விளைநிலங்களில் நுழைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மலைப்பகுதிகளில் குடிநீர் பிரச்னை நிலவி வருகின்றது. இதற்கு தீர்வு காண எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மணியாச்சி பள்ளத்தை வரட்டுப்பள்ளம் அணை உடன் இணைக்கும் மணியாச்சி வழுக்குப்பாறை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் கூறியிருந்தார். ஆனால் 5 ஆண்டுகளாகியும்  இத்திட்டம் ஆய்வளவில் மட்டுமே உள்ளது . மேட்டூர் வலதுகரை வாய்க்கால் திட்டம், தோனி மடுவு திட்டம், உள்ளிட்ட அந்தியூரின் நீராதாரங்களை பெருக்கும் திட்டங்களை செயல்படுத்தப்படவில்லை. அந்தியூரில் அரசு கலைக் கல்லூரி, அந்தியூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவது, பர்கூர் மலைப்பகுதியில் வாழும் மலையாளி இன மக்களுக்கு பழங்குடியினர் சான்று, பர்கூரில் அரசு மருத்துவமனை, கைத்தறி பட்டு நெய்வதற்கு தேவையான மூலப் பொருட்களை மானிய விலையில் வழங்குவது, அந்தியூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு, விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் கிடப்பதாக தொகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.‘‘அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை’’ அந்தியூர் எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘மணியாச்சி திட்டத்தை நிறைவேற்றும் வகையில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பர்கூர் மலைப்பகுதியில் இரட்டை வழி சாலை அமைத்தது, பர்கூரில் உள்ள மேற்கு மலைப் பகுதிக்கு முதல்முறையாக பஸ் வசதி செய்து கொடுத்தது, அனைத்து கிராமங்களுக்கும் தார் சாலை வசதி, குடிநீர் வசதி, பள்ளி கூடுதல் கட்டிடங்கள், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுத்துள்ளேன்’’ என்றார். ‘‘வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் கமிஷன்’’திமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் செபஸ்தியான் கூறும்போது, ‘‘அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 5 ஆண்டுகளில் குளம், ஏரிகளை தூர் வாரியதிலும், கொரோனா காலத்தில் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு தடுப்பு மருந்துகள் வாங்கியதிலும் எம்எல்ஏ நல்ல கமிஷன் பார்த்துள்ளார். அந்தியூர் தொகுதி வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் அவரது வளர்ச்சிக்கான வேலைகளை மட்டுமே செய்துகொண்டார்’’ என்றார்….

The post சொன்னாரே செஞ்சாரா? மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத எம்எல்ஏ: அந்தியூர் தொகுதி எம்எல்ஏ இ.எம்.ஆர். ராஜாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Sensa ,E. ,Andyur Constituency ,Erodu District ,Legislative Assembly ,Chennai Province ,R. Rajakrishnan ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்பிலான இ- சிகரெட்கள் பறிமுதல்