×

பிரசாரம் செய்யவே அஞ்சும் விவிஐபியின் நிலையைப் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மாங்கனி மாவட்ட போக்குவரத்து காக்கிகளின் சாபத்தை ஒட்டுமொத்தமாக சம்பாதித்த குற்றப்பிரிவு அதிகாரியின் அட்ராசிட்டியை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகர போக்குவரத்து போலீஸ்காரங்களை கூல்படுத்தும் வகையில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில், காலை, பகல், மாலை நேரங்களில் மோர், லெமன் ஜூஸ் கொடுக்குறாங்க. கால்கடுக்க நிற்கும் அவர்கள் அங்குள்ள டிராபிக் குடையில் அமர்ந்து கொண்டும் போக்குவரத்தை சீர்படுத்தியும் வாராங்க. இந்த நிலையில தான் சல்யூட் வடிவில ஒரு வில்லன் வில்லங்கமாக வந்து… உச்சி வெயிலில் நிற்க வைச்சுட்டாராம். இது பற்றி போக்குவரத்து காக்கிகள் இப்படி தான் பேசிக்கிறாங்க… மாங்கனி மாவட்ட மாநகர உதவி கிரைம் அதிகாரி ஒருவர், பகலில் ஏசி காருல போயிட்டு இருந்திருக்காரு. அந்நேரத்தில் டிராபிக் குடையில் இருந்த போலீஸ்காரர் சல்யூட் அடிக்கல. இதனால அந்த அதிகாரிக்கு கோபம் பொத்துக்கிட்டு வந்துச்சாம். நம்மல மதிக்காதவன் ஒருத்தன் கூட நிழல்ல நிற்கக் கூடாது. அவனுங்கள வெயில்ல நிறுத்தி வறுத்தெடுக்கனும்னு முடிவு செய்தாராம். உடனே டிராபிக் ஏசிய அழைச்சு, மாநகரில் உள்ள அனைத்து டிராபிக் குடையை அகற்றியே ஆகணும் என்று உத்தரவு போட்டுட்டாராம். ஒரேநாள்ல எடுத்தா சந்தேகம் வந்துடும்னு ஒன்னு ஒன்னாக எடுக்கத் துவங்கிட்டாங்களாம். இதுவரை 7 குடைகளை எடுத்துட்டாங்களாம். இதுபோன்ற குடைகள் அனைத்தும் பொதுமக்களிடம் பணம் வாங்கி வச்சதாம். தன் கீழ் உள்ள போலீஸ்காரங்கள… இப்டி கொடுமை படுத்துவதால் என்ன கிடைத்துவிடப்போகிறது… அந்த காக்கி உயரதிகாரியின் ஆட்டம்… ஆணவம் எல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு செல்லுபடி ஆகும் பார்க்கலாம்னு டிராபிக் போலீஸ்காரங்க வெயிலையும் பொருட்படுத்தாமல் நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு போக்குவரத்தை சரி செய்து வர்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மக்களுக்கு ‘அல்வா’ கொடுக்க முயன்ற அரசியல்வாதி… மக்கள் திருப்பி கொடுத்த அல்வா சாப்பிட்ட அரசியல்வாதியை பற்றிய பேச்சு கோவையில ஓடுதாமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் இலை வேட்பாளர் வெள்ளானைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பிரசாரம் செய்ய கிளம்பினாராம். அப்போது அந்த ஊராட்சியை சேர்ந்த கைகோளபாளையம் கிராமத்தில் சுமார் நூற்றி ஐம்பதுக்கும் ஒரே சமுதாயத்தை சேர்ந்த குடும்பங்கள் இருக்காம். அந்த பகுதியே தன் கன்ட்ரோலில் தான் இருக்குனு பீலா விட்ட இலை கட்சியின் அந்த பகுதி நிர்வாகி… ஓட்டு கேட்க ஆளும் இலை வேட்பாளரை கெத்தாக அழைத்துச் போனாராம். மேலும், வேட்பாளரை அழைத்துச் செல்வதற்கு முன்பாக அந்த பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் இரவோடு இரவாக இலை சின்னத்தையும் வரைந்தாராம். இந்த நிலையில்தான் வில்லங்கமே விடியல் வடிவில் வெடித்ததாம். அதாவது, காலையில் தங்கள் வீட்டு இலை சின்னத்தை பார்த்த பொதுமக்கள்  அழிக்க தொடங்கினாங்களாம். இதற்கிடையில் இலை வேட்பாளர் அந்த பகுதிக்கு வந்தாராம். அப்போது திரண்டிருந்த ஒரே சமுதாயத்தை சேர்ந்த மக்கள், ‘கடந்த 10 ஆண்டுகளாக இலை எம்எல்ஏ, எங்கள் பகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கல. சமுதாயக்கூடம் கட்டித் தரவில்லை. பட்டா வாங்கி தருவதாக உள்ளூர் பிரமுகர் விண்ணப்பத்தை பெற்று ஏமாற்றி வருகிறார். எங்க நிலை இப்படி இருக்க… நீங்க எப்படி எங்கள் பகுதியில் ஓட்டு கேட்க வர்றீங்கனு எகிறிட்டாங்களாம் பொதுமக்கள். இதைக்கேட்டு கடுப்பான இலை வேட்பாளர், உள்ளூரின் அந்த பிரமுகரை பார்த்து என்னை அழைத்து வந்து, இப்படி கேவலப்படுத்தி விட்டாயே… வாங்கிய கரன்சி என்ன ஆச்சு என்று திட்டிக் கொண்டு காரில் வேகமாக சென்றுவிட்டார்…’’என்றார் விக்கியானந்தா. ‘‘ஹனிபீ மாவட்டத்துல ஓட்டு கேட்க போகும் இடமெல்லாம் சிலர் வந்து ‘கேட்’ போட்டுடறாங்களாம்… ஹனிபீ விவிஐபிக்கு ஓட்டே போடாதீங்கனு கால்ல வேற விழறாங்களாம்… இதனால விவிஐபி தர்மசங்கடத்தில் இருக்காராமே… அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஹனிபீ மாவட்டத்தில் 2 எழுத்து தொகுதியில் போட்டியிடும் ‘‘துணையானவருக்கு’’ வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்தே பிரச்னை தானாம். தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, பரிசீலனை நடக்கும் வரை, மனுவில் திருத்தம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் துணையானவர் மனு தாக்கல் செய்த பிறகு, அவரது மைத்துனரான வக்கீல் ஒருவர் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து, வேட்புமனுவில் திருத்தங்களை செய்ததாக தகவல்கள் உலா வருகிறது. அது உண்மையா என்பதை துணையானவர் தான் சொல்லணும். இதுபோதாதென்று உள் இடஒதுக்கீடு விவகாரத்தில், இலைக்கு ஓட்டுப் போடக்கூடாதென்று, துணையின் தொகுதி உட்பட மாவட்டத்தின், 4 தொகுதிகளிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர், மக்கள் காலில் விழுந்து, ‘‘ ஓட்டுப் போடாதீங்க…’’ என்று வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகின்றனராம்… சரிப்பா… நேரம் சரியில்லை எனக்கூறி நேற்று முன்தினம், தனது தொகுதியில் ஒரு சமுதாயக்கூடத்தில் பிரசாரத்தை துவக்கி இருக்கிறார் ‘‘துணையானவர்’’. 2வது மகன் கையில் பணப்பெட்டியும் இருந்ததாக பேசிக்கிறாங்க… அதற்குள் ஒரு பிரிவினர் முற்றுகையிட்டு, ஒழிக கோஷம் ேபாட்டிருக்காங்க… மாவட்டத்தில் எங்கே போனாலும், மக்கள் ‘கேட்’டை போடுவதால், பிரசாரத்திற்கு செல்வது என்றாலே துணையானவர் அஞ்சுகிறாராம்…’ என்றார் விக்கியானந்தா….

The post பிரசாரம் செய்யவே அஞ்சும் விவிஐபியின் நிலையைப் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : VVIP ,Mangani district ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...