×

புல்லட்சாமியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த பவர்புல் பெண்மணியின் ரகசியம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அடிக்கடி அணி தாவினால்… தனியாக இருந்து அவஸ்தை பட வேண்டிய பாடத்தை கற்று கொடுத்த இலை கட்சியை சேர்ந்தவர் யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘முத்து மாவட்டத்தில் இலை கட்சியில் மாஜி அமைச்சர்கள் இருவரும் எதிரும், புதிருமாக இருந்தனர். இதில் ஒரு மாஜி தேனிக்காரர் பக்கம் இருந்தாராம். அதன் பின்னர், சேலம்காரர் அணியில் இணைந்து கொண்டாராம். செல்லமானவர் சேலம்காரர் அணி தன்னை கண்டு கொள்ளவில்லை என்ற விரக்தி செய்தி பரவியவுடன், அவரை நேரில் அழைத்து தன் அணியில் மாவட்ட செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் தேனிக்காரர். இதனால் செல்லமானவர் உடன்  இருந்த இலை கட்சியினர் ஒரு சிலரும், மற்றொரு மாஜியான மூன்றெழுத்துகாரர் அணிக்கு தாவினாங்க. ஆனால் திடீரென மனமாற்றம் ஏற்பட்டு இருந்த இடத்தில் இருந்தே வேறு அணிக்கு தாவும் ஆற்றல் உள்ள செல்லமானவர், தேனிக்காரரை உதறி விட்டு மீண்டும் சேலத்தில் ஐக்கியமானார். எனினும் அடிக்கடி அணி தாவியதால் தற்போது செல்லமானவருக்கு முத்து மாவட்டத்தில் எந்த முக்கியத்துவமும் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் இல்லையாம். தன்னுடன் இருந்தவர்களும் எதிர் அணிக்கு தாவி  விட்ட நிலையில் தனி மரமாக நிற்கிறாராம்…’’ என்று சொன்னார் விக்கியானந்தா.‘‘மாசத்துல 5 நாள் தான் வேலைக்கு வர்றாராம் ஒரு இன்ஜீனியரு… சம்பளத்தை மட்டும் முழுசா வாங்குவது எப்படியாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம் மாவட்டத்துல செய்யாறு நகரம் இருக்காம். இங்க இன்ஜினியரு  ஒருத்தரு இருக்காராம். இவரு மாசத்துல 2ல இருந்து 5 நாள் வரைக்கும்  தான் ஆபிசுக்கு வர்றாராம். மற்ற நாட்கள்ல, கலெக்டர் ஆபிசுக்கு போயிருக்கேன். வெயிலூர் ஜோனல் ஆபிசுக்கு போயிருக்கேன்னு காரணங்களை அள்ளிவிடுறாராம். இதுல வர்ற அந்த சில நாட்கள்லயும், நகர்ஆட்சியோட திட்ட பணிகளை கவனிக்குறதில்லையாம். பேருக்கு பார்த்துட்டு போயிடுறாராம். ஏன் தினமும்  வர்றதில்லைன்னு ஆபிஸ்ல யாரோ கேட்டிருக்காங்க. அதுக்கு அவரு, தினமும் வந்து போக சிரமமாக இருக்குது. செலவும் அதிகமாக ஆகுதுன்னு சொன்னாராம். ஆனால் சம்பளம் மட்டும் முழுசாக வேண்டும் என்பது என்ன நியாயம் என்று சக ஊழியர்களே கேட்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கரன்சியை கண்ணில் காட்டாத நிர்வாகியை யாரு இஷ்டத்துக்கும் திட்டினாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலோர மாவட்டத்தில் தாமரை கட்சி சார்பில் போராட்டம் நடப்பது வழக்கம். தாமரை கட்சி சார்பில் போராட்டம் நடக்கும் போது, ஒவ்வொரு முறையும் கூட்டத்தை காட்டுவதற்காக தலைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என முதல் நாளே பேரம் பேசி தான் தொண்டர்கள் அழைப்பாங்களாம். நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட, மணி, சரக்கு, பிரியாணி என அனைத்தும் உண்டு என தான் தொண்டர்களை அழைத்து வந்தாங்க. ஆர்ப்பாட்டம் முடிந்தும் பேசிய படி தொண்டர்களுக்கு எதுவுமே கொடுக்க வில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள், கடந்த முறை இப்படி தான் மணி, சரக்கு, பிரியாணி தருவதாக கூறி அழைத்து வந்தீர்கள். ஆனால், கடைசி நேரத்தில் அல்வா கொடுத்தீங்க… எங்களுக்கு வேலை வெட்டி இல்லையா என உச்ச கட்ட கோபத்துக்கு சென்ற தொண்டர்கள், மாவட்ட நிர்வாகியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கரன்சியை காணாமல் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கேனு இலை எம்எல்ஏ, ஏன் புலம்புகிறார்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை மாவட்டத்தில் உள்ள 9 அதிமுக எம்எல்ஏக்களில் ஒருவர் மட்டும் ரொம்பவே புலம்பி வருகிறார். இவர், சமஉ ஆவதற்கு முன்பு மாநகராட்சி கவுன்சிலராக இருந்தார். அதுவும், பணிக்குழு தலைவராக இருந்தார். அந்த சமயத்தில் மாநகராட்சி பணிகள் தொடர்பான விவகாரத்தில் நல்லாவே காசு பார்த்தார். பின்னர், எம்எல்ஏ ஆனவுடன் இவரது கை இன்னும் ஓங்கியது. சாதாரண வீடாக இருந்த இவரது வீடு, பல அடுக்குமாடிகளாக உயர்ந்துவிட்டது. ‘’கைனட்டிக் ஹோண்டா’’ ஸ்கூட்டரில் சென்ற இவர், இன்று பல சொகுசு கார்களில் வலம் வருகிறார். அன்று மசாலா பொட்டலம் தயாரித்து, கடை கடையாக சப்ளை செய்த இவர், இன்று கரை வேட்டி கட்டிக்கொண்டு பெரிய பெரிய பஞ்சாயத்துகளில் காசு குவிக்கிறார். கடந்த பத்து ஆண்டு கால இலைக்கட்சி ஆட்சியில், கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இவரது கைதான் ஓங்கி இருந்தது. டாஸ்மாக் ‘பார்’ வசூல் மொத்தத்தையும் சுருட்டிச்சென்றார். ஆனால், தற்போது ஆட்சி மாற்றத்துக்கு பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவரது பருப்பு எதுவும் வேகவில்லை. கரன்சியை தினமும் பார்க்காமல் இருக்க முடியில கமிஷன் அதிகம் தருகிறேன்னு அடி பொடிகளிடம் புலம்புகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பவர்புல் பெண்மணியின் சிரிப்பு சத்தம், புல்லட்சாமி காதில் உக்ரைன் விட்ட ஏவுகணை வெடிச்ச சத்தம் ஏற்பட்ட நிலையில் காதை மூடிக் கொண்டுள்ளாராமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரி புல்லட்சாமி ஆட்சியில் தற்போதைய பவர்புல் பெண்மணிக்கும், புல்லட்சாமிக்கும் இடையே முன்பு இருந்ததை போல ‘புரிதல்’ சரியில்லையாம். ஆனால் இதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருவரும், வெளியில் நடக்கும் விழாக்கள் மற்றும் அரசு நிகழ்ச்சியில் நட்பாக இருப்பது போன்று நடிப்பதாக பொதுமக்கள் பேசிக்கிறாங்க. நிர்வாகத்தை என்னால் சுதந்திரமாக செய்ய முடியவில்லை. தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும். இதற்கெல்லாம் மாநில அந்தஸ்து பெற்றால்தான் தீர்வு என புல்லட்சாமி எரிச்சலுடன் சொல்கிறாராம். இதற்கு பவர்புல் பெண்மணி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவதா? வேண்டாமா? எனக்கருத்து சொல்லவில்லையாம். அதே நேரத்தில் புல்லட்சாமி தனக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அந்தஸ்து கோரிக்கையை தூக்கிபிடிப்பார். அவருக்கு உண்மையான அக்கறையில்லை. பவர்புல் பெண்மணியை மிரட்டத்தான் இப்படி செய்வதாக கதர் கட்சியின் லிங்கம் கூறி வருகிறார். இதற்கு இருவரும் பதில் சொல்லவில்லை. ஜி20 மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சாமியும், பவர்புல்பெண்மணியும் கலந்து கொண்டனர். வெளியே வந்த அவர்களிடம், சாமி உங்களை மிரட்டுகிறாரா என பத்திரிகையாளர்கள் கேள்விகேட்க, சுமார் 10 நிமிடமாக பவர்புல்பெண்மணி சிரிப்பை அடக்க முடியாமல் லக, லகவென சிரித்தாராம். அந்த சிரிப்பு சத்தம் காது அருகில் வெடித்த வெடி சத்தம்போல இருந்துச்சாம். அதனால, புல்லட்சாமி மைக்கையெல்லாம் தன்பக்கம் திருப்பி, ஜி 20 மாநாட்டை எப்படி நடத்தப்போறோம் என சொல்லிக்கொண்டே இருந்தாராம். ஆனால் பவர்புல் பெண்மணி சாமியை பார்த்து, அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே இருந்தார். மீண்டும் சாமியிடம் நீங்கள் ஏன் பவர்புல் பெண்மணியை மிரட்டுகிறார்களாமே என கேட்டாங்களாம். அப்படி யார் சொன்னது, அவரிடம் போய் கேளுங்கள் எனக்கூறிவிட்டு டென்ஷனாக கிளம்பினாராம் தனது புல்லட்டில்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post புல்லட்சாமியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்த பவர்புல் பெண்மணியின் ரகசியம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Yananda ,Leaf ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.25 கோடி...