×

திருவில்லிபுத்தூரில் ஐயப்ப சீசன்: பால்கோவா விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் மார்கழி மாதம் மற்றும் ஐயப்ப சீசனையொட்டி, ஆண்டாள் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால், நகரில் பால்கோவா விற்பனை பலமடங்கு அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்துள்ள நிலையில், கண்ணை கவரும் பல வண்ணங்களில், பல வடிவங்களில் பால்கோவா தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயிலாகும். இதன் கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சுண்டி இழுக்கும் சுவை மிகுந்த பால்கோவாவாகும். திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேரோட்டம், ஐயப்ப கோயில் சீஷன், குற்றால சீஷன் மற்றும் தீபாவளி பண்டிகை என ஆண்டுக்கு நான்கு முறை பால்கோவா விற்பனை அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் பால்கோவா விற்பனை மிகவும் உச்சத்தில் நிற்கும். திருவில்லி பால்கோவாவுக்கு தனி மவுசு:தமிழகத்தில் சங்கரன்கோவில் பிரியாணி, சாத்தூர் சேவு, நெல்லை அல்வா என்பதைப் போல, திருவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கும் தனி மவுசு உண்டு. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பால்கோவா தயாரித்தாலும், திருவில்லிபுத்தூருக்கு தனி வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக ஒரு சில நிறுவனங்களின் பால்கோவா தயாரிப்புக்கு செம டிமாண்டாக இருக்கும். ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு:மார்கழி பிறந்ததிலிருந்து திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இவர்களுடன் ஐயப்ப பக்தர்களும் அதிகமாக வருகின்றனர். கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகள், ரதவீதிகளில், ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஆண்டாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கடந்த புத்தாண்டு தினத்தில் மட்டும் ஆண்டாள் கோயிலில் சுமார் 20 ஆயிரம் பக்தர்களும், வைகுண்ட ஏகாதேசி தினத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர். மார்கழி மாதம் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மேலும், பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டாள் கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுக்கும், தங்களது உறவினர்களுக்கும் சேர்ந்து பால்கோவாவை சில்லறையாகவும், ஒருசிலர் 15 கிலோவில் இருந்து 50 கிலோ வரை மொத்தமாகவும் வாங்கிச் சென்றனர். மேலும், குறிப்பிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் பால்கோவாவிற்கு தனி டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. ஒரு சில கடைகளில் பக்தர்கள் காத்திருந்து பால்கோவா வாங்கிச் செல்கின்றனர்.பால் சுவீட் விற்பனையும் பறக்குது: பால்கோவோடு பால் அல்வா, பால் கேக், பால் கேரட் என விதவிதமாக பால் சுவீட்ஸ்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. பல வண்ணங்களில் காண்போரை கவரும் வகையில், பலவித வடிவங்களில் பால் சுவீட்கள் விற்பனை செய்யப்படுகிறது.இது குறித்து பாரம்பரியமாக பால்கோவா தயாரித்து விற்கும் ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில் கொரோனா பாதிப்பு காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்தது. ஆனால், இந்தாண்டு மார்கழி மாதத்தை முன்னிட்டு, ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் அதிகமாக உள்ளது. அவர்களோடு ஐயப்ப பக்தர்களும் அதிகளவு வருவதால், பால்கோவா மற்றும் பால்கோவா சார்ந்த பால் சுவீட்ஸ்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், பால்கோவாவின் தேவையும் அதிகரித்துள்ளது. கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வழங்க வேண்டும் என்பதற்காக தயாரித்து வழங்கி வருகிறோம். பாலுக்கு டிமாண்ட் இருந்தாலும், பல்வேறு பகுதிகளில் இருந்து பாலை வரவழைத்து பால்கோவா தயாரிக்கிறோம். மேலும், தேவை அதிகமாக இருப்பதால், இயந்திரங்கள் மூலமும் பால்கோவா தயாரித்து வழங்கி வருகிறோம்’ என்றார்….

The post திருவில்லிபுத்தூரில் ஐயப்ப சீசன்: பால்கோவா விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது appeared first on Dinakaran.

Tags : Iyapa ,Thiruvilliputtur ,Tiruviliputtur ,Andal Temple ,Thiruvillyputtur ,Balkova ,Iyappa ,Dinakaran ,
× RELATED திருவில்லிபுத்தூரில் நள்ளிரவில்...