×

சொன்னாரே செஞ்சாரா?…. மலைப்பகுதி மக்களை மறந்துபோன எம்எல்ஏ: பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ எஸ்.ஈஸ்வரன்

ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாக பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உள்ளது. சத்தியமங்கலம் தொகுதியை இரண்டாக பிரித்து பவானிசாகரை தலைமையிடமாக கொண்டு கடந்த 2008ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது இத்தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பவானிசாகர் தனித்தொகுதியாகும். மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின் இதுவரை 2 தேர்தல்களை பவானிசாகர் தொகுதி சந்தித்துள்ளது. 2011ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. 2016ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று எஸ்.ஈஸ்வரன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பவானிசாகர் அணை இந்த தொகுதியில்தான் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே அதிக பரப்பளவு கொண்ட அடர்ந்த வனப் பகுதியை உள்ளடக்கிய சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும் இந்த தொகுதியில்தான் உள்ளது. விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள், மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவு. இதை மேம்படுத்த எம்எல்ஏ ஈஸ்வரன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தன்னுடைய வளத்தை பெருக்கிக் கொள்வதில் மட்டுமே 5 ஆண்டுகள் கவனம் செலுத்தி வந்ததாக தொகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.   தொகுதியில் உள்ள காகித ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் கொத்தமங்கலம், புதுப்பீர்கடவு மற்றும் ராஜன் நகர் ஆகிய மூன்று ஊராட்சிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மாசடைந்து கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் குடிப்பதற்கு பயன்படாத நிலை உள்ளதோடு, அந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தியதால் விவசாய நிலங்களும் பாழ்பட்டு கிடக்கிறது. காகித ஆலை கழிவுநீர் மழைக்காலங்களில் பவானி ஆற்றில் கலக்கப்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகும் சூழ்நிலை உள்ளது. காகித ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பதோடு நிலத்தடி நீரை மாசுபடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கை. ஆனால், எம்எல்ஏ ஈஸ்வரன் இப்பிரச்னைக்கு எந்த தீர்வும் காணவில்லை. பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மல்லி, முல்லை, சம்பங்கி, செண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு ரக மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகள் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த மார்க்கெட் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே அரசுக்கு சொந்தமான இடத்தில் மார்க்கெட், வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற எம்எல்ஏ ஈஸ்வரன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது விவசாயிகள் குற்றச்சாட்டு. புஞ்சை புளியம்பட்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள 100க்கு மேற்பட்ட கிராமங்கள் கடும் வறட்சியில் சிக்கி தவிக்கின்றன. பவானிசாகர் அணை நிரம்பி வீணாக கடலில் கலந்து வரும் உபரிநீரை வறட்சி நிறைந்த கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளுக்கு நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் பழுது ஏற்பட்டு நின்று விடுவதால் அடிக்கடி தமிழகம் -கர்நாடகம் இடையே பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு மாற்று வழி அல்லது தீர்வு காணப்படவில்லை. தாளவாடி, ஆசனூர் மலைப்பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவைகள் எட்டாக்கனியாக இருந்து வருகிறது. தாளவாடி மற்றும் புஞ்சை புளியம்பட்டி பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே செயல்படும் சூழ்நிலையில் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பவானிசாகர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஆனால் எம்எல்ஏ ஈஸ்வரன் மக்களின் எந்த கோரிக்கைக்கும் செவி சாய்க்காமல் 5 ஆண்டு காலத்தை கழித்துவிட்டதாகவும், அவரது தற்போதைய சொத்து மதிப்பு தாளவாடி மலையளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். ‘மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள்’ தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரன் கூறும்போது, ‘‘பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக பவானிசாகர் அணையின் முன்பு பவானி ஆற்றின் குறுக்கே ரூ.8 கோடி செலவில் புதிய பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. தொகுதி முழுவதும் தார் சாலை அமைக்கும் பணி, சாலை விரிவாக்க பணி, குடிநீர் திட்ட பணி உள்ளிட்ட மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.‘அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை’ சத்தியமங்கலம் நகர திமுக பொறுப்பாளர் ஜானகி கூறும்போது, ‘‘மலைப்பகுதிகளில் வசிக்கும் மலை வேளாளர் மக்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதேபோல், கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் வனச் சாலையில் உள்ள குத்தியாலத்தூர் பள்ளம் மற்றும் சர்க்கரை பள்ளம் என இரண்டு பள்ளங்களின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட திட்டமிடப்பட்டு இதுவரையிலும் நிறைவேற்றப்படவில்லை. மலைக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. கடந்த தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை’’ என்று குற்றம் சாட்டினார். …

The post சொன்னாரே செஞ்சாரா?…. மலைப்பகுதி மக்களை மறந்துபோன எம்எல்ஏ: பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ எஸ்.ஈஸ்வரன் appeared first on Dinakaran.

Tags : MLA ,Bhavanisagar ,S. Easwaran ,Bhawanisagar Assembly Constituency ,Erode district ,Sathyamangalam ,Bhavanisagar Constituency ,Dinakaran ,
× RELATED பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது