×

பெரியபாளையம் அருகே தீப்பந்தம் போராட்டம் நடத்த வந்த மக்களிடம் அதிகாரிகள் சமரசம்: வாக்குவாதத்தால் பரபரப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தவந்த கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த செங்கரை ஊராட்சியில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த  ஊராட்சியில் உள்ள பல தெரு விளக்குகள் எரியாததுடன் சாலைகள் பழுதடைந்து  போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையின்போது சாலையில் தண்ணீர் தேங்கி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இவற்றை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பலமுறை செங்கரை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், தெரு விளக்குகளை சீரமைக்க வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து செங்கரை ஊராட்சியில் தெருவிளக்குகள் உடனடியாக சீரமைக்கப்பட்டது.இதனிடையே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக வந்த பொதுமக்களை சமரசப்படுத்துவதற்காக போலீசாரும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜ், ஸ்டாலின் ஆகியோரும் ஊருக்குள் வந்தனர். அப்போது அவர்கள், ‘’தீப்பந்தம் ஏந்தும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்’’ என்றும் உங்கள் பிரச்ைன தீர்க்கப்படும்’ என்று கூறினர். அப்போது கிராம மக்கள், ‘’சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை’’ என்று கூறி பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இதன்பிறகு அதிகாரிகள் கூறுகையில், ‘’இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்’’ என்று உறுதி அளித்தனர். இதையடுத்து தீப்பந்தம் ஏந்தும் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது….

The post பெரியபாளையம் அருகே தீப்பந்தம் போராட்டம் நடத்த வந்த மக்களிடம் அதிகாரிகள் சமரசம்: வாக்குவாதத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Uothukkotta ,Thiruvallur District Allapura Union ,
× RELATED பெரியபாளையம் அருகே சிவன், பார்வதி,...