×

அண்ணாநகர், திருமங்கலம், அமைந்தகரை பகுதிகளில் விலையுயர்ந்த பைக்குகளை திருடிய 3 பேர் கைது: 6 செல்போன், 6 பைக் பறிமுதல்

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து விலை உயர்ந்த பைக்குகள் திருடு போவதாக திருமங்கலம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்படி, சம்பவ இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தபோது, 3 பேர்  பைக்குகளை திருடி சென்றது பதிவாகியிருந்தது. இந்நிலையில் நேற்று திருமங்கலம் பாடிகுப்பம் சத்தியசாய் நகர் பகுதியில், திருமங்கலம் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகப்படும்படி ஒரே பைக்கில் வந்த 3 பேரை மடக்கினர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பிக்க முயன்றனர். விரட்டிசென்று 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர்.  பின்னர் காவல் நிலையத்துக்கு கொண்டு விசாரித்தனர். அவர்கள்,  வில்லிவாக்கம் ராஜாஜி நகர் 2வது தெருவை சேர்ந்த சூர்யா (20), முகப்பேர் ஏரித்திட்டம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஜனா (21), வல்லரசு (22) என்பதும் அவர்கள் ஓட்டி வந்த பைக் திருட்டு பைக் என்பதும், பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் சென்னை, அண்ணாநகர், திருமங்கலம், அமைந்தகரை, அரும்பாக்கம், ஜெ.ஜெ.நகர், நொளம்பூர், வில்லிவாக்கம், கோயம்பேடு, கொரட்டூர் ஆகிய பகுதிகளில் விலை உயர்ந்த 20க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.  போலீசாரிடம் அவர்கள் கூறுகையில், “விலை உயர்ந்த பைக்கை நீண்டதூரம் ஓட்டி செல்லவேண்டும் என்ற ஆசை கனவாக இருந்தது. ஆனால் ஒரு பைக் ரூ.2 லட்சம் என்பதால் எங்களிடம் பணம் இல்லை. இதனால் விலை உயர்ந்த பைக்குகளை  திருட முடிவு செய்து திருடினோம். காலையில் நோட்டமிட்டு இரவு நேரத்தில் திருடி நம்பர் பிளேட்களை மாற்றி நீண்ட தூரம் பயணம் செய்துவிட்டு பின்னர் பைக்கை 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு அந்த பணத்தில் ஜாலியாக ஊர் சுற்றி வந்தோம். விலை உயர்ந்த பைக்குகளில் நீண்டதூரம் பயணம் செய்து விட்டதால் நீண்டநாள் கனவு நிறைவேறியது’ என்றனர். இவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. …

The post அண்ணாநகர், திருமங்கலம், அமைந்தகரை பகுதிகளில் விலையுயர்ந்த பைக்குகளை திருடிய 3 பேர் கைது: 6 செல்போன், 6 பைக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Annagar ,Thirumangalam ,Ananthakarai ,Thirumangalam Police ,Chennai ,Annagar, ,Thirumangalam, ,Anantakaram ,Dinakaran ,
× RELATED திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி...