×

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் எழுதி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது யாத்திரை தற்போது டெல்லி சென்றடைந்துள்ளது. ஜனவரி 3ம் தேதி முதல் மீண்டும் அவர் யாத்திரை தொடங்க உள்ளார். இந்த நிலையில் ராகுலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கேட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:  ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த 24ம் தேதி டெல்லி வந்தபோது அதிக அளவில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன. ராகுல் காந்தி இசட் பிளஸ் பாதுகாப்பைப் பெற்றவர். ஆனால் அவருக்கு உரிய பாதுகாப்பை டெல்லி போலீசார் வழங்கவில்லை. காங்கிரஸ் தொண்டர்கள் தான் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி அவரை பாதுகாத்தனர். இந்திய ஒற்றுமை யாத்திரையில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதை தடுக்கும் நோக்கில் புலனாய்வு அமைப்புகள் செயல்படுவது தெரியவந்துள்ளது. யாத்திரையில் பங்கேற்ற பலரிடம் புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி உள்ளனர்.  நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக பாடுபட்ட இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகிய இரண்டு பிரதமர்களை தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். . ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை வரும் ஜனவரி 3ம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது. மிகவும் பதற்றமான பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இந்த பாத யாத்திரை செல்ல இருக்கிறது. இசட்பிளஸ் பாதுகாப்பைப் பெற்றவர் என்பதால் ராகுல் காந்திக்கு போதுமான பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும்  அவரோடு பாத யாத்திரையில் பங்கேற்க இருக்கும் தலைவர்கள் தொண்டர்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். ஏனெனில் பாதயாத்திரை அடுத்த கட்டமாக பஞ்சாப் மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைய உள்ளது. எனவே ராகுல் பாதுகாப்பை  உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்….

The post இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுலுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Rakulu ,Indian Unity pilgrimage ,Congress ,Amitshah ,New Delhi ,Home Minister ,Amitsha ,Rahal Gandhi ,Rakul ,Indian Unity ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...