×

கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது-2022க்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது-2022க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியிட அறிக்கையில்:  தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவை விதி எண்.110-இன் கீழ் 22.04.2022 அன்று சட்டப்பேரவையில் “கிராம ஊராட்சிகளில் வெளிப்படைத்தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி, அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து, நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது 2022-ஆம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும்” என அறிவித்தார்கள்.அதனடிப்படையில், 2022-ஆம் ஆண்டிலிருந்து சிறப்பாக செயல்புரிந்த 37 கிராம ஊராட்சிகளை மாவட்டத்திற்கு ஒன்று வீதம் தேர்வு செய்து “உத்தமர் காந்தி விருது” வழங்குவதற்காக ரூ.3.80 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து பார்வையில் காணும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளைத் தேர்வு செய்யும் முறையானது அரசாணை (நிலை) எண்.114, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (ப.ரா 2) துறை, நாள்:11.10.2022-யின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.இவ்விருதுக்கு அனைத்து கிராம ஊராட்சிகளும் விண்ணப்பம் செய்யலாம். கிராம ஊராட்சிகள் மிக எளிய முறையில், இணையதளத்தின் வழி படிவங்களில் உள்ள பதிவுகளை உள்ளீடு செய்து விருதுக்கான போட்டியில் பங்கேற்கலாம்.  கிராம ஊராட்சிகள் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு <https://tnrd.tn.gov.in/> இணையதள முகவரியினை பயன்படுத்திட உரிய பயனர் மற்றும் கடவுச் சொற்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இது தொடர்பாக கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு உரிய பயிற்சியினை 31.12.2022-க்குள் அளித்திடத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பங்கேற்று விருதுக்கு போட்டியிடுகையில் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள காரணிகளுக்கான தொடர்புடைய பதிவுகளை உள்ளீடு செய்ய அடிப்படை புள்ளி விவரங்களை கிராம ஊராட்சிகள் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். இவ்விருதுக்கு போட்டியிடும் கிராம ஊராட்சிகளை மதிப்பெண்கள் மூலம் பட்டியலிடப்பட்டு மாவட்டத்திற்கு 5 சிறந்த கிராம ஊராட்சிகள் வீதம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநகரத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களால் முன்மொழியப்பட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 சிறந்த கிராம ஊராட்சிகள் மாநில அளவில் இறுதி செய்யப்படும். அரசால் இறுதி செய்யப்பட்ட 37 கிராம ஊராட்சிகளுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்களால் கேடயம், பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.10 இலட்சம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.எனவே, வளர்ச்சிப் பணி மேற்கொள்வதிலும், நல்ல நிர்வாகத்தினை மேம்படுத்தவும், கூர்நோக்கிய வளர்ச்சிப் பாதையில் பயணிக்கவும், கிராம ஊராட்சிகளிடையே ஆரோக்கியமான போட்டியினை ஏற்படுத்தி துரித வளர்ச்சியினை எய்திட இவ்விருதுக்கான அறிவிப்பு இப்பத்திரிகை செய்தி வாயிலாக வெளியிடப்படுகிறது.  இதனை அனைத்து கிராம ஊராட்சிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.  இவ்விருதுக்கான இணையதள பதிவுகளை 17.01.2023 -க்குள் செய்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. …

The post கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது-2022க்கு விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Grama Uradhiya ,Chennai ,Tamil Nadu ,Stalin ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...