×

மாநகராட்சி நிதியில் இருந்து குமரி மருத்துவ கல்லூரி வளாகத்தில் சாலை சீரமைக்க முடிவு-மேயர், ஆணையர் ஆலோசனை

நாகர்கோவில் :  குமரி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள சாலையை மாநகராட்சி சார்பில் சீரமைக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மேயர், ஆணையர் ஆகியோர் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டனர். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சாலை மிக மோசமாக உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு வாகனங்கள் வந்து செல்வதில் பெரும் சிரமம் உள்ளது.எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் இது தொடர்பாக பல்வேறு கட்ட கோரிக்கைகள் வைத்தும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சாலை சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது.இந்த நிலையில், தற்போது மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக ஆலோசிக்க மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்தமோகன் ஆகியோர் நேற்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர்கள் டாக்டர்கள் விஜயலட்சுமி, ரெனி மோள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் மேயர் மகேஷ் கூறுகையில், சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு சாலையை சீரமைக்க வேண்டியது வரும். பொதுப்பணித்துறை தான் இந்த சாலையை சீரமைக்க வேண்டும். மாநகராட்சி சார்பில் இதை சீரமைக்க வேண்டும் என்றால் பொதுப்பணித்துறை சார்பில் தடையின்மை சான்று தர வேண்டும். பொதுப்பணித்துறை தடையின்மை சான்று அளித்ததும் இது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது பற்றி முடிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். …

The post மாநகராட்சி நிதியில் இருந்து குமரி மருத்துவ கல்லூரி வளாகத்தில் சாலை சீரமைக்க முடிவு-மேயர், ஆணையர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Kumari Medical College ,Nagarko ,Dinakaran ,
× RELATED வாய்ப்பு கேட்ட விஜயதரணி காத்திருக்க சொன்ன அமித்ஷா