×

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படை ஏவி கணவனை கொன்ற பெண் எஸ்ஐ கைது: பெண் சாமியார் மூலம் கொலை அரங்கேற்றம், மகன், கள்ளக்காதலனை சரணடைய வைத்து நாடகம்

கிருஷ்ணகிரி: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாஜி போலீஸ் ஏட்டுவை, கூலிப்படை ஏவி கொலை செய்த, அவரது எஸ்ஐ மனைவி மற்றும் பெண் சாமியார், கூலிப்படையினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கூலிப்படை தலைவன் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(48). மாஜி ஏட்டு. இவரது மனைவி சித்ரா(44), தற்போது சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜெகதீஷ்குமார்(19) என்ற மகன் உள்ளார். இவர்கள் 3 பேரும், ஊத்தங்கரை கவர்னர்தோப்பு பகுதியில் வசித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 16ம்தேதி செந்தில்குமார் மாயமானார். இதுகுறித்து அவரது தாய் பாக்கியம், கல்லாவி போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில், கடந்த அக்டோபர் 31ம் தேதி புகார் அளித்தார். இதுகுறித்து, போலீசார் ஜெகதீஷ்குமார் மற்றும் செந்தில்குமாரின் கார் டிரைவர் கமல்ராஜ்(37) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். மீண்டும் கடந்த 13ம்தேதி காலை, விசாரணைக்கு வருமாறு போலீசார் அழைத்தனர். இந்நிலையில், மறுநாள் (14ம் தேதி) காலை, இருவரும் கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் ஸ்ரீவத்சவா முன் சரண் அடைந்து, செந்தில்குமாரை கொலை செய்து, தென்பெண்ணை ஆற்றில் வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பந்தமாக, ஊத்தங்கரை டிஎஸ்பி அமலஎட்வின், செந்தில்குமாரின் மனைவி சித்ராவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். இதனிடையே, நேற்று முன்தினம் அழுகிய நிலையில் செந்தில்குமாரின் உடலை, விவசாய கிணற்றில் இருந்து மீட்ட போலீசார், சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து, அவரது உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் கடந்த 23ம்தேதி, சேலம் மத்திய சிறையில் இருந்த கமல்ராஜ், ஜெகதீஷ்குமார் ஆகியோரை, ஊத்தங்கரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்தனர். மேலும், சந்தேகத்தின் பேரில், எஸ்எஸ்ஐ சித்ராவையும் பிடித்து விசாரித்தனர். இதில் செந்தில்குமாரை கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் எஸ்எஸ்ஐ சித்ரா, பாரதிபுரத்தை சேர்ந்த பெண் சாமியார் சரோஜா(32), கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார்(21), ராஜபாண்டியன் (32) ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தூத்துக்குடியை சேர்ந்த கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமி, செங்குட்டுவன் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர். போலீசார் விசாரணையில் கைதான எஸ்எஸ்ஐ சித்ரா அளித்த வாக்குமூலம் விபரம்:  ஏட்டாக பணியாற்றிய செந்தில்குமார்,  கடந்த 2002ல் போலீஸ் வாகனத்தை திருடி விற்பனை செய்ததால், டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு, கார் ஒன்றை வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். இதனிடையே, செந்தில்குமாரின் காரை ஓட்ட, மாற்று டிரைவராக கமல்ராஜ் வந்தார்.அவருடன் எனக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், நாங்கள் உல்லாசமாக இருந்து வந்தோம். அதேபோல், எனது கணவர் செந்தில்குமாருக்கும், வேடியம்மாள் என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதனிடையே கமல்ராஜ் அடிக்கடி வீட்டுக்கு வந்ததால், செந்தில்குமார் கண்டித்தார். ஒருநாள் செந்தில்குமார் வீட்டுக்கு வந்த போது, கமல்ராஜூம் அங்கே இருந்ததால், ஆத்திரமடைந்த அவர், பொருட்களை உடைத்து நொறுக்கினார். இது குறித்து கமல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் வந்த அவர் வீட்டில் தங்காமல் வெளியில் தங்கினார். இதனிடையே, பாரதிபுரத்தை சேர்ந்த பெண் சாமியார் சரோஜாவை சந்தித்த போது, இதுகுறித்து தெரிவித்தேன். அவர் தன்னிடம் கூலிப்படை உள்ளதாகவும், ரூ.10 லட்சம் கொடுத்தால் செந்தில்குமாரை கொலை செய்து விடுவதாகவும் தெரிவித்தார். அவரிடம் ரூ.9.60 லட்சத்தை கொடுத்தேன். பின்னர், கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமியிடம், நான் வழக்கில் சிக்காமல் இருக்க, கோர்ட் டியூட்டியில் இருக்கும்போது, எனது கணவர் கொலையை அரங்கேற்றும்படி தெரிவித்தேன். அதன்படி, சம்பவத்தன்று செந்தில்குமாரை, எனது மகன் ஜெகதீஷ்குமார் மூலம் வீட்டுக்கு வரவழைத்தோம். அவர் வந்ததும் தயாராக இருந்த கூலிப்படையினர் அவரை அடித்துக்கொலை செய்தனர். பின்னர், சடலத்தை அங்கேயே போட்டு விட்டு சென்றனர். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த என்னால், செந்தில்குமாரின் சடலத்தை தூக்க முடியவில்லை. இதனால், கூலிப்படையினரை மீண்டும் வீட்டுக்கு வரவழைத்து, வெள்ளைச்சாமியின் கார் மூலம் சடலத்தை தூக்கிச்சென்று, விவசாய கிணற்றில் வீசி விட்டோம். இந்த வழக்கில் போலீசார் விசாரணை தீவிரமடைந்ததால், என்மீது சந்தேகம் வராமல் இருக்க கள்ளக்காதலன் மற்றும் மகனை கோர்ட்டில் ஆஜராகும்படி தெரிவித்தேன். அதன்படி இருவரும் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த வழக்கில் போலீசார் செல்போன் உரையாடல்களை ஆராய்ந்து, பெண் சாமியார் சரோஜாவை பிடித்து வந்து விசாரித்தனர். அவர் நடந்த சம்பவங்களை தெரிவித்து விட்டார். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படை ஏவி கணவனை கொன்ற பெண் எஸ்ஐ கைது: பெண் சாமியார் மூலம் கொலை அரங்கேற்றம், மகன், கள்ளக்காதலனை சரணடைய வைத்து நாடகம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Attu ,SI ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு