×

எது முக்கியம், உயிரா? பணமா? ஆன்லைன் விளையாட்டு ஆளுநரின் விளையாட்டு: ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததால் தொடரும் தற்கொலை, பல ஆயிரம் கோடி வருமானம் பாதிப்பதால் ஒன்றிய அரசு இழுத்தடிப்பா?

‘ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு’ என்று அன்று கேட்டார் அறிஞர் அண்ணா. இதை வழிமொழிந்து, இன்று நாடு முழுவதும் பல மாநிலங்கள் குரல் கொடுக்க தொடங்கி உள்ளன. ஒன்றிய அரசின் ஏஜென்டாக செயல்பட்டு வரும் ஆளுநர், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுகிறார். இதுவே அவருக்கு எதிராக ஒருமித்த குரல் எழ காரணம். இதனால், ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய தனிநபர் மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரே ஆளுநர். இதுதான் அரசியலமைப்பு சட்டமும் சொல்கிறது’ என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் குட்டு வைத்தாலும், ‘நான் தனி காட்டு ராஜாதான்’ என்று அரசியலமைப்பு சட்டத்தையே மீறி செயல்பட்டு வருகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இவரின் எதேச்சதிகாரத்தால் இன்று தமிழகத்தில் பல உயிர்கள் பறிபோய் கொண்டு இருக்கிறது. உலகிலேயே மிகச்சிறந்த ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கொண்ட நாடு இந்தியா. நம் நாட்டில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் மக்களவைக்கு தேர்வு செய்யப்படும் எம்பிக்கள், மாநில சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்படும் எம்எல்ஏக்கள் (நியமனங்கள் தவிர) ஆகிய அனைவரும் தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படுகிறார்கள். நாட்டின் முதல் குடிமகனை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். ஆனால், ஆளுநர்கள் மட்டுமே ஒன்றிய அரசால் பரிந்துரை செய்யப்பட்டு, ஜனாதிபதி மூலம் நியமனம் செய்யப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் மக்களே எஜமானர்கள். ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: மக்களால் தேர்வு செய்யப்படும் ஆட்சியாளர்கள், சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள் நிராகரிப்பது, காலதாமதம் செய்வது, கிடப்பில் போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு முறையும், மாநில அரசுகள் தங்களது அதிகாரத்தை நிரூபிக்க உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டுவதே வாடிக்கையாகி விட்டது. உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில், ‘மாநில அரசுக்கு கட்டுப்பட்டவரே ஆளுநர்’ என்று திரும்ப திரும்ப சொல்லியும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் தனி அரசாங்கம் நடத்துவது போல் செயல்பட்டு வருகின்றனர். 40க்கும் மேற்பட்டோர் பலி: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால், லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பட்டதாரிகள், இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதோடு மட்டுமில்லாமல் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்து விடுகின்றனர். இந்த சூதாட்டத்தால் ஏற்படும் கடன் பிரச்னையை சமாளிக்க முடியாமல், ஒன்றும் அறியாத குழந்தைகளையும் பலிகடா ஆக்குகின்றனர்.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதை தடுக்க தமிழக சட்டப்பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கபட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதுதொடர்பாக, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து நேரில் முறையிட்டார். பின்னர், ஆளுநர் மாளிகையில் இருந்து மசோதாவில் சில விளக்கங்கள் கேட்கப்பட்டது. அதற்கு ஒரே நாளில் தமிழக அரசும் விளக்கமளித்தது. இருப்பினும், மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.ஒன்றிய அரசின் பணத்தாசை: ஆளுநரின் இந்த செயலை கண்டித்து, தமிழகத்தில் உள்ள பாஜ, அதிமுகவை தவிர மற்ற அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியும் மற்றும் கண்டனங்கள் தெரிவித்தும், ஆளுநர் காலதாமதத்துக்கான காரணங்களை தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். ஆளுநரின் இந்த தாமதத்துக்கு முக்கிய காரணமே ஒன்றிய அரசு ஆன்லைன் விளையாட்டுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்த திட்டமிட்டுள்ளதுதான். ஆன்லைன் விளையாட்டு தற்போது 18% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் பரிசுக்கும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. இதனால், ஆன்லைன் விளையாட்டு மூலம் ஒன்றிய அரசுக்கு பல ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. தற்போது, ஆன்லைன் விளையாட்டுக்கு 28% ஜிஎஸ்டி வரி உயர்த்தினால் இப்போது கிடைக்கும் வருவாயுடன் சேர்த்து 55% கூடுதலாக கிடைக்கும்.  தலையாட்டி பொம்மை: நாட்டிலேயே தமிழகம், அதிக ஜிஎஸ்டி வரி வருவாயை ஒன்றிய அரசுக்கு தருகிறது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்தால், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் பாதிக்கும் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது. ஆனால், ஆன்லைன் விளையாட்டுக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், கடைசியாக நடந்த 2 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் வரியை உயர்த்துவதை பற்றி விவாதிக்காமல் ஒன்றிய அரசு பின்வாங்கியது. இதன் காரணமாகவே ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த ஆளுநருக்கு பணிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. அதன்படியே, ஒன்றிய அரசின் ஏஜென்டாக உள்ள ஆளுநர் தலையாட்டி பொம்மை போல் இந்த விவகாரத்தில் விளையாட்டு காட்டி வருவதாக சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.* ஜனாதிபதி போடுகிறார்… ஆளுநர் அடம் பிடிக்கிறார்…நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒன்றிய அரசு பல்வேறு மசோதக்களை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்புகிறது. அந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புதல் அளித்து வருகிறார். திருப்பியும் அனுப்பப்படுவதில்லை. இதேபோல், பாஜ ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கும் அந்தந்த ஆளுநர்கள் உடனே ஒப்புதல் அளிக்கின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும்தான் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் பல ஆண்டுகளாக ஆளுநர்கள் கிடப்பில் போடுகிறார்கள். சில மசோதாக்களை நிராகரித்தும் திருப்பி அனுப்புகிறார்கள்.* ஆளுநருக்கு எதிராக திரும்பும் மாநிலங்கள்டெல்லி, கேரளா, புதுச்சேரி, தெலங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தனி ஆட்சியை ஒன்றிய அரசு நடத்தி வருகிறது. இதற்கு அந்தந்த மாநில முதல்வர்களுடனான மோதலே சாட்சி. மாநில அரசுகள் அறிவிக்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களில் தலையிடுவதன் மூலம் அதை செயல்படுத்த முடியாமல் போகிறது. இதனால் மாநில அரசுகள் மீது மக்களுக்கு அதிருப்தி எழுகிறது. இதேபோல், பல்கலைக்கழக விவகாரங்களிலும் பல மாநிலங்களில் ஆளுநர்கள் மோதலில் ஈடுபட்டுளனர். கேரளாவில் ஆளுநருடனான மோதல் காரணமாக இந்த ஆண்டு கூட்டத்தொடரை அதிகாரப்பூர்வமாக முடிக்காமல் அடுத்த ஆண்டு இதே கூட்டத்தொடரை தொடர்ந்து, ஆளுநர் உரையை தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் முட்டல் மோதல் தொடர்கிறது. டெல்லியிலும் ஏட்டிக்கு போட்டிதான் ஆட்சி நடந்து வருகிறது. தெலங்கானாவில் ஆளுநரின் நிகழ்ச்சிகளை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்து வருகிறார். சமீபத்தில் பேசிய புதுச்சேரி முதல்வர், ‘ஆளுநரின் தலையீடு, அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால், தன்னால் எதையும் செய்ய முடியவில்லை. அதனால் மன உளைச்சலில் இருக்கிறேன்’ என்று வெளிப்படையாக பேசி இருந்தார். தெலங்கானாவுக்கும், புதுச்சேரிக்கும் தமிழிசைதான் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது. பல மாநிலங்களில் ஆளுநருக்கு எதிராக அரசுகள் திரும்பி உள்ளதால், ஆளுநர் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. * கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்ஒன்றிய ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் பெங்களூருவில் அளித்த பேட்டியில், ‘இந்தியாவில் இளம் வயதினர் தொடங்கி பலரும் ஆன்லைன் விளையாட்டை விரும்பி விளையாடி வருகின்றனர். ‘பேண்டஸி கேமிங்’ என்று வகைபடுத்தப்படும் பல விளையாட்டுகள் சூதாட்டம் போல இருப்பதால், அதில் பணத்தை இழப்பதற்கான அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் தற்கொலை போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு புதிய கொள்கைகள் வகுக்கப்படும் அல்லது நாடாளுமன்றம் மூலம் விரைவில் புதிய சட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது’ என்று தெரிவித்தார். தற்கொலைகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்காமல் ஆலோசனை நடத்தி புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அமைச்சர் கூறுவது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பானது.* சூதாட்ட நிறுவனத்துடன் ரகசிய சந்திப்பு ஏன்?ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வலியுறுத்தி எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தும் கேம் 24×7 உரிமையாளர் விக்ரமன், இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் சமீர், ஹெட் டிஜிட்டல் ஒர்க் தீபக் கோலபள்ளி, குலோப் நிறுவன இயக்குநர் நேகா சிங்வி, இஜிஎப் நிறுவன இயக்குநர் ரோகன் சரீன், ஜங்கிலி கேம்ஸ் நிறுவன நிர்வாகி சஞ்சீவ் ஜெடி ஆகிய ஆகியோர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கடந்த 5ம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசி உள்ளனர். இந்த சந்திப்பில், ‘ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், ஆனால், கவர்னர் ஆர்.என்.ரவியுடன் நடந்த சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பு என்பதால் முழு விவரத்தையும் தெரிவிக்க முடியாது’ என்றும் இ-கேமிங் பெடரேஷன் நிர்வாகி சமீர் பாரதி கூறியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.* நீட்டும், ரம்மியும்…மாநில பட்டியலில் இருந்த கல்வி, ஒன்றிய பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக மாணவர்கள் தள்ளப்பட்டனர். இந்த நீட் தேர்வால் அரியலூர் அனிதா, செஞ்சியை அடுத்த பெரவளூர் பிரதீபா, திருச்சி சுபஸ்ரீ, சென்னை சேலையூரைச் சேர்ந்த ஏஞ்சலின் சுருதி, திருப்பூர் ரிது ஸ்ரீ, மரக்காணம் கூனிமேடு மோனிசா, பட்டுக்கோட்டை வைஸ்யா, நெல்லை தனலட்சுமி, கோவை ஆர்.எஸ்.புரம் சுப ஸ்ரீ, மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, செந்துறை விக்னேஷ், தருமபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால், மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த தனுஷ், அரியலூர் துலாரங்குறிச்சியைசேர்ந்த கனிமொழி என பலர் தற்கொலை செய்து கொண்டார். இதனால், தமிழகத்தில் நீட் விலக்கு மசோதா கடந்த அதிமுக ஆட்சியில் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அது, ஜனாதிபதிக்கு அனுப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது. இந்த விவகாரமே 2 ஆண்டுகள் கழித்துதான் தெரியும். அந்த அளவுக்கு அதிமுக ஆட்சியாளர்கள் இருந்தனர். இதனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பினார். ஆனால், இதுவரை இந்த மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டதால், நீட்டாலும், ஆன்லைன் ரம்மியாலும் தமிழகத்தில் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது….

The post எது முக்கியம், உயிரா? பணமா? ஆன்லைன் விளையாட்டு ஆளுநரின் விளையாட்டு: ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததால் தொடரும் தற்கொலை, பல ஆயிரம் கோடி வருமானம் பாதிப்பதால் ஒன்றிய அரசு இழுத்தடிப்பா? appeared first on Dinakaran.

Tags : Union government ,Scholar ,Anna ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...