×

திடீரென தீப்பிடித்து எரிந்த வேன் சென்னை பக்தர்கள் உயிர் தப்பினர்: திட்டக்குடியில் பரபரப்பு

திட்டக்குடி:  சென்னையில் இருந்து கடந்த 22ம் தேதி ஐயப்ப பக்தர்கள் 8 பேர் கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்றனர். அங்கு தரிசனம் முடித்துவிட்டு ஐயப்ப பக்தர்கள் நந்தகுமார்(30), பிரவீன்(41), ராஜகோபால்(33), அனீஸ்(28), சரிப்(42), காந்தி(55), பந்தல் ராஜன்(48), நரேஷ் (37) ஆகியோர் மீண்டும் நேற்று சொந்த ஊர் திரும்பினர். வேனை சுதாகர் (38) என்பவர் ஓட்டினார். பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள ஓட்டலில் காலை உணவு சாப்பிட்டு விட்டு ஊர் திரும்பினர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள வெங்கனூர் அருகே வந்தபோது, வேனின் முன் பகுதியில் உள்ள இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது. உடனடியாக வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் சுதாகர் வேனை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்தினார். உடனடியாக வண்டியில் பயணம் செய்த 8 ஐயப்ப பக்தர்களும் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடினர். அடுத்த சில நொடிகளில் வேன் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த  தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். அதற்குள் வேன் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து வேனில் பயணம் செய்த அனைவரும் மாற்று வாகனம் மூலம் சொந்த ஊர் திரும்பினர்….

The post திடீரென தீப்பிடித்து எரிந்த வேன் சென்னை பக்தர்கள் உயிர் தப்பினர்: திட்டக்குடியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tathakkudi ,Chennai ,Iyappa ,Iyappan Temple ,Kerala ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...