×

வேலூர் மீன் மார்க்கெட்டில் வரத்தும், விற்பனையும் சரிவு

வேலூர் :  மார்கழி மாதம், ஐயப்ப சீசன் ஆகிய காரணங்களால் வேலூர் மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து சரிந்ததுடன், விற்பனையும் குறைந்தது.வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் உள்ளூர் நீர்நிலைகள் மட்டுமின்றி, கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, தூத்துக்குடி ஆகிய இடங்களில் இருந்து விற்பனைக்காக வருகின்றன. பொதுவாக 10 முதல் 12 கன்டெய்னர் லாரிகளில் மீன்கள் வரத்து இருக்கும். இங்கிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், சில்லறை வியாபாரத்துக்கும் மீன்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. மேலும் உள்ளூர் மக்களும் வேலூர் இறைச்சி மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் குவிந்துவிடுவர். அதேநேரத்தில் புரட்டாசி மாதத்தில் மட்டும் விற்பனை கடுமையாக சரிவு காணும். மேலும் புயல், பருவமழை சீசன்களிலும், மீன்பிடி தடைகாலங்களிலும் மீன்கள் வரத்து சரிவதுடன், விலையும் உச்சத்துக்கு செல்லும்.இந்நிலையில் புயல் மழை காரணமாக வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு 4 கன்டெய்னர்களில் மட்டுமே மீன்கள் வரத்து இருந்தது. இதனால் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது. அதேநேரத்தில் மீன் மார்க்கெட் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.அதற்கேற்ப நேற்று வேலூர் மீன் மார்க்கெட்டில் மீன்களில் விரால் கிலோ ₹600க்கும், வஞ்சிரம் கிலோ ₹1,200க்கும், ஏரி வவ்வால் கிலோ ₹160க்கும், சங்கரா கிலோ ₹450க்கும், நண்டு கிலோ ₹400க்கும், இறால் கிலோ ₹400 முதல் ₹600 வரையும், மத்தி கிலோ ₹150க்கும், ஜிலேபி கிலோ ₹100க்கும், கட்லா கிலோ ₹180க்கும் விற்பனையானது.இதுதொடர்பாக மீன் வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘வழக்கமாக 10 லோடுக்கு மேல் வேலூர் மார்க்கெட்டுக்கு மீன்வரத்து இருக்கும். ஆனால் புயல், பருவமழை காரணமாக மீன் வரத்து 4 லோடுகளாக குறைந்துள்ளது. அதனால் விலையும் சற்று உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் வாடிக்கையாளர்களும் அவ்வளவாக இல்லை. இதற்கு மார்கழி மாதமும், ஐயப்ப சீசன் தொடங்கியதும் காரணம்’ என்றனர்….

The post வேலூர் மீன் மார்க்கெட்டில் வரத்தும், விற்பனையும் சரிவு appeared first on Dinakaran.

Tags : Vellore Fish Market ,Vellore ,Margazi ,Iyapa ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...