×

இலை கட்சி விவிஐபிக்களை தினமும் கொல்லும் கொடநாடு வழக்கு விசாரணையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கொடநாடு கொலை வழக்கை விசாரிக்க அதிகாரிகள் களம் இறக்கப்பட்டுள்ளதால், கிலியில் இருக்கும் இலை கட்சியினரை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தங்கள் கட்சி தலைவர் தங்கிய இடமான கொடநாடு என்றாலே உண்மையான இலை கட்சி தொண்டர்களுக்கு அங்கு நடந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாம். அந்த வடு இன்னும் மறையவே இல்லை. கொள்ளையடிக்க வந்தவர்களை தடுத்தபோது விசுவாசியான ஊழியர் கொலை செய்யப்பட்டார். ஆனால், மற்ற காவலாளிகள் என்ன செய்தாங்க என்றே தெரியவில்லை. இந்த பங்களாவில் இருந்து நூற்றுக்கணக்கான சொத்து பத்திரங்கள், மாஜி மந்திரிகள் எழுதி கொடுத்த வாக்குமூலங்கள், தவறு செய்தவர்களின் பெயர்கள், அவர்கள் செய்த தவறு போன்ற விவரங்களை எல்லாம் கொள்ளையடித்து கொண்டு போனாங்க. இப்போது இந்த பட்டியல், பத்திரங்கள் கிடைத்தால் தான் யார் எங்கே முதலீடு செய்து இருக்காங்க. எவ்வளவு கருப்பு பணம் பதுக்கி இருக்காங்க. தமிழக மக்களின் பணம் குறித்த பல்வேறு விவரங்கள் கிடைக்குமாம். இதனால உண்மையான இலை கட்சி தொண்டர்கள், இதுல ஈடுபட்ட எல்லாரையும் சட்டத்தின் முன் நிறுத்தனுமுன்னு தினமும் வேண்டிக்கிட்டிருக்காங்களாம். அதே நேரத்துல, கொடநாடு வழக்கை மூணே மாசத்துல முடிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து இருக்காங்களாம். இதற்காக தொழில்நுட்பம் தெரிஞ்ச, புலன் விசாரணையில் புலியாக செயல்படும் ஆபீசர்கள் களம் இறக்கப்பட்டிருக்காங்க. கொலை நடந்த இடத்துல இருந்த செல்போன் டவர் நடமாட்டத்தை, முற்றிலும் அழிச்சிட்டாங்களாம். அதையெல்லாம் மீட்டு, உண்மையான குற்றவாளிகளை பிடிச்சுடுவாங்களாம். இதுக்காக மாங்கனி மாநகர சைபர் கிரைம்ல இருந்தும், ரெண்டு கீழ்மட்ட ஆபீசர்ஸ் புதுசா கொடநாடு போயிருக்காங்களாம். இதனால மாங்கனியின் முக்கிய புள்ளிகளுக்கு கிலி ஏற்பட்டிருக்காம். ஏன்னா, இந்த கொள்ளையின் முக்கிய குற்றவாளியானவர் கொள்ளையடிச்ச பொருட்களை, மாங்கனி நகருக்கு கொண்டு வந்து சப்ளை செய்ய யார் சம்பந்தப்பட்டு இருந்தாங்களோ அவர்களிடம் பத்திரம், எழுதி கொடுத்த பட்டியல்களை கொடுத்து எரிச்சுட சொன்னாங்களாம். அதுவும் தீக்கிரையாகி போச்சாம். இந்த மூன்று மாச கெடு என்பது இலை கட்சியின் முக்கிய விவிஐபிக்களுக்கு கிலி ஏற்படுத்தியிருக்காம். காரணம், களம் இறங்கி இருப்பது கில்லியான அதிகாரிகளாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘அரசு பணத்தை சுட்டதை அப்படியே வீடியோவாக வெளியிட்டதால் முத்து மாவட்ட அதிகாரிகள் கலக்கத்திலா இருக்காங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘முத்து மாவட்டத்தில் வைகுண்டம் பெயரைக் கொண்ட ஊரில் அலுவலர்கள் இணைந்து அரசு பணத்தில் கைவைத்தார்களாம். போலி ஆவணங்களை தயார் செய்து அலுவலக பணத்தை சுருட்டிக் கொண்டார்களாம். இதை கேள்விப்பட்ட மக்கள் தைரியமாக சென்று அலுவலர்களிடம் விளக்கம் கேட்டார்களாம். அதற்கு அந்த அதிகாரி தரப்பில் மழுப்பல் பதில்தான் வந்ததாம். பின்னர் அலுவலர்கள் ஒன்று சேர்ந்து ‘பஞ்சாயத்து’ செய்தாங்களாம். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து அந்த ஊழல் தொடர்பாக முத்து மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளாராம். கண்ணான துறை உயர் அதிகாரி விளக்கம் கேட்டுள்ளாராம். விசாரணையில் ஊழல் குட்டு வெளியாகி விடுமோ என அதிகாரிகள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘புல்லட்சாமிக்கும் கதர் கட்சியின் சாமிக்கும் என்ன லடாய்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரியில் மாநில அந்தஸ்து விவகாரத்தால் புல்லட்சாமி மன உளைச்சலில் இருப்பதாக மனம் திறந்து பேச, அவருக்கு ஆதரவாக அமைப்புகளும் களத்தில் குதித்து, போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. புல்லட்சாமியின் மன உளைச்சலுக்கு டெல்லி தாமரை அரசு தான் காரணம் என்கின்றனர். இதனை தான் சாமி வெளிப்படுத்தியிருப்பதாக எல்லோரும் கம்பு சுத்துவதால், தாமரை தரப்புக்கு எரிச்சலூட்டியுள்ளதாம். இசையானவர் சாமியின் மன உளைச்சலை தீர்ப்பேன் எனக்கூறி சமாதானம் செய்தாலும் பிரச்னை முடியவில்லை. கதர் கட்சியில் முதல்வராக இருந்த சாமி, ஒருபடி மேலே போய், புல்லட்சாமிக்கு மாநில அந்தஸ்து குறித்து உண்மையான அக்கறையில்லை. அவருக்கு ஏதாவது பிரச்னையென்றால் உடனே இதனை கையில் எடுத்துக்கொள்வார். இதெல்லாம் நடிப்பு என கொளுத்தி போட்டாராம். இதனால் கடுப்பான புல்லட்சாமி ஆதரவாளர்கள், மாநில அந்தஸ்து பற்றி வாய் கிழிய பேசும் கதர் சாமி, நேரத்துக்கு தகுந்தமாதிரி டிராமா போடுவதாக சமூக வலைதளத்தில் கிழித்து தொங்கவிட்டுள்ளனர். அதில் மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஏனாம் மக்களுக்கு வாக்குறுதியளித்து கதர் சாமி கைப்பட எழுதிய லெட்டரையும் வெளியிட்டு இருக்காங்க. புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே இருக்க வேண்டும் என்பதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இது ஏனாம் மக்களுக்கு நான் செய்யும் அர்ப்பணிப்பு, என் வாழ்நாள் வரை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை அனுமதிக்க மாட்டேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்… இந்த லெட்டர் தற்போது புதுச்சேரியில் ஒரு கலக்கு கலக்கி வருதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியினரின் புலம்பல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்காமே, இதுக்கு முடிவே கிடையாதா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இரண்டு விஐபிக்களில் ஒருவர் விட்டு கொடுத்தால் பிரச்னை முடிந்துவிடும். ஆனால், இரண்டு தரப்பும் ஜவ்வு  போல பிரச்னையை இழுத்துகிட்டு போறாங்களாம். இவங்க ரெண்டு பேரும்தான்னு இல்லாம, இலைக்கு பின்னாடி போயஸ்கார்டன் உறவுக்காரங்க, சின்ன மம்மின்னு ஏகப்பட்ட பேரு இலைய பிச்சிபோடாத குறையாக, கட்சிக்குள்ள நான், நீன்னு வேலை செஞ்சிகிட்டிருக்காங்களாம். கால வாரிவிடுற வேலை. எது எப்படி இருந்தாலும் தன் பக்கம் கூட்டம் சேர்க்குறதுக்கு, தேனிக்காரரு, மாவட்டங்கள் தோறும் நிர்வாகிகளை தேடி பிடிக்க தொடங்கியிருக்காராம். இதுல கிரிவலம் மாவட்டத்துல தேனிக்காரருக்கு ஆதரவு குறைவுதானாம். இதனால, கட்சியில ஒதுக்குனவங்க, ஓரம்கட்டப்பட்டவங்கன்னு, அறிமுகமே இல்லாதவங்கள, நிர்வாகிகளாக அறிமுகம் செய்றாங்களாம். இவங்க 2 பேரு சண்டையால எப்படியிருந்த நாம, இப்படி ஆகிட்டோமேன்னு இலையின் உண்மையான நிர்வாகிகள் நினைக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post இலை கட்சி விவிஐபிக்களை தினமும் கொல்லும் கொடநாடு வழக்கு விசாரணையை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Kodanad ,Leaf Party ,Koda ,Nadu ,Gili ,Peter ,
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் ஜனநாயகத்தை பாஜ...