×

ஆன்லைன் விளையாட்டுகளில் ரூ.10 ஆயிரம் சம்பாதித்தாலும் வரி: ஒன்றிய அரசு திட்டம்: பட்ஜெட்டில் புது கெடுபிடி வருகிறது

புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டில் ரூ.10,000க்குள் சம்பாதித்தால் கூட டிடிஎஸ் பிடித்தம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டுக்கள், சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கும் நிலையில், இவற்றின் மூலம் வரி விதிப்பை அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள இந்த முடிவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். எனவே, ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என, தமிழகம் உட்பட பல மாநிலங்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த 18ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி வரும் நிலையில், இதுகுறித்த முடிவை எடுக்காமல் ஒன்றிய அரசு பின்வாங்கியது. ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யாமல் அதன் மூலம் வரி வசூலை அதிகரிக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் நோக்கம் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஒன்றிய அரசு பட்ஜெட்டில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான வரி விதிப்பில் புதிய மாற்றத்தை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக, நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நிதியமைச்சக அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு வரி விதிப்பதன் மூலம், வரி வசூலை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஆன்லைன் விளையாட்டில் சம்பாதிக்கும் தொகை ரூ.10,000க்கு கீழ் இருந்தாலும் டிடிஎஸ் பிடித்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கான வரி விதிப்பில், சில குறைபாடுகள் இருக்கின்றன. இதனால், ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டங்களில் சம்பாதிப்பவர்கள் வரி கட்டாமல் ஏமாற்றி விடுகின்றனர். இதைத் தடுக்கவே இந்த புதிய முடிவு எடுக்கப்பட உள்ளது.  இதற்கான அறிவிப்பு  2023-24 நிதியாண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.முதலாவதாக, சில ஆன்லைன் விளையாட்டு, சூதாட்ட நிறுவனங்கள் வரி விதிப்பில் இருந்து தங்கள் வாடிக்கையாளர்கள் தப்பிக்க பரிசுத்தொகையை பல்வேறு தவணையாக பிரித்து வழங்குகின்றன. டிடிஎஸ் பிடித்தம் செய்வதை தடுக்க இந்த உத்தியை மேற்கொள்கின்றன. இதற்கு முடிவு கட்டவே இந்த நிலைப்பாட்டை ஒன்றிய அரசு எடுத்துள்ளது. இரண்டாவதாக, சில ஆன்லைன் நிறுவனங்கள் பணப்பரிசுடன் கூப்பன்களை சேர்த்து வழங்குகின்றன. இதன்மூலம் பரிசுத்தொகை ரூ.10,000க்கு கீழ் இருப்பது போல் பார்த்துக் கொள்கின்றன. ரூ.10,000க்கு மேல் உள்ள பரிசுத்தொகைக்குதான் டிடிஎஸ் பிடித்தம் உண்டு என்பதால் இவ்வாறு செய்கின்றன.புதிய கெடுபிடிகள் மூலம் வரி செலுத்துவதில் இருந்து யாரும் தப்ப முடியாது. ஒன்றிய அரசுக்கு இதன்மூலம் கணிசமான வருவாய் அதிகரிக்கும் என்றனர். தற்போது ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவோர் பெறும் பரிசுத்தொகை ரூ.10,000க்கு கீழ் இருந்தால், வருமான வரிச்சட்டப்படி 30 சதவீதம் வரியை பிடித்தம் செய்ய வேண்டும். வருமான வரிச்சட்டம் 1961ல், பிரிவு 194பி பிரிவின் படி லாட்டரி அல்லது குறுக்கெழுத்து போட்டிகளில் வெல்லும் பரிசுகளுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இதுபோல், ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவோர் பெறும் பணப்பரிசுகளுக்கு வரி விதிக்க, வருமான வரிச்சட்டம் பிரிவு 115பி வகை செய்கிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்கள், பலரது உயிரைக் குடித்து குடும்பங்களை நிராதரவாக்கும் ஆன்லைன் விளையாட்டுகளையே தடை செய்ய வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் திட்டமிட்டிருக்க, வரி விதிப்பிலும் வசூலை அதிகரிப்பதிலுமே ஒன்றிய அரசு கவனம் செலுத்தி வருவது கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. …

The post ஆன்லைன் விளையாட்டுகளில் ரூ.10 ஆயிரம் சம்பாதித்தாலும் வரி: ஒன்றிய அரசு திட்டம்: பட்ஜெட்டில் புது கெடுபிடி வருகிறது appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union government ,DTS ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை