×

பேராசிரியர் நூற்றாண்டு பொது கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

அம்பத்தூர்: சென்னை கொரட்டூரில் நேற்று மாலை பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை மாநகர மேயர் பிரியா, கழக தீர்மானக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் கம்பம் செல்வேந்திரன் பேசுகையில், இந்த திராவிட இயக்கத்துக்கு 110 வயதாகிறது. இதில் இளவயது முதல் வலுப்படுத்தியவர் பேராசிரியர் அன்பழகன். பத்து வயதில் இயக்கத்தில் இணைந்தவர், 84 ஆண்டுகளாக அரசியலில் இருந்தவர். திமுகவுக்கு திசைகாட்டும் கருவியாகத் திகழ்ந்தவர். பேராசிரியர், தனது வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசமின்றி வாழ்ந்தவர் என குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், 43 ஆண்டு காலம் பொது செயலாளர் என்ற அசைக்க முடியாத பொறுப்பு, 80 ஆண்டு காலம் திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட பேராசிரியர் அன்பழகன் வாழ்ந்த மாவட்டம் இது. இனமான பேராசிரியரை பற்றி சொல்ல வேண்டும் என்றால், பெரியாரின் அறம் சார்ந்த சீற்றம், அண்ணாவின் அழகு தமிழ், கலைஞரின் நகைச்சுவை பேச்சு சேர்ந்து அவரிடம் காணப்படும். அவரது புகழை போற்றும் வகையில், பள்ளி கல்வித்துறை அலுவலகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் வளாகம் என தமிழக முதல்வர் பெயர் சூட்டியது நமக்கெல்லாம் பெருமை. 38 ஆயிரம் அரசு பள்ளிகளை மேம்படுத்த, பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7500 கோடி ஒதுக்கப்படும் என கூறி, இந்தாண்டுக்கு ரூ.1400 கோடி ஒதுக்கியவர் நம் தமிழக முதல்வர். உங்களுடன் சேர்ந்து, துறை அமைச்சர் என்ற முறையில் முதல்வருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் என்றார். இதில் அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, டிஎஸ்பி ராஜகோபால் உள்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்….

The post பேராசிரியர் நூற்றாண்டு பொது கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Love ,Ambattur ,Chennai Koratur ,Prof ,K. Anbhajakan ,Centenary Closing Festival General Meeting ,Ambatore ,Dinakaran ,
× RELATED மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு