×

வேப்பூர் பகுதியில் சாலையோரமாக இருந்த பனைமரங்களை வெட்டி கடத்த முயற்சி-பொக்லைன், லாரி பறிமுதல்: மர்ம நபர்களுக்கு வலை

வேப்பூர் : வேப்பூர் பகுதியில் பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பனைமரம் தமிழகத்தின் மாநில மரம் என அங்கீகரிக்கப்பட்டு போற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில் தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும், வளத்தோடும் ஒன்றுபட்டது பனைமரம். நீர்நிலைகளின் காவலன் என அழைக்கப்படும் பனை மரங்களை விறகுக்காகவும், செங்கல் சூளைக்காகவும் வெட்டுவதை தவிர்க்கப்பட வேண்டும். பனை மரங்களை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கடலூர் மவட்டம் வேப்பூர்-சேலம் சாலையோரம் காப்புகாடு பகுதிக்கு எதிரில், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர்நிலை ஓடையின் கரையில் பனைமரங்கள் வளர்ந்துள்ளது.  இந்நிலையில், அப்பகுதியில், நேற்று காலை 9 மணிமுதல் பொக்லைன் இயந்திரம் மூலம் பனை மரங்கள் வெட்டி வாகனங்களில் ஏற்றும் பணி நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வேப்பூர் துணை வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் வேப்பூர் போலீசார் பகல் 2.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்தனர்.  பனை மரங்களை‌ வெட்டி கொண்டிருந்த மர்ம நபர்கள் வருவாய் துறையினர் வருவதை கண்டு தப்பி ஓடினர். தகவலறிந்து திட்டக்குடி டிஎஸ்பி காவ்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.இதில் அனுமதியின்றி 50க்கும் மேற்பட்ட பனைமரங்களை வெட்டி கடத்தி அதனை விற்க முயன்றது தெரியவந்தது. மேலும் பனை மரங்கள் வெட்ட பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், லாரி, மரம் வெட்டும் இயந்திரங்களை பறிமுதல் செய்ய போலீசாருக்கு டிஎஸ்பி காவ்யா உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பனை மரங்கள் வெட்ட பயன்படுத்திய பொக்லைன், லாரி மற்றும் மரம் வெட்டும் கருவிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வருவாய் துறையினர் அளித்த‌ புகாரின் பேரில், வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பனை மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.  அனுமதியில்லாமல் பனை மரங்களை வெட்டி லாரியில் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. …

The post வேப்பூர் பகுதியில் சாலையோரமாக இருந்த பனைமரங்களை வெட்டி கடத்த முயற்சி-பொக்லைன், லாரி பறிமுதல்: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Veypur ,pokline ,Bagline ,Dinakaran ,
× RELATED கடலூர் அருகே மாங்குளம் கிராமத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம்..!!