×

அணைக்கட்டு புலிமேடு மலையடிவார நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்-உள்ளூர், வெளியூர் மக்கள் வருகை

அணைக்கட்டு : அணைக்கட்டு புலிமேடு மலையடிவார நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் வந்து செல்கின்றனர்.வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஊசூர் உள்வட்டத்திற்குட்பட்டது புலிமேடு கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வசதிக்கு ஏற்ப அவர்களுக்கு சொந்தமான நிலங்களிலே வீடுகள் கட்டி தொலைவான பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் புலிமேடு ஊராட்சியில் கொல்லை மேடு பகுதிகள் அதிகமாக உள்ளது. இந்த கிராமம் மலை அடிவாரத்தை ஒட்டியுள்ளது. இந்த அடி வாரத்தில் ஆண்டு தோறும் மழை காலங்களில் ஏற்படும் நீழ்வீழ்ச்சியை காண மக்கள் அதிகளவில் வருகின்றனர். பீஞ்சமந்தை, அல்லேரி, அப்புக்கல், வாழப்பந்தல் மலை என சுற்றியுள்ள மலைகளில் தேங்கும் மழைநீர் மலைமேல் உள்ள பாறைகளின் இடுக்குகள் வழியாக நீருற்று ஏற்பட்டு புலிமேடு மலைஅடிவாரம் வழியாக வந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழையால் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை தண்ணீர் வந்தது. அதைதொடர்ந்து வெயில் காலங்களில் தண்ணீரின்றி வறண்டது. இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழையால் நீர் வீழ்ச்சியில் மீண்டும் தண்ணீர் வர ஆரம்பித்தது. இதில் சமீபத்தில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் மழையால் மலைகளில் நீர் பெருக்குகெடுத்து ஓடி புலிமேடு நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.நீர் வீழ்ச்சியில் தண்ணீர் மீண்டும் அதிக அளவில் வருவதை  அறிந்த கிராம மக்கள் அங்கு திரண்டு பார்வையிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதில் இறங்கி ஆனந்த குளியல் போட்டும் மகிழ்ந்து வருகின்றனர். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் அதிகளவில் வருகின்றனர். இதில் நேற்று வார விடுமுறை நாள் என்பதால் புலிமேடு, ஊசூர், அணைக்கட்டு மட்டுமின்றி வேலூர், திருவலம், காட்பாடி, கணியம்பாடி பொய்கை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்துடன் இருசக்கர வாகனம், கார்களில் வந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீர் வீழ்ச்சியின் அழகை ரசித்தும், அதில் இறங்கி ஆனந்த குளியல் போட்டும் மகிழ்ந்தனர்.ஊராட்சி தலைவர் விஜயலட்சுமிமுரளிதரன் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் எப்போது மழை பெய்தாலும் இந்த நீர் வீழ்ச்சியில் தண்ணீர் செல்கிறது. இது 3 அல்லது 5 மாதங்கள் வரை செல்வதால் உள்ளூரை சேர்ந்த மக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். எனவே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து நீர்வீழ்ச்சிக்கு செல்ல தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மலைகள் வழியாக வரும் இந்த தண்ணீர் அடிவாரத்தில் ஏற்பட்டுள்ள நீர்வீழ்ச்சி மூலம் பெருக்கெடுத்து ஓடி கால்வாய்கள் வழியாக ரெண்டேரிகோடி ஏரிக்கு சென்று ஏரிகள் நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது….

The post அணைக்கட்டு புலிமேடு மலையடிவார நீர் வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்-உள்ளூர், வெளியூர் மக்கள் வருகை appeared first on Dinakaran.

Tags : Pulimedu ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…