×

அடிக்கும் கோல்கள் பாட்டிக்கு டெடிகேட்: சோதனைகளை கடந்து சாதித்த ஜாம்பவான்

லயோனல் மெஸ்சி 1987ம் ஆண்டு அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் பிறந்தவர். 18 ஆண்டுகளாக களத்தில் மெஸ்சி செய்யும் மாயாஜாலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது அவரின் பாட்டி செலியா தான். ஒருமுறை மெஸ்சியின் சகோதரர்கள், அவர்களின் நண்பர்களுடன் கால்பந்து விளையாடியதை மெஸ்சி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். மெஸ்சி தோற்றத்தில் குள்ளமாகவும், மற்றவர்களை விட சிறுவனாகவும் இருந்ததால், அவர் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் மெஸ்சியை சேர்த்து கொள்ளுங்கள் என்று அவரது பாட்டி தான் அறிவுறுத்தினார். அதன்பின்னர் மெஸ்சியின் ஆட்டத்தை பார்த்து அசந்துபோன அவரது பாட்டி, குடும்பத்தினருடன் சண்டைபோட்டு மெஸ்சிக்கு ஷூ வாங்கி கொடுத்தார். ஒருமுறை மெஸ்சி சகோதரரின் ஆட்டத்தை பார்க்க சென்ற போது, ஆட்டத்தில் பங்கேற்க வேண்டிய ஒரு சிறுவன் வரவில்லை. இதனையறிந்து பாட்டி செலியா, மெஸ்சியை சேர்த்துக் கொள்ளுமாறு பயிற்சியாளரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் மெஸ்சி உருவத்தை பார்த்து பயிற்சியாளர் சேர்த்துக் கொள்ள மறுப்பு தெரிவித்தார். ஆனால் பாட்டியின் தொடர் வேண்டுகோளால், மெஸ்சியை அணியில் சேர்த்தார். அந்த போட்டியில் மெஸ்சியின் காலுக்கு பந்து வந்த போது, எதிரணி சிறுவர்களை கடந்து அசால்டாக மெஸ்சி கோல் அடித்ததை பார்த்து பயிற்சியாளர் மிரண்டுபோனார். எந்த உருவத்தை பார்த்து அணியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று பயிற்சியாளர் கூறினாரோ, இப்போது அதே மெஸ்சியை பார்த்து மற்ற வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாராட்டினார். இதனிடையே மெஸ்சிக்கு 8 வயது இருந்தபோது, நெவல்ஸ் ஓல்ட் பாய்ஸ் என்ற கிளப்பில் இணைந்து, ஒவ்வொரு போட்டியிலும் ஏராளமான கோல்கள் அடித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார். தொடர்ந்து அவரின் புகழ் வேகமாக பரவியது. ஆனால் மெஸ்சியின் வளர்ச்சிக்கு தடைபோடும் வகையில் பெரும் சோதனை வந்தது. ஹார்மோன் குறைபாட்டால், அவர் வளர்வது கடினம் என்றும், அதனை சரிசெய்ய அதிக பணம் செலவாகும் என்றும் மருத்துவர்கள் கூறினர். அப்போது மெஸ்சியின் மருத்துவ செலவை யாரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. ஆனால், மெஸ்சியின் திறமையை அறிந்து, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா கால்பந்து கிளப், அவரது மருத்துவ செலவ ஏற்க முன்வந்தது. இதன் மூலம் 2000ம் ஆண்டில் மெஸ்சி பார்சிலோனா சென்று, அங்கு லா மாஸியா எனப்படும் பார்சிலோனா ஜூனியர் டிவிஷன் அணியில் இணைந்தார். 2004-05 சீசனின் போது, எஸ்பான்யோல் அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனாவுக்காக அறிமுகமானார். பின்னர் அடுத்தடுத்து எண்ணில் அடங்காத கோல்களை அடித்து சாதனைகளை படைத்தார். மெஸ்சியின் மேஜிக், காண்போரை மெய்மறக்க செய்தது. அதேபோல் ஒவ்வொரு முறையும் மெஸ்சி கோல் அடிக்கும் போது, இரு கைகளையும் வானத்தை நோக்கி குறிப்பிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார். அதற்கு காரணம், மெஸ்சியின் பாட்டி செலியா தான். தனது வாழ்நாளில் அடிக்கும் ஒவ்வொரு கோலையும் அவரது பாட்டிக்காகவே டெடிகேட் செய்து வருகிறார் மெஸ்சி….

The post அடிக்கும் கோல்கள் பாட்டிக்கு டெடிகேட்: சோதனைகளை கடந்து சாதித்த ஜாம்பவான் appeared first on Dinakaran.

Tags : Lionel Messi ,Rosario, Argentina ,Pillaiyar Suzhi ,Messi ,
× RELATED 8வது முறையாக மெஸ்ஸிக்கு பலான் டி ஆர் விருது