×

அழையா விருந்தாளியாக நிர்வாகிகள் வீட்டுக்கு செல்லும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கதர் கட்சியில போஸ்டர், போராட்டம்னு எதிர் குரல் வலுக்குதாமே… என்னா விஷயம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘குயின்பேட்டை மாவட்டத்துல கதர் கட்சி சார்புல உட்கட்சி தேர்தல் நடத்த, சில தினங்களுக்கு முன்னாடி பொறுப்பாளர்களை அறிவிச்சாங்க. அப்போது, தேர்தல் நடத்துற பொறுப்பாளர்கள் மூலமாக, வேட்பு மனுதாக்கல் செஞ்ச நிர்வாகிகள்கிட்ட நேர்காணல் நடந்துனாங்க. இதுல சில கட்சி நிர்வாகிங்க, பெயர்களை கூறி, இவங்களத்தான் நியமனம் செய்யணும்னு டிஸ்ட்ரிக் பிரெசிடெண்ட் பரிந்துரை செஞ்சதாக பேசிக்கிறாங்க. இந்த பட்டியலை மேலிடத்துக்கும் அனுப்பியிருக்காங்களாம். இந்நிலையில், பிரெசிடெண்ட், கொடுத்த பெயர் பட்டியல்ல உள்ளவங்கள மட்டும் பொறுப்பாளர்களாக அறிவிச்சிட்டாங்களாம். இதனால சக நிர்வாகிங்க. பிரசிடெண்ட் தன்னிச்சையாக செயல்படுறாரு. கட்சிக்கு துரோகம் செஞ்சவங்களுக்கு பொறுப்பு கொடுத்திருக்காங்கன்னு, போஸ்டர், போராட்டம்னு எதிர்ப்புகள தெரிவிச்சு வர்றாங்களாம். இதனால குயின்பேட்டை மாவட்ட கதர் கட்சியில, சலசலப்பு எழுந்திருக்குது. இனி வரும் காலங்கள்ல, கட்சியில் உண்மையாக உழைக்கும் நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கணும்னு கதர் கட்சி தொண்டருங்க மத்தியில இருந்து கோரிக்கை குரல் ஒலிக்குது’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அழையா விருந்தாளியாக நிர்வாகிகள் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறாராமே மாஜி அமைச்சர்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சியின் முன்னாள் அமைச்சர் தற்போது சேலத்துக்காரர் அணியில் இருந்து வருகிறார். சேலத்துக்காரர் மற்றும் தேனிக்காரர் ஆகியோர் தனித்தனியாக பிரிந்த பிறகு, மனுநீதி சோழன்   மாவட்டத்தில் தனது செல்வாக்கையும், ஏற்கனவே இருக்கும் நிர்வாகிகளை தக்க வைக்கவும் படாதபாடு பட்டு வருகிறாராம். இலை கட்சி ஆட்சியில் இருக்கும் போது, நிர்வாகிகள் வீட்டு விசேஷங்களுக்கு அழைப்பிதழ் வைத்தாலும், மாஜி அமைச்சர் கண்டு கொள்வது கிடையாதாம். தற்போது, நிலைமை தலைகீழாக உள்ளதாம். அழைப்பிதழ் வைக்காத வீட்டிற்கும்,‘ மாஜி அமைச்சர் திடீர் ‘விசிட்’  அடித்து  நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறராம். இது நிர்வாகிகள் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். நிர்வாகிகள் வேறு அணிக்கு சென்று விடக்கூடாது என்பதில் மாஜி அமைச்சர் கண்ணும் கருத்துமாக இருந்து  வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘மணல் கடத்தலில் சிக்கிய தனிப்பிரிவு ஏட்டு சின்னாபின்னமாயிட்டாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘புரம் என்று முடியும் மாவட்ட தலைநகரில் மணல் கடத்தல் விவகாரத்தில் கையும் களவுமாக சிக்கிய தனிப்பிரிவு ஏட்டுவை எஸ்பி லெப்ட், ரைட் வாங்கி இருக்கிறாராம். இக்காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆறுகளுக்கு  பஞ்சமில்லை. இந்த நிலையில் கோயில் கட்டுவதற்காக அதிகாரிகள் அனுமதியுடன் ஊர்மக்கள் மணல் அள்ளியிருக்கிறார்கள். காவல் நிலைய இன்சு சபரிமலைக்கு சென்றிருப்பதை, தனக்கு சாதகமாக பயன்படுத்திய, பெயரிலேயே கலையை வைத்திருக்கும் தனிப்பிரிவு ஏட்டு மணல் அள்ளிய மக்களிடம் பல லகரத்தை கரந்திருக்கிறாராம். தனிப்பிரிவு இன்சுக்கும் பங்குகொடுக்கணும்னு, அவருக்கும் தனியாகவும் கேட்டு வாங்கியிருக்காராம். இதில் நேரடியாக கை நீட்டினால் சிக்கிக் கொள்வோம் என்று, டிரைவரை எடுபிடியாக அனுப்பி கறந்துள்ளாராம். இந்த விவகாரம் எஸ்பிக்கு தெரிய வர சம்பந்தப்பட்ட தனிப்பிரிவு ஏட்டுவை அழைத்து லெப்ட், ரைட் வாங்கியிருக்கிறாராம். இதனால் மிரண்டு போன தனிப்பிரிவு ஏட்டு வாங்கிய லகரத்தை ஒரு நோட்டு குறையாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுத்திட்டாராம். இக்காவல் நிலையத்திற்குட்பட்ட இல்லீகல் விவகாரத்தை தனிப்பிரிவு ஏட்டு தனியாக கவனித்து, இன்சு-வையும்  கவனித்து வருவதால் அசைக்க முடியாத நட்சத்திரமாக இருந்து வந்தாராம். தற்போது  நேரடியாக எஸ்பியிடம் கையும் களவுமாக சிக்கி இன்சுக்கும் சிக்கலை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். கரன்சியை வாங்கி கொடுத்த டிரைவரை  மட்டும் இடம் மாத்திட்டாங்க, வாங்க சொன்ன ஏட்டு, இன்சு மீது இதுவரை நடவடிக்கையில்லையாம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘சின்னமம்மி இன்னொரு முகத்தை காட்டுவார்னு உதார் விடுறாங்களாமே அடிப்பொடிகள்..’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘இலைக்கட்சியின் தலைமை பொறுப்பை பிடிக்க 4 பேரு களத்தில் இருக்காங்க. இதுல நானும் சந்தைக்கு போறேன்னு 67 வயசுல சின்னமம்மியும் ஒற்றுமை என்கிற பேனரை தூக்கிப்பிடிச்சிக்கிட்டு, லட்டர்பேடுல பொதுச்செயலாளர் என்று எழுதிக்கிட்டு தினந்தோறும் டுமீல் அறிக்கை விட்டுக்கிட்டு இருக்காங்களாம். சொத்துக்குவிப்பு வழக்குல 4 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிச்சுக்கிட்டு வந்து, எல்லோரும் தன்னிடம் வருவாங்கன்னு நினைச்சாங்களாம். ஆனா யாருமே கண்டுக்கிடலையாம். எப்படியாவது கட்சிக்குள்ளே போயிடணுமுன்னு எடுத்து வரும் முயற்சிக்கு சேலத்துக்காரர் முட்டுக்கட்டையா இருக்காராம். சின்னமம்மியை உள்ளே விடவே மாட்டோமுன்னு ஸ்ட்ராங்கா இருக்காராம். ஆனா பிப்ரவரி 24ம்தேதி எல்லோரும் ஒண்ணாயிடுவோமுன்னு மாங்கனி மாவட்டத்திலுள்ள சின்னமம்மியின் அடிப்பொடிகள் உறுதியாக சொல்லிக்கிட்டு இருக்காங்களாம். வரும் நாடாளுமன்ற தேர்தல், தாமரை கட்சிக்கு முக்கியமான தேர்தலாம். அவர்களின் முழுப்பார்வையும் தமிழ்நாட்டின் மேலதான் இருக்காம். இதனால பிரிஞ்சுக்கிடக்குற 4 பேரையும் ஒண்ணா இணைச்சு எம்பி சீட்டை பிடிச்சே ஆகணும் என்பது பெரிய பிளானாம். இப்படி ஒண்ணா இணைக்கும்போது, இலைக்கட்சியின் பொறுப்புக்கு சிறைப்பறவையான சின்னமம்மி வந்திருவாங்க. அதுக்குப்பிறகுதான் சின்னமம்மியின் இன்னொரு முகம் தெரியும். ஏற்கனவே அந்த முகத்தை தெரிஞ்சுக்கிட்ட சேலத்துக்காரருதான், இணைப்புக்கு முட்டுக்கட்டையா இருக்காரு என்பது அடிப்பொடிகள் கொடுக்கும் டுவிஸ்டு..’’ என்றார் விக்கியானந்தா….

The post அழையா விருந்தாளியாக நிர்வாகிகள் வீட்டுக்கு செல்லும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Khadar Party ,Uncle ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...