×

பத்துகாணி பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை: வனத்துறை விசாரணை

அருமனை: பத்துகாணி பகுதியில் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானைகளில் ஒன்று திடீரென்று இறந்து கிடந்தது. இது தொடர்பாக குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் உள்ள காட்டு யானைகள் அவ்வப்போது பொதுமக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கு வந்து வாழை, தென்னை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி அழிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் அந்த பகுதியில் வசிக்கின்ற மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. சபரிமலை சீசன் வேளைகளில் காட்டு யானைகள் இடம்பெயர்ந்து குமரி மாவட்ட காட்டு பகுதிக்கு வருகிறது. அந்த வகையில் தற்போது சபரிமலை சீசன் காலம் என்பதால் அந்த பகுதியில் முகாமிட்டிருக்கும் யானைகள் இரைதேடி தமிழக காட்டுப்பகுதியில் குறிப்பாக குமரி மாவட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.இந்தநிலையில் பத்துகாணி தபால் நிலையம் அருகில் கடந்த  7ம் தேதி இரவு காட்டு யானைகள் கூட்டமாக வந்ததை பார்த்த மக்கள் அலறி அடித்து ஓடினர். இரண்டு பெரிய காட்டு யானைகள்  தென்னை மரத்தை காலால் மிதித்து ஓலைகளை சுவைத்து சென்றது. இதனால் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு தங்கள் உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் இரவில் காட்டுயானைகள் வலம் வந்தவண்ணம் இருந்தது. இந்தநிலையில் பத்துகாணி அருகே கற்றுவா, கூனாம் வேங்கை பகுதியில்  உள்ள தனியார் நிலத்தில் நேற்று முன்தினம் இரவு 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் தடுக்கி விழுந்து இறந்திருக்கிறது. அதிகாலை ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் , யானை ஒன்று அயனி மரத்தில் சாய்ந்தவாறு கால்கள் சறுக்கிய அடையாளத்துடன் இறந்து கிடந்ததை கண்டனர். இது தொடர்பாக ஆனந்த் என்பவர்  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். மருதம்பாறை பிரிவு களியல் வனசரக அலுவலர் முகைதீன், வனவர் கணேஷ் மகாராஜன், வனக்காப்பாளர் பொறுப்பு சக்திவேல், வேட்டை தடுப்பு காவலர்கள் பரப்பன், கணபதி, சங்கர், ஷாஜி உள்ளிட்டோர் சம்பவ பகுதிக்கு  சென்றனர். பின்னர் யானையை வனத்துறையினர் உடற்கூறாய்வு செய்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதற்காக திருநெல்வேலியில் இருந்து மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அந்த பகுதியில் வனத்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் யானை சுமார் 50 மீட்டர் தூரம் தள்ளாடி தள்ளாடி வந்து இந்த இடத்தில் சரிந்து விழுந்து இறந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. யானைகள் கூட்டமாக வந்ததில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட நிலையில் உயிரிழப்பு நிகழ்ந்ததா? அந்த பகுதியில் சிறிய நீர்வீழ்ச்சி ஒன்று உள்ள நிலையில் தண்ணீர் குடிப்பதற்காக வந்தபோது கால் சறுக்கி விழுந்து இறந்ததா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. யானையின் உடலில் வெளிப்படையாக காயங்கள் இல்லை. இருப்பினும் உடற்கூறாய்வு நடந்து முடிந்த பின்னரே இது தொடர்பான கூடுதல் தகவல் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்….

The post பத்துகாணி பகுதியில் இறந்து கிடந்த காட்டு யானை: வனத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Battaganya ,FANTAKASA ,Atakasam ,Battagani ,Kumari ,Battakanyi ,Dinakaran ,
× RELATED மாந்தோப்பில் 5 யானைகள் அட்டகாசம் பேரணாம்பட்டு அருகே