×

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட இலவச அரிசி: மாடுகள், பறவைகளுக்கு உணவான அவலம்

புதுச்சேரி: புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டிய இலவச அரிசி மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாடுகள், பறவைகளுக்கு உணவான அவலம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த இலவச அரிசி திட்டத்தின்கீழ் அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படுகிறது. மாறாக மத்திய அரசின் அந்தயோதயா அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் உணவு தானியங்கள் நாடு முழுக்க விநியோகிக்கப்படுகின்றன. கொரோனா காரணமாக வறுமைக் கோட்டிற்கு கீழ்உள்ள மக்களுக்கு அரிசி, கொண்டை கடலை புதுவையில் வழங்கப்பட்டு வருகிறது.இதற்கான அரிசியானது தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள மாநில கூட்டுறவு நுகர்வோர் இணையத்தின் குடோனிலிருந்து பள்ளிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு மக்களுக்கு புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டன. 100 டன் கொள்ளளவு கொண்ட கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அரிசி மற்றும் கொண்டை கடலை ஆகியவை ரேசன் கடைகள் மூடப்பட்டதால் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வழங்கப்பட்டன. டிசம்பர் மாதம் வரையிலான அரிசி, கொண்டை கடலை பயனாளிகளுக்கு விநியோகிக்கும் பணி நடைபெற்றது. இதனிடையே புதுவையில் ஜனவரி 4ம்தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்கு திரும்பியதால் இடநெருக்கடி காரணமாக அங்கு மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இலவச அரிசியை சம்பந்தப்பட்ட ஊழியர்கள், குடோனுக்கு திருப்பி அனுப்பினர். இவ்வாறு அரிசியும், கொண்டை கடலையும் அவசர கோலத்தில் கொட்டும் மழையில் வண்டிகளில் இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக 100க்கும் மேற்பட்ட அரிசி முட்டைகளின் தரம் குறைந்து குடோனுக்கு வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே குடோனில் இடமில்லாத நிலையில், பள்ளிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட அரிசி வீணாகிவிட்டதாக கருதிய, சிவில் சப்ளை பணியாளர்கள் நல்ல நிலையில் உள்ள அரிசியை பாதுகாக்கும் வகையில் அவற்றை வெளியில் வைத்ததாக கூறப்படுகிறது. எலிகள் இந்த அரிசி மூட்டைகளின் சாக்கு பைகளை கிழித்து வேட்டையாடிய நிலையிலும், அரிசி முட்டைகள் சரிந்த நிலையில் கிடந்துள்ளன. இந்த நிலையில் நேற்று புதுவையில் வெளுத்து வாங்கிய கனமழையால் குடோனுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அரிசிகள் அனைத்தும் தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை சாலையில் அரை கிமீ தூரத்துக்கு மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதைப் பார்த்த பொதுமக்கள், மற்ற அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சிவில் சப்ளைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இன்று அங்கு வந்த சிவில் சப்ளை ஊழியர்கள், அந்த அரிசி மூட்டைகளை மாற்று சாக்கு பைகளில் மாற்றி லாரிகள் மூலம் வாணரப்பேட்டையில் உள்ள மத்திய உணவு கிடங்கிற்கு அவசரம் அவசரமாக இடமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அங்கிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் இந்த அரிசியை எப்படி மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விநியோகிக்க முடியும்? என்ற கேள்வியை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சரமாரி எழுப்பினர். இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க்குடன், சிவில் சப்ளை துறை அதிகாரிகள் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. அதன்பிறகு இவ்விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இருப்பினும் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, கொண்டை கடலை உள்ளிட்ட உணவு பொருட்களை முறையாக பாதுகாத்து விநியோகிக்க சிவில் சப்ளை பணியாளர்களும், குடோன் பராமரிப்பாளர்களும் தவறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாலைகளிலும், வாய்க்காலிலும் அரிசி வழிந்தோடும் அளவுக்கு அலட்சியமாக செயல்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 40 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தங்களது உயிரை பணயம் வைத்து போராடி வரும் நிலையில், மக்களுக்கான இலவச அரிசியை பாதுகாக்கும் விஷயத்தில் இவ்வளவு தவறு நடந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மாடுகளுக்கு, பறவைகளுக்கும் உணவான அரிசியை பாதுகாக்க தவறிய விவகாரத்தில் கவர்னரும், முதல்வரும் அதிரடி நடவடிக்கை எடுப்பார்களா?….

The post தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட இலவச அரிசி: மாடுகள், பறவைகளுக்கு உணவான அவலம் appeared first on Dinakaran.

Tags : Thattanjavadi Industrial Estate ,Puducherry ,Thattanjavadi ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை