×

கோவை- மஞ்சூர் சாலையில் வாகனங்களை வழி மறித்த காட்டு யானை கூட்டம்: பயணிகள் அச்சம்

மஞ்சூர்: மஞ்சூர்-கோவை சாலையில் சென்ற அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்களை காட்டு யானைகள் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர்மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், சமீபகாலமாக இரண்டு குட்டிகளுடன் 3 பெரிய காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகிறது. பெரும்பாலும், சாலைகளிலேயே யானைகள் நடமாடுவதால் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் யானைகளின் வழிமறிப்பில் சிக்கி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மஞ்சூரில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் அரசு பஸ் கோவைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கெத்தை அருகே குட்டிகளுடன் சாலையை மறித்தபடி யானைகள் நின்று கொண்டிருந்தது. இதை கண்ட டிரைவர் உடனடியாக  பஸ்சை சாலையோரமாக ஒதுக்கி நிறுத்தினார். மேலும், கோவையில் இருந்து மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல இரண்டு கார்களில் சென்ற பயணிகளும் காட்டு யானைகளை கண்டு பீதி அடைந்ததுடன் தங்களது வாகனங்களை சற்று தொலைவாக நிறுத்தினார்கள். சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையோரத்தில் இருந்த செடி, கொடிகளை பிடுங்கி மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் குட்டிகள் இரண்டும் மெதுவாக நகர்ந்தது. இதைத்தொடர்ந்து யானைகள் குட்டிகளை பின்தொடர்ந்து சாலையோரம் இருந்த மண் பாதை வழியாக காட்டுக்குள் இறங்கி சென்றது. அதன்பிறகே, அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. மஞ்சூர் கோவை சாலையில் மீண்டும் காட்டு யானைகள் நடமாட்டம் துவங்கி உள்ளதால் இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். …

The post கோவை- மஞ்சூர் சாலையில் வாகனங்களை வழி மறித்த காட்டு யானை கூட்டம்: பயணிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore-Manjoor road ,Manjoor ,Manjoor-Coimbatore road ,Dinakaran ,
× RELATED மேல்குந்தா பகுதியில் சிறுத்தை நடமாட்டம்