×

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: டொமினிக் தீம்-ஹாரிஸ் இன்று மோதல்

துபாய்: துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம், தென்னாப்பிரிக்க இளம் வீரர் லாயிட் ஹாரிசுடன் மோதுகிறார். ஆஸ்திரியாவில் நட்சத்திர டென்னிஸ் வீரர் டொமினிக் தீம் கடந்த ஆண்டு யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாமில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பல்கேரிய வீரர் டிமிட்ரோவிடம் தோல்வியடைந்து வெளியேறினார். அதன் பின்னர் இன்று வரை டொமினிக் தீமுக்கு இறங்குமுகம் என்றே கூற வேண்டும். கடந்த வாரம் கத்தாரில் நடந்த கத்தார் ஓபன் ஏடிபி போட்டியில் காலிறுதியில் ஸ்பெயின் வீரர் படிஸ்டா அகட்டிடம் தோல்வியடைந்தார். அதற்கு முன்னதாக பிப்ரவரியில் நடந்த ஏடிபி கோப்பை போட்டியில் பங்கேற்ற டொமினிக் தீம், பிரான்சின் பெனாய்ட் பேரிடம் குரூப் சுற்றில் முதல் செட்டை 6-1 என இழந்து, காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.இந்நிலையில் துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் அவர், தென்னாப்பிரிக்க இளம் வீரர் லாயிட் ஹாரிசுடன் மோதுகிறார். இந்திய நேரப்படி இப்போட்டி இரவு 9.50 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டிக்கான பயிற்சியில் நேற்று தீவிரமாக ஈடுபட்டிருந்த டொமினிக் தீம், அதன் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது: இந்த ஆண்டு என்னுடைய டென்னிஸ் வாழ்க்கை சிறப்பான துவக்கத்தை கொண்டிருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் ஆண்டு முடிய இன்னும் 9 மாதங்கள் இருக்கின்றன. காயம் காரணமாக இந்த ஆண்டு இதுவரை நான் சிறப்பாக ஆடவில்லை. இப்போது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டேன்.கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன் உட்பட அனைத்து போட்டிகளிலும் நன்கு ஆடினேன். ஏடிபி வேர்ல்ட் டூர் போட்டியில் அரையிறுதியில் ஜோகோவிச்சை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினேன். இறுதிப்போட்டியில் மெட்வடேவிடம் தோல்வியடைந்தேன். இந்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. மெட்வடேவ் ஏடிபி தரவரிசையில் நடாலை பின்னுக்கு தள்ளி 2ம் இடத்தை பிடித்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள். ஆனால் பிரெஞ்ச் ஓபனில் நிச்சயம் நடால் மீண்டு எழுவார். மீண்டும் அவர் 2ம் இடத்திற்கு வருவார். மெட்வடேவை பொறுத்தவரை அவர் பயணம் செய்ய வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. நடால், ஜோகோவிச் ஒருபுறம், மற்றொரு புறம் நான், சிட்சிபாஸ். ஸ்வரெவ் போன்ற வீரர்களும் அவருக்கு போட்டியாக உருவெடுப்போம். ஆரோக்கியமான போட்டிதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: டொமினிக் தீம்-ஹாரிஸ் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Dubai Tennis Championship ,Dominic Thiem ,Harris ,Dubai ,Lloyd Harris ,Dinakaran ,
× RELATED அயர்லாந்து பிரதமராகிறார் சைமன் ஹாரிஸ்