×

அரசு டாக்டரின் போலி கையெழுத்தை பயன்படுத்தி 500 பேரை ஏமாற்றிய பலே கில்லாடி பெண் கைது

சென்னை: குரோம்பேட்டையில் அரசு டாக்டரின் போலி கையெழுத்து மற்றும் முத்திரையை பயன்படுத்தி 500க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றிய கில்லாடி பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் முதன்மை குடிமை மருத்துவ அதிகாரியாக பணிபுரிபவர் டாக்டர் காமேஷ் பாலாஜி (49). பச்சை நிற மையால் கையெழுத்து போடும் அரசிதழ் அதிகாரி (கெஜட்டட் அதிகாரி) அந்தஸ்தில் உள்ள இவரை பார்ப்பதற்கு வந்த நபர் ஒருவர், தான் வைத்திருந்த ஆதார் விண்ணப்ப படிவ சான்றிதழை காண்பித்து போடப்பட்டிருந்த கையெழுத்து உங்களது கையெழுத்து தானா என்று கேட்டுள்ளார். அந்த கையெழுத்தும் அலுவலக சீலும் போலி என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அந்த நபரிடம் அவர் விசாரித்தபோது, அவர் இந்த போலி கையெழுத்தையும், சீலையும் பயன்படுத்தும் நபர் பற்றிய தகவலை தெரிவித்துள்ளார். உடனே டாக்டர் காமேஷ் பாலாஜி சம்பவம் குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், போலீசார் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள இ-சேவை மையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இ-சேவை மையத்தை மேற்கு தாம்பரம் ஜெருசலேம் நகர் பகுதியை சேர்ந்த சசிகலா (34) என்ற பெண் நடத்தி வந்தது தெரியவந்தது. டாக்டர் காமேஷ் பாலாஜியின் பெயரை போலியாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் பறித்தது கண்டுபிடிக்கப்பட்டது. குரோம்பேட்டையில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் ஆதார் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்ததாகவும், அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து இ-சேவை மையத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியதாகவும் கூறியுள்ளார். தன்னிடம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட பணிகளுக்காக விண்ணப்பிக்க வரும் பலருக்கு கெஜட்டட் அதிகாரி கையெழுத்து தேவைப்படுவதாகவும், அதனை போலியாக தயாரித்து பண வசூலில் ஈடுபடலாம் என்று அப்போதுதான் தனக்கு தோன்றியதாகவும் மோசடி பெண் சசிகலா தெரிவித்தார். இதையடுத்து திருநீர்மலை பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் மூலமாக டாக்டர் காமேஷ் பாலாஜியின் கையெழுத்து மற்றும் சீலை போலியாக தயாரித்து பயன்படுத்தி வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சசிகலாவை கைது செய்தனர். இந்த சீலை பயன்படுத்தி சுமார் 500 பேரிடம் சசிகலா மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. கையெழுத்துக்கு ஒவ்வொருவரிடமும் தலா ரூ.300 முதல் 1500 ரூபாய் வரை வசூல் செய்துள்ளார். பல அரசு முத்திரைகளை போலியாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். விசாரணைக்கு பின்னர் சசிகலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவரை காவலில் எடுத்து எவ்வளவு பேரிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.* அதிமுக பிரமுகரா?அரசு டாக்டரின் போலி கையெழுத்து, முத்திரை பயன்படுத்தி தாம்பரம் போலீசாரால் கைது செய்யப்பட்ட பெண் சசிகலா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுப்பது போல் படம் எடுத்து வைத்துள்ளார். எனவே மோசடி பெண் சசிகலா அதிமுக பிரமுகராக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இவர் கடந்த ஆட்சியில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோல இன்னும் பல மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே, போலீசார் இவரை காவலில் எடுத்து விசாரித்தால், மேலும் பல உண்மைகள் தெரியவரும் என தெரிகிறது….

The post அரசு டாக்டரின் போலி கையெழுத்தை பயன்படுத்தி 500 பேரை ஏமாற்றிய பலே கில்லாடி பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Bale Killadi ,CHENNAI ,Crompettai ,
× RELATED 50 கிலோ மூட்டையில் 3 கிலோ முதல் 5 கிலோ வரை...