×

பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கிய ரூ.1.21 கோடி கடனுக்கு பாஜ பெண் நிர்வாகி மதுவந்தியின் வீடு ஏலம்: ரூ.30 லட்சம் மதிப்பு பொருட்களை மீட்டு தரக்கோரி போலீசில் புகார்

சென்னை: தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கிய ரூ.1.21 கோடி கடனை கட்ட தவறியதால் பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் மதுவந்தியின் வீடு ஏலம் விடப்பட்டது. மேலும், வீட்டில் உள்ள 30 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டு தர கோரி மதுவந்தி சார்பில் போலீசில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தி.நகர் நியூ கிரி சாலையில் உள்ள ஜெயின் வின்டர் கோர்ட் பகுதியை சேர்ந்தவர் மதுவந்தி (45). பிரபல சினிமா நடிகரான ஒய்.ஜி.மகேந்திரன் மகள் ஆவார். மதுவந்தி தற்போது பாஜ மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர், கடந்த 2016ம் ஆண்டு ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்று வாங்கினார். இதற்காக அவர் இந்துஜா லைலேண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கி இருந்தார். அந்த கடனை மதுவந்தி சரியாக கட்டவில்லை. இதனால், பைனான்ஸ் நிறுவனம் சார்பில் பலமுறை மதுவந்திக்கு மாத தவணையை கட்ட கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் பணத்தை கட்டாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது கடன் பாக்கி  1 கோடியே 21 லட்சத்து 30,867 ரூபாயாக இருந்தது. இதையடுத்து பைனான்ஸ் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பணத்தை கட்ட தவறிய மதுவந்தியின் வீட்டை சீல் வைக்க உத்தரவிட்டது. அதன்படி தேனாம்பேட்டை உதவி கமிஷனர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் கடன் வாங்கிய மதுவந்தி முன்னிலையில் வீட்டுக்கு சீல் வைத்தனர். பிறகு சீல் வைக்கப்பட்ட வீட்டின் சாவியை போலீசார் பைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளர் உமாசங்கரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே சீல் வைக்கப்பட்ட வீட்டில் உள்ள பொருட்களை மதுவந்தி ஒரு மாதத்திற்குள் எடுக்க நோட்டீஸ் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், சீல் வைக்கப்பட்ட வீட்டை சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனம் வேறு ஒருவருக்கு ஏலம் மூலம் விற்பனை செய்துள்ளனர். விற்பனை செய்யப்பட்ட வீட்டில் இருந்த பொருட்களை பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் கடந்த 14ம் தேதி வீட்டின் முன்பு உள்ள யார்டில் வைத்து விட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்த மதுவந்தி, கடன் வாங்கியது  தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதேநேரம் தான் ஊரில் இல்லாததை அறிந்து பைனான்ஸ் நிறுவன மண்டல மேலாளர் உமா சங்கர், கார்த்திகேயன் மற்றும் 10 பேர் வீட்டிற்குள் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்து சென்று விட்டதாகவும், எனவே அவர்களிடம் இருந்து அந்த பொருட்களை மீட்டு தர வேண்டும் என்றும் தனது வழக்கறிஞர் மூலம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post பைனான்ஸ் நிறுவனத்தில் வாங்கிய ரூ.1.21 கோடி கடனுக்கு பாஜ பெண் நிர்வாகி மதுவந்தியின் வீடு ஏலம்: ரூ.30 லட்சம் மதிப்பு பொருட்களை மீட்டு தரக்கோரி போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Baja ,Maduvanthi ,Dakkori ,Chennai ,Maduvanti ,Valuvanthi ,Company ,Dakkori Police ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...