×

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை சாதனை ஒரே நாளில் 97 அறுவை சிகிச்சை: செயல்பாடுகளில் முதலிடம் டீன் தேரணி ராஜன் தகவல்

சென்னை: ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை விளங்குகிறது. இங்கு, தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலத்ததை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெறுகிறார்கள். கடந்த 6 மாதத்தில் மிகச்சிறந்த செயல்பாட்டிற்கான தகுதி பட்டியலில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதலிடம் பெற்றது. அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான செயல்பாடுகள் தொடர்பாக கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மருத்துவக் கல்வி இயக்ககம் ஆய்வு செய்தது. அதில், ஒவ்வொரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மேற்கொள்ளும் சிகிச்சைகள், பரிசோதனைகள், பிரசவம், ஆபரேஷன் போன்றவை குறித்து ஆய்வு செய்ததில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடத்தில் சேலம் அரசு மருத்துவமனையும், 3வது இடத்தில் கோவை அரசு மருத்துவமனையும் பிடித்துள்ளது.  இதுகுறித்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது:ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் 12 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு, சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உள் நோயாளிகள் எண்ணிக்கையும், அறுவை சிகிச்சையும் அதிகரித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட உள் நோயாளிகள் எண்ணிக்கை 2,200ல் இருந்து தற்போது 3000ஆக அதிகரித்துள்ளது. உள்நோயாளிகளின் படுக்கை வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் அதிகபட்சமாக டிசம்பர் 4ம் தேதி ஒரு நாளில் மட்டும் 389 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 318 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 97 அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. 69 பெரிய அறுவை சிகிச்சைகளும், 28 சிறிய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டன. அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து உள்ளதால் தான் நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதேபோல் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மருத்துவ சேவையை மேலும் மேம்படுத்த விரும்புகிறோம். என்.என்.எஸ். தன்னார்வலர்கள் 50 பேருடன் நாங்கள் இந்த வாரத்தில் ஒரு மணிநேரம் வார்டுகளில் உள்ள மக்களின் உணர் திறனை அறிந்தோம். வார்டுகளுக்கு இடையே பாதையில் உணவு அருந்துதல், குப்பை வீசுதல், எச்சில் துப்புதல் போன்ற தவறான பழக்க வழக்கங்களை எடுத்துரைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்….

The post ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை சாதனை ஒரே நாளில் 97 அறுவை சிகிச்சை: செயல்பாடுகளில் முதலிடம் டீன் தேரணி ராஜன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Government Hospital ,Dean Terani Rajan ,Chennai ,Asia ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...