சென்னை: தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி, அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் ஆர்.என்.ரவி: தீமையை நன்மை வெற்றி கொள்வதை இந்த ‘தீபத் திருவிழா’ குறிப்பிடுகிறது. ஞானம், இரக்கம் மற்றும் நம்பிக்கையுடன் நம் இதயங்களை ஒளிரச் செய்வதில் இத்திருநாள் நமக்கு உள்ளூக்கம் அளிக்கிறது. ஒரே குடும்பமாக பண்டிகையை கொண்டாடி, நம் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் பசுமையான தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.*ஓ.பன்னீர் செல்வம்(அதிமுக ஒருங்கிணைப்பாளர்): இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும். வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும். அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகட்டும். *எடப்பாடி கே.பழனிசாமி(அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர்): மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட வேண்டும். அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள். *கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்): தீபாவளி திருநாள் ஒளி காட்டும் வகையில் அமைந்து, இந்திய மக்கள் அனைவருடைய வாழ்விலும் ஏற்றம் உண்டாக வேண்டும். தீப ஒளியில் ஏழைகளின் இன்முகம் ஒளிரட்டும். *ராமதாஸ்(பாமக நிறுவனர்): கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூகநீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்ட பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்.*ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்):சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் தீபாவளியில் தீப ஒளி ஏற்றுவதால் புதுப்பொலிவுடன், நல்வாழ்க்கை வாழ இறைவன் துணை நிற்க வேண்டி அனைவருக்கும் தீபாவளி பண்டிகை திருநாள் நல்வாழ்த்துகள்.*டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்): தீமைகள் எல்லாம் விலகி, நன்மைகள் பெரும் வெளிச்சமாக பரவட்டும், ஒவ்வொருவரிடமும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்கட்டும். *சரத்குமார்(சமக தலைவர்): மகிழ்ச்சி, மனிதநேயம் காப்பதாகவும், நமக்குள்ளே பிரிவினைகளும், பேதங்களுமற்ற சமத்துவ சமுதாயம் மலரச் செய்வதாகவும் அமையட்டும். *அன்புமணி (பாமக தலைவர்): மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும். அனைவருக்கும் தீப ஒளி வாழ்த்துகள். *வி.எம்.எஸ்.முஸ்தபா(தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர்): தீபஒளித் திருநாளில்,மக்கள் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகட்டும்.இதே போல காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், வி.கே.சசிகலா, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தேசிய முன்னேற்ற கழக தலைவர் ஜி.ஜி.சிவா உள்ளிட்ட தலைவர்களும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்….
The post இன்று தீபாவளி திருநாள் கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து appeared first on Dinakaran.
