×

சிறையில் இருக்கும் மாஜி மந்திரி சக கைதிகளிடம் புலம்பி வரும் ரகசியத்தை சொல்கிறார் wiki யானந்தா

‘‘மாஜி மில்க் மினிஸ்டர் சிறையில் எப்படி இருக்கிறாராம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இவர் பதவியில் இருந்தபோது இலை தலைமையை மீறி தாமரையை பாராட்டுவது, எதிர்கட்சிகளை வசைப்பாடுவது என்று நினைத்ததை மேடை பேச்சு, பத்திரிகையாளர் சந்திப்பு என்ற பெயரில் உளறி கொட்டினார். பின்னர் இலை தலைமை அவரின் பதவிக்கு ‘செக்’ வைத்த பிறகு சற்று அடக்கி வாசித்தார். பதவி போய், தேர்தலில் தோற்ற பிறகு அவரை பற்றி கிளம்பிய பிரச்னைகள் எக்கச்சக்கம். குறிப்பாக அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக, மாஜி மில்க் மந்திரி கைதானார். பிரச்னைக்கு இப்போது மலைக்கோட்டை மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயர்பாதுகாப்பு தொகுதி எண் 2ல் அறை எண் 4ல் அடைக்கப்பட்டுள்ள சர்வதேச சிலை கடத்தல் மன்னனுடன் மாஜி அமைச்சரும் அடைக்கப்பட்டுள்ளாராம். முதல் நாள் இலைகட்சியின் மாஜி அமைச்சர் சிறையில் அயர்ந்து தூங்கினாராம். பின்னர் தூக்கமின்றி தவித்தாராம். அப்போது இரவு நேரத்தில் சக கைதிகளிடம் புலம்பி தள்ளி விட்டாராம். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது சனி பகவான் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினேன். அப்போது உங்களுக்கு நேரம் சரியில்லை. வார்த்தைகளை விட வேண்டாம். அமைதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சிறை செல்ல நேரிடும் என எச்சரிக்கை மணி அடிச்சாங்க. ஆனால், நான் அவங்க எச்சரிக்கையை மீறி வார்த்தைகளை விட்ேடன். இப்போது சிறையில் இருப்பதற்கு என் வாய் தான் காரணம். நான் என் வாயாலே பேசி பேசி தான் கெட்டேன் என்று புலம்புகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘சேலம் மாஜி விவிஐபி வருத்தப்படும் அளவுக்கு என்ன நடந்ததாம்…’’ கேட்டு வைத்தார் பீட்டர் மாமா.‘‘சொந்த  ஊரான மாங்கனி மாவட்டத்தில் அடிக்கடி முகாமிடும் மாஜி விவிஐபி, இங்கு  வந்தால் மீடியாக்களை சந்திப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறாராம்.   அப்போது ஊடகங்கள் எங்களை குறித்து எந்த செய்தியும் போடுவதில்லை என்று  சொல்வதையும் ஒரு சம்பிரதாயமாகவே கடைபிடித்து வருகிறாராம். இப்படித்தான்  சமீபத்தில் மாவட்ட கட்சி ஆபீசுக்கு ஆலோசனைக்கு வந்த போதும் பிரஸ்மீட்  நடந்ததாம். வழக்கம் போல் மீடியாக்கள் எல்லோரும் ஆஜர் ஆனாங்களாம்.  அப்போதும் எங்களை பற்றியும், எங்கள் கட்சியை பற்றியும், கவர்மென்ட்டுக்கு  நாங்கள் சொல்லும் ஐடியாக்கள் பற்றியும் எந்த மீடியாவும் நியூஸ் போடுவதில்லை  என்று வருத்தப்பட்டாராம். அதற்கு ஒரு பத்திரிகையாளர் மாஜி மில்க் மந்திரி, பெல் அமைச்சர்களின் செய்திகளை, ரெய்டுகளை போட்டுக் கொண்டு தானே இருக்கிறோம் என்றாராம்… இதனால ஆடிப்போன சேலம் விவிஐபி வேறு மாதிரி சொல்லி சமாளித்தாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘இந்திர லோகத்து பெயரை கடைசியில் கொண்ட இலை கட்சியின் மாஜி பெண் மந்திரி ரொம்ப பிசி போல…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சிவகங்கை மாவட்டத்தில், ‘‘மரியாதையை குறிக்கும்’’ ஊரைச் சேர்ந்தவர் இலைக்கட்சியின் மாஜி பெண் மந்திரி. முன்பு எம்பியாக இருந்து, பிறகு தமிழகத் தலைநகரில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரியானார். இதன்பிறகு இருமுறை இதே பகுதியில் போட்டியிட்டும் தோல்வி கண்டார். தற்போது இலைக்கட்சியில் கழக அமைப்பில் பொறுப்பில் இருக்கிறார். தற்போது இலைக்கட்சி எதிர்கட்சியானதால், இவர் அடிக்கடி, தனது ‘‘மரியாதையில் துவங்கும் ஊருக்கு’’ வந்து செல்கிறாராம். தற்போது தனது ஊருக்கு திரும்பியுள்ள மாஜி பெண் மந்திரி, அவரது கணவர் நடத்தி வந்த ஓட்டலை புதுப்பித்து தற்போது இவரே கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறாராம். மேலும் சமீபத்தில் பிறந்த ஆங்கில புத்தாண்டில் அவரே வாடிக்கையாளர்களுக்கு ஓட்டலில் உணவு சப்ளை செய்தும், இனி ஓட்டல் தொழிலையே தொடர்வதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார். தேர்தல் தோல்விகளும், இலைக்கட்சியின் நிலையையும், கருத்தில் கொண்டு மாஜி பெண் மந்திரியானவர் எதிர்கால நடவடிக்கையில் இறங்கி விட்டார் என்று கட்சிக்காரர்களே பேசிக் கொள்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டு வாங்குவதில் கறாராக இருப்பது ஒரு பெண் அதிகாரியா…’’ அதிர்ச்சியை வெளிப்படுத்தி கேள்வி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல பெயருக்கு பின்னாடி பட்டுனு முடியுற ஊராட்சி ஒன்றியம் இருக்குது. இந்த ஒன்றியத்துல 113 சத்துணவு மையங்கள் இயங்கி வருது. பள்ளிகளுக்கெல்லாம் லீவு விட்டதனால, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, மாணவர்களுக்கு முட்டை, உலர்ந்த உணவுகளை கொடுக்கணும்னு அரசு உத்தரவிட்டிருந்தாங்க. ஆனா, இந்த ஒன்றியத்துல, சிவனோட மனைவி பெயரை கொண்ட பெண் அதிகாரி வட்டாரத்தோட வளர்ச்சி அலுவலராக இருக்காங்க. அவங்க, அந்த ஒன்றியத்துல இருக்குற சத்துணவு அமைப்பாளருங்களையும் அழைச்சி, நீங்கள் குழந்தைங்களுக்கு சரியா உணவுப்பொருட்களை வழங்கவே இல்ல, இதனால ஒரு மையத்துக்கு ஆயிரம் கொடுக்கணும்னு ஆர்டர் போட்டு வசூல் செஞ்சிருக்குறதாக புகார்கள் எழுந்திருக்கு. இதனால கடும் கோபமடைஞ்ச அமைப்பாளருங்க, பொங்கல் பண்டிகை முடிஞ்ச பின்னாடி அந்த பெண் அதிகாரிக்கு எதிராக தர்ணாவுல ஈடுபட முடிவு செஞ்சிருக்குறதாக பேச்சு அடிபடுது. அதுக்குள்ள மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய விசாரணை நடத்தி, தப்பு செஞ்சவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்னு கோரிக்கை எழுந்திருக்குது…’’ என்றார் விக்கியானந்தா….

The post சிறையில் இருக்கும் மாஜி மந்திரி சக கைதிகளிடம் புலம்பி வரும் ரகசியத்தை சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : maji minister ,Maji Milk Minster ,Peter ,Jailed ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...