×

சிறுவர்களை பாதுகாப்போம்

கொரோனாவிற்கு அடுத்தக்கட்டம் என ஒன்று இருந்தால், தடுப்பூசிக்கும் அடுத்தக்கட்டம் கண்டிப்பாக இருக்கும். ெகாரோனாவின் 2 அலைகளையும் எதிர் கொண்டு விட்ட இந்தியாவிற்கு, ஒமிக்ரான் புதியதொரு அச்சமாக உருவெடுக்கிறது. தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய ஒமிக்ரான், இப்போது இந்தியா உள்ளிட்ட 108 நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது 141 கோடிக்கும் மேல் தடுப்பூசி ேடாஸ்கள் போடப்பட்டு விட்டன. இந்தியாவில் இரு தவணை தடுப்பூசிகளை 61 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். 89 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.இருப்பினும் ஒமிக்ரானை எதிர்கொள்ளும் வகையில் பூஸ்டர் தடுப்பூசிகளும் அனைவருக்கும் அவசியமாக உள்ளது. 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு வரும் ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளன. இது ஒருபுறமிருக்க, இந்தியாவில் கொரோனா 2ம் கட்ட அலை தொடங்கிய நாளில் இருந்தே, தடுப்பூசி போடாத சிறுவர்கள் மீதான கவலை பெற்றோருக்கு அதிகளவில் உள்ளது. அதையும் தீர்க்கும் வகையில் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது.உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசியாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சைகோவ் டி தடுப்பூசிகள் 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. மாதம் ஒரு ேகாடி தடுப்பூசிகள் என இத்தகைய தடுப்பூசியை உற்பத்தி செய்து, சிறுவர்களுக்கு செலுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு கோடி ேடாஸ்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவாக்சினுக்கு அடுத்தபடியாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து என்ற பெருமையை கொண்ட இத்தடுப்பூசி, சிறுவர்களையும் கூட கொரோனா அச்சத்தில் இருந்து நிச்சயம் தடுக்கும். தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 33 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர். பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தியாவது இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உள்ளது.இதுபோல் பூஸ்டர் தடுப்பூசிகளும் தமிழகத்தில் ஒரு கோடியே 4 லட்சம் முதியவர்களுக்கும், 5 லட்சத்து 65 ஆயிரம் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களுக்கும், 9 லட்சத்து 78 ஆயிரம் முன்களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டும். இதற்கான முன்முயற்சிகளை தமிழக அரசு இப்போது எடுக்க தொடங்கிவிட்டது. கொரோனாவை தடுக்க மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி என பிரதமர் அறிவித்திருக்கும் நிலையில், அனைத்து மாநில அரசுகளும் அதை நன்கு உணர்ந்துள்ளன. எல்லா முயற்சிகளுக்கும் பெரிய இடையூறே தயக்கம்தான். அதனால்தான் இன்னும் பல லட்சம் பேர் முறையாக தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டாமல் தவிர்த்து வருகின்றனர். தயக்கம் தவிர்ப்போம், குழந்தைகளையும், சிறுவர்களையும் காக்கும் தடுப்பூசியை பயன்படுத்தி, இளைய தலைமுறையை கொடிய நோயில் இருந்து காப்போம்….

The post சிறுவர்களை பாதுகாப்போம் appeared first on Dinakaran.

Tags : 2 waves of Carona ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...