×

சேப்பாக்கம் புதிய அரசினர் விருந்தினர் மாளிகையில் நாவலர் நெடுஞ்செழியன் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: நூலுரிமை தொகையினை குடும்பத்தினரிடம் வழங்கினார்

சென்னை: நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில்  அமைக்கப்பட்டுள்ள நாவலர் நெடுஞ்செழியன் திருவுருவச் சிலையினை முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நாவலர் நெடுஞ்செழியன் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் 1920ம் ஆண்டு பிறந்தார். தமிழ்மொழி மீது கொண்டிருந்த அளவற்றப் பற்றின் காரணமாக, நாராயணசாமி என்கின்ற தனது பெயரினை நெடுஞ்செழியன் என்று மாற்றிக் கொண்டார். அன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவி வந்த அவலங்களையும், அநியாயங்களையும் தைரியத்தோடு தட்டிக் கேட்ட தந்தை பெரியாரின் பால் ஈர்க்கப்பட்டு, 1944ம் ஆண்டு தந்தை பெரியாருடன் திராவிட இயக்கத்தில், இளமைக் காலத்திலேயே தன்னுடைய 24ம் வயதில் இணைத்துக் கொண்டார்.நாவலர் நெடுஞ்செழியன் மொழி அறிவும், அசாத்திய பேச்சாற்றலும், சமுதாய நலனும், விடாத சுயமரியாதையும், பகுத்தறிவும் கொண்டு, தான் கொண்டிருந்த கொள்கையில், லட்சியத்தில் இறுதிவரையில் உறுதிகாத்து, அயராது மக்கள் பணியாற்றியதன் காரணமாக, பெரியாரிடமும், அண்ணாவிடமும் மிகுந்த நன்மதிப்பினைப் பெற்றதோடு, மிகவும் குறுகிய காலத்தில் இயக்கத்தின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து, உச்சம் தொட்டார். கதைகள், கட்டுரைகளோடு 30க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். தான் வாழ்கின்ற காலம் வரையில், தான் கொண்டிருந்த பகுத்தறிவுக் கொள்கையை உயிர்போல் காத்து வந்தவர்.முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘‘திராவிட இயக்கத்தின் சொல்லோவியம் – நடமாடும் பல்கலைக்கழகம் நாவலரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை அறிவு சார்ந்த தமிழ் உலகமும், திராவிட இயக்கத்தின் தொண்டர்களும் கொண்டாடி மகிழ்வோம்” என அறிவித்திருந்தார். மேலும், கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போது நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் சிலை அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் நாவலர் நெடுஞ்செழியனின் மார்பளவு சிலை அமைக்கும் பணி நடைபெற்று முழுமையாக முடிவு பெற்றது.இந்தநிலையில், நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் நெடுஞ்செழியன் திருவுருவச் சிலையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சிலை முன்பாக குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதையடுத்து, நாட்டுடமையாக்கப்பட்டுள்ள நாவலர் நெடுஞ்செழியனின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையினை அவரின் குடும்பத்தினருக்கு வழங்கிச் சிறப்பித்தார். அப்போது, நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய திருக்குறள் தெளிவுரை என்ற நூலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கையெழுத்திட்டு குடும்பத்தாருக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், நாவலர் நெடுஞ்செழியனின் வாழ்க்கை வரலாறு, அரசியல் நடவடிக்கைகள், போராட்டம் ஆகியவை தொகுக்கப்பட்ட குறும்படமும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். …

The post சேப்பாக்கம் புதிய அரசினர் விருந்தினர் மாளிகையில் நாவலர் நெடுஞ்செழியன் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: நூலுரிமை தொகையினை குடும்பத்தினரிடம் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Nedunjezhiyan ,new government ,Chepakkam ,Chennai ,Novelist ,Nedunchezhiyan ,Tamil Nadu government ,Chepakkam New Government Guest House ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...