×

ஒமிக்ரான் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒமிக்ரான் பரவலைத் தடுக்க, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் இதர துறைகளுடன் இணைந்து எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தினை நேற்று பார்வையிட்டார். தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அவசரகால ஆக்சிஜன் சிலிண்டர் சேமிப்புக் கிடங்கினையும், உயிர் காக்கும் அவசர சிகிச்சை உபகரணங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களையும் பார்வையிட்டார்.அதனை தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசர கால அழைப்பு நிலையம், அவசரகால கட்டுப்பாட்டு அறை மற்றும் மாநில கட்டளை மையத்தையும்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேவையான அறிவுரைகளை வழங்கி இவ்வளாகத்தில் செயல்பட்டு வரும் 24 மணிநேர கொரோனா தடுப்பூசி மையத்தினையும் ஆய்வு செய்தார். ஒமிக்ரான் வகை கொரோனா நோய்தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார்  மருத்துவமனைகளில் 1.15லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தற்காலிக கோவிட் சிறப்பு மையங்களில் தேவைக்கேற்ப 50,000  படுக்கைகள் வரை ஏற்படுத்த ஆணை வழங்கப்பட்டு அவற்றை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் இன்றைய தேதியில் கூடுதலாக நாள்தோறும் 244 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும் திரவ ஆக்ஸிஜன் இருப்பு வைக்கும் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு, 1,731 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் சேமித்து வைக்க வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 17,940 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் 167 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இவை தவிர சுமார் 25,000 பி மற்றும் டி வகை ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் தயார் நிலையில் உள்ளன. ஒமிக்ரான் வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் ஒன்றிய அரசு வழிகாட்டுதலின்படி ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் அனைத்து தேவையான கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.மேலும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், நாள்தோறும் வெளிநாட்டு பயணிகள் வருகை மற்றும் ஒமிக்ரான் குறித்த விவரங்களை தினசரி அறிக்கையில் கூடுதலாக வெளியிட முதல்வர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் நா.எழிலன், கே.கணபதி,  மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சிறப்புப் பணி அலுவலர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் தாரேஸ் அகமது, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயம், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்….

The post ஒமிக்ரான் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Stalin ,Chennai ,Chief Minister of the ,CM ,G.K. Stalin ,B.C. ,
× RELATED மே தினத்தை ஒட்டி முதலமைச்சர்...