×

விடுமுறை, போராட்டம் எதிரொலி ஏடிஎம்களில் பணம் காலி வங்கிகள் இரண்டு நாள் ஸ்டிரைக்: கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை முடங்கும்

சென்னை: வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்குவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு வங்கி சேவைகள் முடங்கும் நிலைஏற்பட்டுள்ளது. பொதுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 2 வங்கிகள், ஒரு இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவற்றை மத்திய அரசு தற்போது தனியாரிடம் வழங்க முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே சில வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பொதுத்துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்களை தனியாரிடம் கொடுப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், வங்கி ஊழியர் சங்கங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கிராம வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே சனி, ஞாயிறு விடுமுறை தினங்களை சேர்த்தால், தொடர்ந்து தேசிய வங்கிகளின் செயல்பாடு நான்கு நாட்கள் முடங்கும் ஆபத்து உள்ளது.இந்த வேலை நிறுத்தம் குறித்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் தெரிவித்துள்ள கருத்தில், ‘‘மத்திய அரசு மற்ற துறைகளை தனியார் மயமாக்குவது போல வங்கிகளையும் தனியாரிடம் தாரைவார்க்க முடிவு செய்துள்ளது. வாராக் கடன்களை காரணம் காட்டி மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறுகிறது. வாராக் கடன்களை வசூல் செய்வது மத்திய அரசின் கடமையாக இருக்கும்போது, வங்கிகளை தனியாரிடம் ஒப்படைத்தால் எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கான கடன்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். அதனால் அவர்கள் தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படும். மேலும் வங்கிகளை தனியார் மயமாக்கினால் பல வங்கிகள் திவாலாகும் நிலைஏற்படும். மத்திய அரசின் இந்த தவறான முடிவை எதிர்த்தும் கண்டித்தும் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தியாக முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் வங்கிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரம் வங்கிகள் செயல்படுகின்றன. மேலும் 700 கிராம வங்கிகள் செயல்படுகின்றன. இந்த வங்கிகள் அனைத்திலும் பணியாற்றும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இன்றும் நாளையும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் 99 சதவீத வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். இதனால் பணப்பரிவர்த்தனை முதல் அனைத்து வங்கிக் பணிகளும் முடங்கும். ஏற்கனவே சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலேயே ஏடிஎம்களில் பணம் காலியாகிவிட்டது. 2000 அல்லது 500 மட்டுமே சிலவற்றில் கிடைக்கிறது. மேலும், இரண்டு நாட்களுக்கு ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பது பொதுமக்களுக்கு சிரமமாக இருக்கும். அதேபோல நெட்பேங்கிங், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் இன்று காலை வள்ளுவர்கோட்டம் பகுதியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அந்தந்த மாவட்டங்களிலும் வங்கி ஊழியர்–்கள் இன்று ஆர்ப்பாட்ட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் வங்கிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. …

The post விடுமுறை, போராட்டம் எதிரொலி ஏடிஎம்களில் பணம் காலி வங்கிகள் இரண்டு நாள் ஸ்டிரைக்: கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை முடங்கும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,central government ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...