×

ஒரே ஊரு… ஒரே பேரு… 400 பேருக்கு ‘ஒரே பெயர்’-வத்தலக்குண்டு அருகே விநோத கிராமம்

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் ஆயிரம் பேரில் சுமார் 400 பேருக்கு ஒரே பெயர் வைக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ளது காமாட்சிபுரம் கிராமம். இங்கு 250 வீடுகள் உள்ளன. சுமார் ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு புகழ்பெற்ற சென்ராய பெருமாள் கோயில் உள்ளது. இதையே இவ்வூர் மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இவ்வூர் இளைஞர்களின் தேவராட்டம் புகழ்பெற்றதாகும். இவர்கள் தமிழகம் முழுவதும் சென்று நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். இவ்வூரின் சிறப்பு ஆட்டத்தில் மட்டுமல்ல… வைக்கும் பெயரிலும் தான்.இவ்வூரில் வசிக்கும் ஆயிரம் பேரில் சுமார் 400 பேருக்கு சென்னமுத்து என்ற பெயரே உள்ளது. திருப்பதியில் மொட்டை என்று கூப்பிட்டால் எப்படி பலர் திரும்பி பார்ப்பார்களோ, அதேபோல இந்த கிராமத்தில் சென்னமுத்து என்று கூப்பிட்டால் பலரும் திரும்பி பார்க்கின்றனர். குலசாமியின் பெயரை வைக்க வேண்டும் என்பதற்காக தங்களது குடும்பத்தில் பிறக்கும் முதல் குழந்தைக்கு சென்னமுத்து என்ற பெயர் இடுகின்றனர். பிறகு அவர்கள் செய்யும் தொழிலை பொறுத்து பால்கார சென்னமுத்து, டீக்கடை சென்னமுத்து, கொத்தனார் சென்னமுத்து என்று இணைத்து வேறுபடுத்தி கூப்பிடுகிறார்களாம்.இதுகுறித்து கோயில் பூசாரி சென்னமநாயக்கர் கூறுகையில், ‘‘முன்பெல்லாம் ஊரில் பாதிக்கு மேல் சென்னமுத்து என்ற பெயர் வைத்திருந்தனர். தற்போது சற்று குறைந்துள்ளது. எனினும் எங்கள் ஊருக்கு வருகிறவர்கள் இந்த பெயர் பற்றி ஆச்சரியமாக பேசி வருகின்றனர்’’ என்றார்….

The post ஒரே ஊரு… ஒரே பேரு… 400 பேருக்கு ‘ஒரே பெயர்’-வத்தலக்குண்டு அருகே விநோத கிராமம் appeared first on Dinakaran.

Tags : Vinotha village ,Wattalakundu ,Vatthalakundu ,Vinota ,
× RELATED வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு