புதுடெல்லி: அடுத்தாண்டு ெதாடக்கத்தில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில கொரோனா அப்டேட்கள் முறையாக பதிவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், தலைவர்கள் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் குறித்த அச்சம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 83 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஆனால், அடுத்தாண்டு தொடக்கத்தில் (ஜனவரி) உத்திரபிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் பேரவை ேதர்தலுக்கான அட்டவணை வெளியாக உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. கட்சித் தலைவர்களும் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். கொரோனா, ஒமிக்ரான் பரவலுக்கு மத்தியில் தலைவர்களின் பிரசாரம் நடப்பதால், மேற்கண்ட மாநிலங்களில் தொற்று பரவல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தினமும் ஒவ்வொரு மாநில, யூனியன் பிரதேச சுகாதாரத் துறையின் சார்பில் கொரோனா பாதிப்பு, தடுப்பூசி போடப்பட்டது தொடர்பான புள்ளி விபரங்கள் ஒன்றிய சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், கடந்த அக்டோபர் 30ம் தேதிக்குப் பிந்தைய தரவுகளை பதிவு செய்யப்படாத மாநிலங்கள் பட்டியலில் 4 மாநிலங்கள் உள்ளன. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசமும் அடங்கும். சமீபத்தில் காசி விஸ்வநாதர் நடைபாதை திறப்பு விழாவின் போது ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமர் மோடியின் உரையை கேட்க திரண்டனர். மறுபுறம், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, கோவாவில் பேரணியை நடத்தினார். பஞ்சாபில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பிரசாரம் செய்தார். பஞ்சாப்பில் கடந்த நவம்பர் 1ம் தேதிக்குப் பிறகு, நவ. 10, நவ. 15ம் தேதி மட்டுமெ புள்ளிவிபரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அதன்பின் எவ்வித பதிவும் செய்யப்படவில்லை. உத்தரகாண்ட் மாநிலத்தில் நவ. 5ம் தேதிக்குப் பிறகு ஒரு சில நாட்கள் மட்டுமே தரவுகள் பதிவேற்றப்பட்டுள்ளது. இதேபோல், மணிப்பூர், மத்தியபிரதேச மாநிலங்களிலும் அன்றாட தரவுகள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இம்மாத இறுதிக்குள் உத்தர பிரதேசத்தில் 6 பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி தலைமையில் 4 பேரணிகள் நடைபெற உள்ளன. சமாஜ்வாடி கட்சியும் மேற்கு உத்தரபிரதேசத்தில் பேரணிகளை நடத்தி வருகிறது. கடந்த மே மாதம் பிரதமர் மோடி பேசுகையில், ‘ஒரு நாளைக்கு 40 முதல் 45 லட்சம் தினசரி பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்’ என்ற கூறினார். ஆனால் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் செப்டம்பர் 15 அன்று 16 லட்சம், டிசம்பர் 15 அன்று 11.84 லட்சம், அக்டோபர் 6ம் தேதி 12 லட்சம் என்ற அளவிலேயே பரிசோதிக்கப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாவது அலையால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததற்கு காரணமாக மேற்குவங்கம், கேரளா, அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநில மற்றும் யூனியன் பிரேதேசத்தில் நடந்த தேர்தல் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போதைய ஒமிக்ரான் பரவல் அச்சத்துக்கு மத்தியில், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. அதேநேரம் தலைவர்களின் பிரசாரமும் சூடுபிடித்து வருகிறது….
The post வரிசைகட்டி பிரசாரம் செய்யும் மோடி, பிரியங்கா, அகிலேஷ்; தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் ‘நோ கொரோனா அப்டேட்’..! ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் தரவுகள் மறைக்கப்படுவதாக புகார் appeared first on Dinakaran.