×

சிலம்பம் கற்கும் திருநங்கைகள்-விளையாட்டு துறையில் சேர்க்க வேண்டுகோள்

பெ.நா.பாளையம் : பிறப்பால் ஆணாக பிறந்து தன்னை பெண்ணாக உணர்ந்து பெண்ணாக வாழ முற்படுவோர்களை ட்ரான்ஸ் ஜெண்டர் அல்லது திருநங்கைகள் என்கிறோம். உலகில் அனைத்து துறைகளிலும் ஆண், பெண் என்பதுடன் மூன்றாம் பாலினம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது.இதன் மூலம் திருநங்கைகள் பலர் இன்று ஓட்டுநர், காவலர், அரசியல்வாதி என பல துறைகளிலும் கால்பதித்து தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.இருந்தபோதும் இதுவரை விளையாட்டுத் துறையில் ஆண்கள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு என இருக்கும் நிலையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என தனிப்பிரிவு ஏற்படுத்தப் படவில்லை. இதன் காரணமாக, திறமை இருந்தும் திருநங்கைகள் விளையாட்டுத் துறையில் கால்பதிக்க முடியாமல் உள்ளனர்.இதன் முன்னெடுப்பாக கோவையில் விளையாட்டு துறையில் பயிற்சியாளர்களாக இருக்கும் பெண்கள் இணைந்து உருவாக்கியுள்ள மங்கையானவன் தொண்டு நிறுவனம் திருநங்கைகளை ஒன்றிணைத்து அவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து தனியாக விளையாட்டுகளை நடத்தி வருகிறது.முதல் கட்டமாக, கடந்த மகளிர் தினத்தில் திருநங்கைகளுக்கு இடையேயான த்ரோ பால் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி உள்ளனர். இதில், ஆர்வமுடன் பல திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர்.இதைத்தொடர்ந்து, விளையாட்டுத் துறையில் இவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை அடுத்து தனிப்பிரிவை உருவாக்கும் நோக்கிலும் கோவையைச் சேர்ந்த ப்ரீக் பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து திருநங்கைகளுக்கு பல்வேறு விளையாட்டுகளில் இலவசமாக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.இதன்மூலம், வரும் காலங்களில் மூன்றாம் பாலினத்தவர்களும் விளையாட்டுத் துறையில் தனிப்பிரிவை உருவாக்க முடியும் என நம்புகின்றனர்.இதில், முதல் விளையாட்டாக தமிழ்நாட்டின் பாரம்பரிய பாதுகாப்பு கலையான சிலம்பம் கலையை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிற்சி தொடங்கி உள்ளது. கோவை தொப்பம்பட்டியில் இவர்களுக்கான பயிற்சி நடந்து வருகிறது. திருநங்கைகள் தங்களுக்கு கலையை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு குருதட்சணை வழங்கி பயிற்சி பள்ளியில் இணைந்துகொண்டனர்.முதல் கட்டமாக 25 திருநங்கைகள் இப்பயிற்சியில் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு சிலம்ப பயிற்சியாளர்கள் பயிற்சிகளை வழங்கினர்.இதுகுறித்து பேசிய மங்கையானவன் தொண்டு நிறுவன நிர்வாகி ஜமுனா கூறுகையில்,`திருநங்கைகள் வந்து அவர்களின் திறமைகளை நிரூபிக்க வேண்டும்,  விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள திருநங்கைகள் தங்களை அணுகலாம். அனைத்து உதவிகளும் செய்யப்படும்’ என்றார். ப்ரீக் பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் பிரபு கூறுகையில்,`விளையாட்டு துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் அரசு வழங்கும் ஒதுக்கீடு இவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உருவாகும். மேலும், உலக சிலம்பம் விளையாட்டு அசோசியேஷன் மூலம் வரும் ஆண்டுகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என தனிப் பிரிவு உருவாக்கி போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், நம்மைப் போலவே அவர்களும் சுதந்திரமாக வாழ முடியும் என தெரிவித்தார்.சிலம்பம் கற்றுக்கொள்ளும் திருநங்கைகள் கூறுகையில்,`தமிழகத்தில் முதன் முறையாக விளையாட்டுத் துறையில் கால்பதித்துள்ளதாகவும், ஆண், பெண் மட்டுமே உள்ள இந்த விளையாட்டு துறையில் மூன்றாம் பாலினமான தங்களையும் சேர்க்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளோம்’ என்றனர்….

The post சிலம்பம் கற்கும் திருநங்கைகள்-விளையாட்டு துறையில் சேர்க்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : B.N.Palayam ,
× RELATED திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபட...