சிங்கம்புணரி : திண்டுக்கல் மாவட்டம் முதிமலை, அய்யலூர், கோடாங்கி குட்டு மற்றும் கரந்தமலை ஆகிய மலைப்பகுதியில் இருந்து செந்துறை கிராமத்தில் பாலாறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பகுதிகளில் செல்கிறது. இதேபோல் நத்தம் முளையூர் மலைப்பகுதியில் இருந்து உப்பாறு உற்பத்தியாகி மதுரை மாவட்டம் வழியாக சிங்கம்புணரி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தின் எல்லையான சிங்கம்புணரி வட்டத்தில் ஆறு அணைக்கட்டுகள் மற்றும் ஆறு தடுப்பணைகள் உள்ளன. இதன் மூலம் 100 கண்மாய்கள் நிரம்பி 1803 ஹெக்டர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் 31 கண்மாய்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும் 69 கண்மாய்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மழை இல்லாததால் உப்பாறு, பாலாற்றில் தண்ணீர் வரத்து இல்லை. இதனால் நீர்வழிப் பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்து விவசாயப் பணிகளில் செய்வதும் மற்றும் ஆற்றோரங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும் போது நீர்வழிப் பாதை மாறி ஊருக்குள் வரும் நிலை உள்ளது.மேலும் அணைக்கரைப்பட்டி, காளாப்பூர் ஆத்தங்கரைப்பட்டி, தரைப்பாலம் பகுதிகளில் வெள்ள காலங்களில் பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக அமைக்க மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் கிருங்காக் கோட்டை பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து கடந்த மே மாதம் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணியை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்பகுதியில் தற்போது தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பாலாற்றில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக, தண்ணீர் வரத்து உள்ளதால் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் பெரும்பாலான சிறு கண்மாய்கள் நிறைந்தும் பெரிய கண்மாய்களில் பாதி அளவில் மட்டுமே தண்ணீர் உள்ளது. கண்மாய்களில் மடைகள் பராமரிப்பின்றி உடைந்து உள்ளதால் தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் நல்ல மழை பெய்ததால் ஆற்றில் தண்ணீர் வரத்து உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்தில் இருந்தது. இதனால் பெரும்பாலான போர்கள் வேலை செய்யாமல் பயனற்று இருந்தது. இதேபோல் கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. தற்போது தடுப்பணைகள் மற்றும் ஆற்று தண்ணீர் வரத்து காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் போர்கள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் ஊற்றெடுத்துள்ளது. பாலாறு பகுதியில் உள்ள கண்மாய்களில் பெரும்பாலான கண்மாய்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ளது. பெரிய கண்மாய்கள் மட்டும் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் கண்மாய் பராமரிப்பு பணி சரிவர செய்ய முடியாத நிலை உள்ளது. ஆற்றுப் பாசனம் உள்ள கண்மாய்களை பொதுப்பணித்துறை நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை கொடுத்துள்ளனர்….
The post பாலாறு, உப்பாறுகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.