×

சாயல்குடி சாலையில் மலட்டாறு அருகே குழாய் உடைந்து வீணாகும் காவிரி கூட்டுக்குடிநீர்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சாயல்குடி : கடலாடி – சாயல்குடி சாலையிலுள்ள மலட்டாறு முக்குரோடு அருகே காவிரி கூட்டுகுடிநீர் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் கிராமங்களுக்கு செல்லும் தண்ணீர் குறைவதால், குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீர் ராட்சத குழாய்கள் வாயிலாக புதுக்கோட்டை, சிவகங்கை வழித்தடத்தில் வந்து கொண்டிருக்கிறது. மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, ஆர்.எஸ்.மங்கலம், போகலூர், நயினார்கோயில் உள்ளிட்ட 11 யூனியன்களிலுள்ள சுமார் 2,300க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நாள்தோறும் 100 எம்எல்டி தண்ணீர் தடையின்றி விநியோகம் நடந்து வந்தது.இந்தநிலையில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களை முறையாக பராமரிக்கவில்லை. இதனால் ஆங்காங்கே குழாய் சேதம், முறைகேடான இணைப்பு போன்ற காரணங்களால் தற்போது 75 எம்எல்டிக்கு கீழான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக குழாய்கள், சேதங்கள் சீரமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யும் பணி சீராக நடந்து வருகிறது.இதற்கிடையில் மாவட்டத்தின் சில இடங்களில் இந்த குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு காட்டுப்பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருகிறது. இதன்படி கடலாடியிலிருந்து சாயல்குடி செல்லும் சாலையிலுள்ள மலட்டாறு முக்குரோடு அருகே சாலையோரம் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த 2 நாட்களாக தண்ணீர் வீணாக ஓடி வருவதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.இதனால் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சீரமைத்து அனைத்து கிராமங்களுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post சாயல்குடி சாலையில் மலட்டாறு அருகே குழாய் உடைந்து வீணாகும் காவிரி கூட்டுக்குடிநீர்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Malattaru ,Sayalkudi road ,Chayalgudi ,Cudaladi-Chayalgudi road ,
× RELATED வரலாறு காணாத வெயில்!: நீர்வரத்தின்றி...