×

மாவு பூச்சியை கட்டுப்படுத்த மரவள்ளி வயலில் புதிய ரக ஒட்டுண்ணி-அதிகாரிகள் செயல்விளக்கம்

சேந்தமங்கலம் : சேந்தமங்கலம் வட்டாரம் பேளுக்குறிச்சியில், மரவள்ளி பயிரில் மாவு பூச்சி தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாமகிரிப்பேட்டை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சேரலாதன், சேந்தமங்கலம் தோட்டக்கலை அலுவலர் அதியமான், உதவி அலுவலர் ரஞ்சித், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய அலுவலர்கள் அடங்கிய குழுவினர், பேளுக்குறிச்சி பகுதியில் மரவள்ளி பயிரிடப்பட்டுள்ள விவசாயத் தோட்டத்தில் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதையடுத்து மாவு பூச்சியை அழிக்கக் கூடிய அனகைரஸ் லோபெஸி ஒட்டுண்ணி, மரவள்ளி வயலில் விடப்பட்டது. இதுகுறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி நடந்தது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மரவள்ளி பயிரில் மாவு பூச்சியை அழிக்க, அனகைரஸ்  லோபெஸி என்னும் புதிய ரக ஒட்டுண்ணி, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் நாட்டிலிருந்து இறக்குமதி செய்து, நமது நாட்டில் இனப்பெருக்கம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாவு பூச்சி தாக்கிய வயலில், நைலான் இழை கொண்டு கூடாரம் அமைக்க வேண்டும். கூடாரத்துக்குள் அனகைரஸ்  லோபெஸி ஒட்டுண்ணியை விட வேண்டும். ஒட்டுண்ணிகளின் உணவுக்காக கூடாரத்துக்குள் தேன் நனைத்த பஞ்சை ஆங்காங்கே தொங்கவிட வேண்டும். இதன் மூலம் ஒட்டுண்ணியின் திறன் அதிகரிக்கும். வளர்ச்சி அடைந்த பெண் மாவு பூச்சியை தேடிச் சென்று, அவற்றின் உடலில் மீது முட்டையிடும் ஒட்டுண்ணி விட்ட முட்டை, 18 அல்லது 20 நாட்களில் அடுத்த தலைமுறை ஒட்டுண்ணியை உருவாகி இனப்பெருக்கம் செய்து, மாவு பூச்சியை படிப்படியாக கட்டுப்படுத்தும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post மாவு பூச்சியை கட்டுப்படுத்த மரவள்ளி வயலில் புதிய ரக ஒட்டுண்ணி-அதிகாரிகள் செயல்விளக்கம் appeared first on Dinakaran.

Tags : cassava ,Paleukurichi, Shendamangalam district ,Namagrippet ,Dinakaraan ,
× RELATED மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வு